அபூ அதீபா
சூரியனை மையமாகக் கொண்டு அனைத்துக் கோள்களும் சுற்றுகின்றன என்ற சூரிய மையக் கோட்பாட்டை விஞ்ஞான ரீதியில் உலகிற்கு முதலில் கூறியவர் கலிலியோ என்ற அறிஞர் ஆவார். இவர் இத்தாலியில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ல் பிறந்தார்.
அதே பிப்ரவரி 15, 2015 ஆம் நாளில் துபாய் சார்ஜாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சவூதி அரேபிய அறிஞர் "பன்தர் அல்ஹைபரி'' அவர்களிடம் பூமி சுற்றுகிறதா? அல்லது நிலையாக நிற்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், பூமி சுற்றவில்லை. நிலையாகத்தான் நிற்கிறது என்பதற்கு சில குர்ஆன் வசனங்கள் மற்றும் ஒரு ஹதீஸை அடிப்படையாக வைத்துப் பதிலளித்தார்.
இந்தப் பதில் உலகம் முழுவதும் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சவூதி அரேபிய அறிஞரின் பதில், நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு எதிரானது இஸ்லாம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூமி சுற்றவில்லை என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறதா? அதற்குச் சான்றாக சவூதி அரேபிய அறிஞர் எடுத்து வைக்கும் சான்றுகள் சரியானவையா? என்று அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
பூமி சுற்றுகிறதா? நிலையாக உள்ளதா?
பூமி சுற்றுகிறதா? நிலையாக உள்ளதா? என்ற கேள்விக்கு சவூதி அறிஞர் அளித்த பதிலின் சாராம்சத்தைக் காண்போம்.
அறிஞர்களான அப்துல் அஸீஸ் பின் பாஸ், ஸாலிஹ் அல் ஃபவ்சான் ஆகியோர் பூமி நிலையாக நிற்கிறது. அது இடம் பெயரவில்லை என்ற கருத்தில்தான் உள்ளனர். இதுதான் குர்ஆன், ஹதீஸ் சான்றுகளின் அடிப்படையிலும், அறிவின் அடிப்படையிலும் முற்றிலும் சரியானதாகும்.
ஆனால் சிலர் பின்பாஸ், ஸாலிஹ் அல்ஃபவ்சான் போன்ற அறிஞர்களின் இந்த மார்க்கத் தீர்ப்பைக் கேலி செய்கின்றனர். கேலி செய்யும் அவர்கள் அறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவர்கள். எனவே அவர்களின் கருத்துக்களை நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை.
பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க (அல்குர்ஆன் 16 : 15) என்ற வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் போன்று பூமி அசையாமல்தான் உள்ளது.
பின்வரும் வசனங்களின் அடிப்படையில் சூரியன்தான் சுற்றக் கூடியதாகும்.
சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது
(அல்குர்ஆன் 36 : 38)
சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.
(அல்குர்ஆன் 21 : 33)
இபுறாஹிம் நபி கூறியதாக அல்லாஹ் கூறுகிறான் :
"அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார்
(அல்குர்ஆன் 2 : 258)
மேற்கண்ட வசனங்களிலிருந்து சூரியன்தான் சுற்றுகிறது என்பதை அல்லாஹ் அறிவிக்கின்றான்.
பூமி சுற்றவில்லை என்பதற்கு நமக்கு அறிவு ரீதியிலான சான்றுகளும் உள்ளன.
(இதற்குச் சான்றாக தண்ணீர் நிரப்பப்பட்டு மூடப்பட்ட கப் ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டு விளக்கம் அளித்தார். எடுத்துக்காட்டாக) நாம் அனைவரும் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் சீனா செல்வதாக வைத்து கொள்வோம் எனக் கூறிய அவர், அப்போது நடுவானில் விமானம் நிறுத்தப்பட்டால், பூமி தன்னைத்தானே சுற்றி வருகிறது என்ற கூற்றின்படி, சீனா தானாகவே நம்மை நோக்கி வர வேண்டும் என்று தெரிவித்தார். எதிர்த் திசையில் பூமி சுழல்வதாக இருந்தால் விமானம் சீனாவைச் சென்றடைய முடியாது. ஏனென்றால் விமானம் செல்லும் போது சீனாவும் சுழல்கிறதே என்று விளக்கம் அளித்தார்.
