ஒரு உண்மையான நண்பர் யாராக இருக்க முடியும்..? ஒரு நண்பனின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு, அவனுக்கு உதவியாகவும், ஒத்தாசையாகவும் இருப்பவனா? அல்லது நண்பன் அழைக்கும்போதெல்லாம், அவனைப் பின்தொடர்ந்து செல்லுவது, ஊர் சுற்றுவது, பிறந்தநாள் கொண்டாடுவது இவைகள் யாவும் செய்பவன் உண்மையான நண்பனா?
நண்பனுக்கு ஏதாவது ஒன்று என்றால், வரிந்துக் கட்டிக் கொண்டு நண்பனுக்காக வக்காலத்து வாங்குபவன் உண்மையான நண்பனா? உயிர் கொடுப்பான் தோழன் என்பார்களே அவனா?
உயிர் கொடுப்பான் தோழன் அல்ல மாறாக உயிர் எடுப்பான் தோழன். காலையில் எழுந்தவுடன் நண்பனின் வீட்டு வாசலில், ''மச்சி சீக்கிரம் வா நாம்ம இப்போ அங்கே போவோம், இங்கே போவோம்'' என்று உயிரை எடுப்பவன் தான். மதுவை அருந்திக் கொண்டு, புகைப் பிடித்துக் கொண்டு காலத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருப்பவர்கள்தான் இன்றைய நண்பர்கள். நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களைத் தவிர.
அல்லாஹ்வையும், மறுமைநாளையும் உறுதியாக நம்பக்கூடி ஒரு உண்மையான முஸ்லிம்,
அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கூடிய ஒரு முஸ்லிம்,
நல்லதை ஏவி தீயதைத் தடுக்ககூடிய ஒரு முஸ்லிம், உறவுகளை பேணிக் கொள்பவர்,
ஐவேளை ஜமாத்துடன் தொழக்கூடிய ஒரு முஸ்லிம்,
சுன்னத்துகளை பேணுதலாக கடைப்பிடிக்கக்கூடிய ஒரு முஃமின் இவர் தான் ஒரு நல்ல உண்மையான நண்பராக இருக்க முடியும்.
அவரின் நண்பர் தவறான வழியில் போவதை தடுப்பார், அவருக்கு உபதேசம் செய்வார். அல்லாஹ்வைப் பற்றி நினைவு கூறுவார். தொழுகையின் பக்கம் அழைப்பார். தீயக் காரியங்களை விட்டு தடுப்பார், அழகான முறையில் நடந்துக் கொள்வார். மேலாக அந்த நண்பரை நரகத்தை விட்டு பாதுக்காக்க முயற்சிச் செய்வார். சுவனத்தின் பக்கம் அந்த நண்பரை கொண்டு செல்வார். இவர் தான் உண்மையான நண்பராக இருக்க முடியும். ஒரு நல்ல சகோதரராகவும் நடந்துக் கொள்ள முடியும். இருவரும் நண்பர்களும், சகோதர்ரர்களும் ஆவார்கள்.
இது போன்ற நண்பர் யாருக்கு கிடைப்பார்கள். இதுதான் உண்மையான நட்பு, ஒரு நல்ல தோழமைக் கூட. நீங்கள் உங்கள் நண்பர்களை சோதித்துப் பாருங்கள். அவர்கள் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்று உங்களுக்கு புரிந்து விடும்.
பெரும்பாலும் நட்பு அல்லது பழக்கம் ஒரு சுயநலமாக தான் இருக்கிறது. நேசம் கொண்டால், அன்பு வைத்தால் அல்லாஹ்வுக்காக என்று சொல்லக் கூடியவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்? அல்லாஹ்வுக்காக நாங்கள் இணைந்தோம், இப்பொழுது அல்லாஹ்வுக்காக பிரிகிறோம் என்று சொல்லக் கூடியவர்கள் யாரவது இருக்கிறார்களா? அல்ஹம்துலில்லாஹ்! சிலர் இருக்கிறார்கள். தனது சகோதர்ரர்களையும் நண்பர்களையும் சுயநலமற்ற நேசித்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு கொள்வது உண்மை முஸ்லிமின் தனித்தன்மையான பண்புகளில் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு நேசித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் தயார் செய்து வைத்திருக்கும் அருட்கொடைகள் மற்றும் மறுமை நாளில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் உன்னத அந்தஸ்து பற்றியும் விவரித்து கூறும் அனேக நபிமொழிகள் உள்ளன.
அல்லாஹ்வுக்காகவே நேசிப்பவர்களை சிறப்பித்துக் கூறும் முகமாக மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ் கூறுவான்... ''என்னுடைய மகத்துவத்துக்காக தங்களிடையே நேசித்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இன்றைய நாளில் என்னுடைய நிழலில் அவர்களுக்கு இடமளிக்கிறேன்.' (ஆதாரம்: முஸ்லிம்)
துன்பமும், துயரமும், சிரமங்களும் நிறைந்த கடுமையான நாளில் அல்லாஹ்வுக்காகவே நேசித்தவர்களுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் பேரருள் எவ்வளவு மகத்தானது! 'அல்லாஹ்வுக்காகவே நேசித்தல்' என்பது அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் நோக்கமாகக் கொண்ட நட்பாகும்.
உலக ஆசாபாசங்கள், பலன்களை எதிர்பார்ப்பது அல்லது துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வது போன்ற வேறு நோக்கங்கள் இருக்கக் கூடாது. ஆனால் பரிசுத்த ஆன்மாவும் , தூய இதயமும் கொண்டு அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னாள் உலக இன்பங்களை அற்பமாகக் கருதும் இயல்புடையவர்களுக்குத்தான் இது சாத்தியமாகும். இத்தகையோருக்கு ஈருலகில் அல்லாஹ் அந்தஸ்தையும் அருட்கொடைகளையும் வாரி வழங்குவது தூரமான விஷயமல்ல.
ஒரு நல்ல உண்மையான முஸ்லிம் நண்பர் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்வோம்! நாமும் நல்ல உண்மையான முஸ்லிம் நண்பர்களாக இருக்க அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்! ஒருவொர்கொருவர் அல்லாஹ்வுக்காகவே மட்டும் நேசிப்போம், மறுமையில் அல்லாஹ்வின் நிழலை பெறுவோம் .
நல்ல நண்பர், தீய நண்பர்க்கு அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அழகான உதாரணம் கூறுகின்றார்கள்.. ஒரு நல்ல நண்பர் அத்தர் வியாபாரி போன்றவர். அவர் அவருக்கு அத்தர் கொடுக்கலாம் அல்லது அந்த அத்தர் வாசம் அவர் மீது பரவும். ஒரு தீய நண்பருக்கு உதாரணம்; ஒரு கொல்லுப்பட்டறை வைத்திருக்கும் ஒரு கொல்லன், அவன் தீயை மூட்டும்போது அவன் மீது படலாம் அல்லது அந்த வாசனை அவன் மீது பரவும். இது ஒரு ஹதீஸின் கருத்து.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்...
source: சத்திய பாதை இஸ்லாம்
0 comments:
Post a Comment