பூமி சுற்றவில்லை என்பதற்கு மற்றொரு ஆதாரம்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பைதுல் மஃமூர் என்பது ஏழாவது வானத்தில் உள்ளது. அது கஅபாவிற்கு நேராக மேலே உள்ளது. அது கீழே விழுகின்றது என்று வைத்துக் கொண்டால் கஅபாவின் மீதுதான் விழும். (ஹதீஸ்)
இப்போது பைத்துல் மஃமூர் விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். பூமி சுற்றினால் அது கஅபாவின் மீது விழாது. மாறாக கடலிலோ, அல்லது தரையிலோ விழும்.
இதிலிருந்தும் பூமி சுற்றவில்லை, நிலையாகத்தான் உள்ளது என்பது தெளிவாகிறது.
யாராவது ஒருவர் எதையாவது சொன்னால் அதனை நாம் நம்பி விடுகிறோம். இதனால்தான் மேற்கத்தியர்கள் "நாங்கள் சந்திரனுக்குச் சென்றுவிட்டோம்'' என்கிறார்கள். நாம் அதை உண்மை என்று நம்பி அவர்களுக்குப் பின்னால் செல்கின்றோம்.
ஆனால் அவர்கள் சந்திரனுக்குச் செல்லவுமில்லை, சந்திரனைப் பார்க்கவுமில்லை. எதையுமே பார்க்கவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் சந்திரனுக்குச் சென்றதைப் போன்ற "ஹாலிவுட்'' திரைப்படத்தைத் தான். அதைப் பார்த்து விட்டு அவர்களை நாம் உண்மைப்படுத்துகின்றோம்.
இதுதான் அந்த அறிஞர் அளித்த பதிலின் முழுமையான சாராம்சம் ஆகும்.
தவறான ஆதாரங்களை முன்வைத்த அறிஞர்
சவூதி அரேபிய அறிஞர் எடுத்து வைத்த எந்தச் சான்றிலும் பூமி சுற்றவில்லை என்ற கருத்து இல்லவே இல்லை.
பூமி அசையாமல் இருக்கிறது என்பதற்கு 16:15 வசனத்தை எடுத்துக் கூறுகிறார். அந்த வசனத்தின் முழுமையான கருத்தைக் காண்போம்.
பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும், நீங்கள் வழியறிவதற்காக பல பாதைகளையும், நதிகளையும், பல அடையாளங்களையும் அவன் அமைத்தான்
(அல்குர்ஆன் 16 : 15)
மேற்கண்ட வசனத்தில் "பூமி அசையாமல் இருக்கிறது'' என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மாறாக "மனிதர்களை பூமி அசைத்து விடாமல் இருப்பதற்காக அதில் மலைகளை முளைகளாக அமைத்தான்'' என்றுதான் குறிப்பிட்டுள்ளான்.
விமானம் மேலே ஏறும் போதும் இறங்க்கும் போதும் விமானப்பயணிகள் அதிர்வை உணர்வார்கள். ஆனால் அது சீராகப் பயணிக்கும் போது எவ்வித அசைவும் இல்லாமல் செல்லும். 500 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் அது நமக்குத் தெரியாது. இதனால் விமானம் நகரவில்லை என்று யாரும் கூற மாட்டார்கள்.
அது போன்றுதான் அல்லாஹ் பூமியைப் பற்றி மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.
ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப்படுவதே முளைகளாகும்.
இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.
வேகமாகப் பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.
இந்த நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள்; கட்டடங்கள் நொறுங்கி விடும்.
இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப்பட வேண்டும். இதற்காகவே மலைகள் உருவாக்கப்பட்டன என்று இவ்வசனங்கள் கூறுகின்றன
பூமியின் மேலே நாம் பார்க்கும் மலைகளின் உயரத்தை விட அதிக அளவு ஆழத்தில் பூமிக்கு அடியிலும் மலைகள் அறையப்பட்டுள்ளன.
ஆங்காங்கே இவ்வளவு ஆழமாக நிறுவப்பட்டுள்ள மலைகளின் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் இணைந்து சுழல முடிகிறது.
பூமி அசையாமல் இருக்கிறது என்பதற்கு எந்த வசனத்தைக் அந்த அறிஞர் எடுத்துக் காட்டுகிறாரோ அந்த வசனம்தான் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது என்றும், பூமி சுற்றும் போது அது மனிதர்களை அசைத்துவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் மலைகளை முளைகளாக அமைத்துள்ளான் என்றும் குறிப்பிடுகிறது.
மேற்கண்ட வசனத்தில் பூமி அசையாமல் இருக்கிறது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. மாறாக அந்த அறிஞர்தான் அவ்வசனத்தின் கருத்தை சரியாக விளங்காமல் தவறான முறையில் விளங்கி முன்வைத்துள்ளார் என்பது தெளிவாகிவிட்டது.
அறிவுச் சான்று என்ற பெயரில் அறியாமை
பூமி சுற்றவில்லை என்பதற்கு அறிவுச் சான்று என்று கூறி சவூதி அறிஞர் ஒரு கருத்தை முன்வைக்கின்றார்.
நாம் அனைவரும் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் சீனா செல்வதாக வைத்து கொள்வோம் எனக் கூறிய அவர், அப்போது நடுவானில் விமானம் நிறுத்தப்பட்டால், பூமி தன்னைத்தானே சுற்றி வருகிறது என்ற கூற்றின்படி, சீனா தானாகவே நம்மை நோக்கி வர வேண்டும். ஆனால், எதிர் திசையில் பூமி சுழல்வதாக இருந்தால் விமானம் சீனாவை சென்றடைய முடியாது. ஏனென்றால் விமானம் செல்லும் போது சீனாவும் சுழல்கிறதே!
இதுதான் பூமி சுற்றவில்லை என்பதற்கு அந்த அறிஞர் வைத்து அறிவுச் (?) சான்று. இது போன்ற உதாரணத்தை முன் வைத்ததிலிருந்தே பூமியன் இயக்கம் பற்றி எந்த அறிவும் அந்த அறிஞருக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
பூமி தன்னுடைய புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட அனைத்துப் பொருட்களையும் இழுத்துக் கொண்டு சுற்றுகிறது என்பதை அறியாமல் பேசுகிறார். ஒரு விமானம் ஆகாயத்தில் உயர்ந்து அப்படியே நிற்பதாக வைத்துக் கொண்டால் (அப்படி நிற்க முடியாது) அது எந்த நாட்டின் உயரத்தில் உள்ளதோ அந்த நாட்டோடு சேர்ந்து அதுவும் செல்கிறது.
பின்வரும் உதாரணத்திலிருந்து இதனை நீங்கள் இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
ஒரு இரயில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் எஸ்-1 பெட்டியில் இருந்து எஸ்-9 பெட்டிக்கு செல்ல வேண்டுமென்றால் இரயிலிற்குள் எஸ்-9 பெட்டியை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் இரயிலிற்குள் இருந்தாலும், அல்லது நடந்து சென்றாலும் இரயில் உங்களை 120 கிலோ மீட்டர் வேகத்தில் கொண்டு செல்லும். அதாவது இரயிலிற்குள் ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டியை அடைவதற்கு நீங்கள் குறிப்பிட்ட வேகத்தில் நகர்ந்து செல்ல வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் இரயிலிற்குள் இருக்கும் ஒவ்வொரு விநாடியும், இரயிலின் ஒவ்வாரு சென்டி மீட்டரிலும் இரயில் உங்களை 120 கிலோ மீட்டர் வேகத்தில் கொண்டு செல்லும்.
இரயில் தான் 120 கி.மீ. வேகத்தில் செல்கிறதே! இரயிலுக்குள் நாம் நடந்து செல்லாமல் அதே இடத்தில் நின்றால் எஸ்-9 பெட்டி நம்மை நோக்கி வந்து விடாதா? என்று அறிவுடையவர் யாரும் கேட்க மாட்டார்கள்.
இரயில் இஞ்சின் செல்லும் வேகத்தில் அதன் பின்னால் இணைக்கப்பட்டுள்ள இரயில் பெட்டிகளும் செல்லும். அது போன்றுதான் பூமி எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறதோ அதே வேகத்தில் அதன் ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட பொருட்களும் சுற்றுகின்றன. அவை தரையில் இருந்தாலும், ஆகாயத்தில் இருந்தாலும் பூமி தன்னுடைய வேகத்தில் அந்தப் பொருளைக் கொண்டு செல்லும். அதே நேரத்தில் பூமியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் நாம்தான் குறிப்பிட்ட வேகத்தில் நகர்ந்து செல்ல வேண்டும்.
ஒரு ஆகாய விமானம் பூமியின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட பகுதியில் தான் பறக்கிறது. பூமியின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட பகுதியில் பறப்பதும், இரயில் பெட்டிக்குள் நடப்பதும் ஓரே விதம்தான். நாம் இரயில் பெட்டிக்குள் நடக்கும் போது இரயிலின் வேகத்தில் அதற்குள் இருக்கும் நாம் கொண்டு செல்லப்படுவதோடு, ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்வதற்கு நாம்தான் நடந்து செல்கிறோம். அது போன்று பூமியின் ஈர்ப்பு விசைக்குள் பறக்கும் விமானத்தை பூமி தன்னுடைய வேகத்தில் சேர்த்துக் கொண்டு போகும். அதே நேரத்தில் பூமியில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தை அடைவதற்கு விமானம் பறந்துதான் போக வேண்டும்.
சாதாரண விமானங்கள், போர் விமானங்கள் பூமியின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டவையே. ஒரு நிமிஷம் இயங்காமல் இருந்தால் அவை பூமியில் வந்து விழுந்து விடும். மேற்கண்ட சவூதி அறிஞர் கற்பனை செய்வது போல் நின்று விட்டால் என்று வைத்துக் கொண்டு பேசவே முடியாது.
நீங்கள் கல்லை எறிகிறீர்கள். வேகம் இருக்கும் வரை சிறிது தூரம் செல்கிறது. பிறகு விழுந்து விடுகிறது. விமானங்களின் வேகம் அவை கீழே விழாமல் இருக்க உதவுகின்றன.
நாம் இரயில் பெட்டிக்குள் இருக்கும் போது இரயிலின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நாம்தான் நகர்ந்து செல்ல வேண்டும். ஆனால் ஒரு இரயில் வந்து கொண்டு இருக்கும் போது நீங்கள் இரயிலுக்கு வெளியே நின்றால் நீங்கள் நகர வேண்டியதில்லை. அப்படியே நீங்கள் நின்றால் நீங்கள் ஏற வேண்டிய பெட்டி உங்கள் அருகில் வந்துவிடும்.
அது போன்று பூமியின் புவி ஈர்ப்பு விசைக்கு வெளியில் நாம் இருந்தால் தான் பூமி சுற்றும் போது குறிப்பிட்ட பகுதி நாம் இருக்கும் பகுதிக்கு நேராக வரும்.
இந்த அடிப்படையை அறியாத காரணத்தினால்தான் மேற்கண்ட சவூதி அரேபிய அறிஞர் அறிவுச் சான்று என்ற பெயரில் உளறிக் கொட்டியுள்ளார்.
புவி ஈர்ப்பு எல்லையைக் கடந்து ஒரு விமானம் மேலே சென்று சில மணி நேரம் கழித்து கீழே இறங்கினால் அப்போது இவர் கூறுவது போல் சீனா நம்மை நோக்கி வந்து இவரைப் பொய்ப்பித்து விடும். புவி ஈர்ப்பு எல்லையைக் கடந்து விமானம் பறப்பதில்லை.
பைத்துல் மஃமூர் கஅபாவிற்கு நேராக உள்ளதா?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்பைத்துல் மஃமூர்'' வானத்தில் உள்ளது. அதற்கு "அஸ்ஸுராஹ்'' என்று கூறப்படும். அது பைதுல் ஹராம் என்ற கஅபா பள்ளியைப் போன்றதாகும். அதற்கு நேராக (வானத்தில்) உள்ளது. அது விழுந்தால் கஅபாவின் மீதுதான் விழும்.
நூல் : முஃஜமுல் கபீர் லித்தப்ரானீ, பாகம் : 11 பக்கம் : 417)
மேற்கண்ட செய்தியில் "பைத்துல் மஃமூர்'' என்ற பள்ளிவாசல் கஅபாவிற்கு நேராக மேல் வானத்தில் இருப்பதாகவும், எந்த அளவிற்கென்றால் அது விழுந்தால் கூட கஅபாவின் மீதுதான் விழும் அந்த அளவிற்கு நேராக உள்ளது என்று வந்துள்ளது.
இதிலிருந்து கஅபா எப்போதும் மஸ்ஜிதுல் மஃமூருக்கு கீழாகத்தான் இருக்கும். பூமி சுற்றினால் கஅபா பள்ளி மஸ்ஜிதுல் மஃமூருக்கு நேராக இருக்காது. எனவே பூமி சுற்றவில்லை. அது அசையாமல் தான் உள்ளது என மேற்கண்ட செய்தியை வைத்து சவூதி அறிஞர் வாதிக்கின்றார்.
ஆனால் மேற்கண்ட செய்தி பலவீனமான செய்தியாகும்.
"மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளிவாசல் கஅபாவிற்கு நேராக வானத்தில் இருக்கிறது. அதில் விழுந்தால் கஅபாவின் மீதுதான் விழும்'' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமாதாகும்.
தப்ரானியில் இடம் பெறும் அறிவிப்பில் "இப்னு ஜுரைஜ்'' என்பார் இடம் பெறுகிறார். இவர் "முதல்லிஸ்'' (அறிவிப்பாளர்களை இருட்டடிப்பு செய்பவர்) ஆவார். இவர் தன்னுடைய ஆசிரியரிடமிருந்து நேரடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அவருடைய அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் எந்த நூலிலும் இவர் நேடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைக் கூறி அறிவிக்கவில்லை. மேலும் இப்னு ஜுரைஜ் என்பாரிடமிருந்து அறிவிக்கும் மாணவர்களும் பலவீனமானவர்களாகவே உள்ளனர்.
இதே செய்தி அபூஹுரைரா அவர்கள் வழியாகவும் சில நூற்களில் இடம்பெற்றுள்ளது. அனைத்து அறிவிப்புகளிலும் "அபூ ஸஃத் ரவ்ஹ் பின் ஜனாஹ்'' என்பார் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டி அறிவிப்பவர் ஆவார். எனவே இந்த அறிவிப்புகளும் ஆதாரப்பூர்வமானதல்ல.
சில நூற்களில் கதாதா என்பவர் நபியவர்களிடமிருந்து அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது. கதாதா என்பவர் நபித்தோழர் கிடையாது. எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.
மொத்தத்தில் "பைத்துல் மஃமூர்'' கஅபாவிற்கு நேராக வானத்தில் இருக்கிறது என்று நபி கூறியதாக வரும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். எனவே இது போன்ற செய்திகளை ஆதாரமாகக் காட்டுவது கூடாது.
மேலும் பூமி சுற்றுகிறது என்று திருமறை வசனங்களிலிருந்து நாம் பெறும் சட்டத்திற்கும் இது முரணானதாக உள்ளது.
சுற்றும் சூரியன்
அத்துடன் சவூதி அரேபிய அறிஞர் சூரியன் சுற்றுகிறது என்பதற்கு சில சான்றுகளை அவர் முன்வைக்கின்றார்.
சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது
(அல்குர்ஆன் 36 : 38)
சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.
(அல்குர்ஆன் 21 : 33)
"அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார்
(அல்குர்ஆன் 2 : 258)
மேற்கண்ட ஆதாரங்களை முன்வைத்து சூரியன் சுற்றுவதாக சவூதி அறிஞர் கூறுகின்றார்.
சூரியன் சுற்றுகிறது என்றும் திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஆனால் சூரியன் சுற்றுகிறது என்று திருக்குர்ஆன் கூறியதினால் பூமி சுற்றவில்லை என்ற கருத்தை நிருபிக்க முடியாது.
மேற்கண்ட அரபி அறிஞர் இப்படி உளறியுள்ளார் என்று கூறினால் அவர் உளறினார் என்ற கருத்தைத் தான் தரும். இவரைத் தவிர உலகில் ஒருவரும் இதுபோல் உளறவில்லை என்ற கருத்தை இது தராது.
13:2, 31:29, 35:13, 36:38 39:5 ஆகிய வசனங்களில் சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஏனைய எல்லாக் கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.
எனவே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றுகின்றது என்ற அறிவியல் உண்மையை திருக்குர்ஆன் ஒருபோதும் மறுக்கவில்லை. மாறாக, இந்த நவீனக் கண்டுபிடிப்பை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளது என்பது தான் உண்மை!
0 comments:
Post a Comment