அமீன் பைஜி, கடையநல்லூர்
உலகில் பிற மனிதர்களின் நெருக்கம், அவர்களின் பொருத்தம் கிடைக்க வேண்டுமென்று நாம் பெரிதும் ஆசைப்படுகிறோம். ஒவ்வொரு செயலிலும் தமது விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, பிறர் இதைப் பொருந்திக் கொள்வார்களா என்ற எண்ணமே அதிகமான மனிதர்களிடம் மேலாங்கி உள்ளது.
ஆடை, வாட்ச் போன்ற சாதாரண பொருட்களைக் கூட பிறரின் பொருத்தத்தை முன்னிறுத்தியே தேர்வு செய்யும் பழக்கம் பலரிடமும் காணப்படுவது இதற்கு மிகச் சிறந்த ஓர் எடுத்துக் காட்டு.
அற்பமான இவ்வுலகில், சாதாரண மனிதனின் பொருத்தம் பெற முயற்சி செய்யும் நாம், நம்மைப் படைத்த இறைவன் நம்மை இரு உலகிலும் திருப்தி கொள்வதற்காக எதைச் செய்கிறோம் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இறைதிருப்தியே மேலானது
ஏனெனில் மனிதனின் திருப்தியை விடவும் ஏன், உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறப்பானது எது தெரியுமா? அல்லாஹ்வுடைய திருப்தி தான்.
இதோ அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்!
அல்லாஹ்வின் திருப்தியே அனைத்தையும் விட சிறந்தது.
அல்குர்ஆன் (9:72)
இறை திருப்தியைப் பெறுவது என்பது பெரும் பாக்கியமாகும். இறை திருப்திக்கு எண்ணற்ற சிறப்புகளும் மகிமைகளும் உண்டு. ஆதலால் தான் இறை திருப்தியைப் பெற்றோரும் அதனை பெறாதோரும் சமமாக மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவன், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி, நரகத்தை அடைந்தவனைப் போன்றவனா? (அது) சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் 3:162
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுதினமும் பின்வரும் பிரார்த்தனையின் வாயிலாக இறை திருப்தியைக் கோருபவர்களாகவும் இறைக் கோபத்திலிருந்து பாதுகாவல் தேடக்கூடியவர்களாகவும் இருந்துள்ளார்கள்.
"அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க''
இதன் பொருள் :
இறைவா! உன் திருப்தியின் மூலம் உன் அதிருப்தியை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உனது மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னை என்னால் முழுமையாகப் புகழ இயலாது. நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து கொண்டாயோ அவ்வாறு இருக்கிறாய்.
ஆதாரம்: முஸ்லிம் 751
மேலும் அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கப் பெற்றவர்கள் தான் மறுமை நாளில் மலக்குமார்களின் பரிந்துரைக்குத் தகுதி பெறுவார்கள் என திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.
அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள்.
அல்குர்ஆன் (21:28)
இப்படிப்பட்ட சிறப்புமிக்க அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் காரியங்கள் எவை என்பதை குர்ஆனும் ஹதீஸும் நமக்குக் கற்றுத் தருகின்றது. அவைகளை நமது வாழ்வில் கடைப்பிடித்து அல்லாஹ்வின் மகத்தான திருப்தியை, இறை பொருத்தத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.
ஹிஜ்ரத் எனும் நாடு துறத்தல்
அல்லாஹ்வுக்காக நாடு துறந்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொள்வதும், அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்தோருக்கு உதவி செய்வதும் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் செயலாகும்.
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன் (9.100))
ஹிஜ்ரத் என்பது சாதாரண ஒன்றல்ல, தன் சொந்த ஊரைவிட்டு, நாட்டை விட்டு, மனைவி மக்களை விட்டு, சொத்து மற்றும் உடமைகளை விட்டு மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரே நோக்கத்துடன் வேறு நாடு செல்வதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஏனைய நபித்தோழர்களும் மக்காவில் இறைவனை வணங்கவிடாது தடுக்கப்பட்டு பல்வேறு துன்பம் இழைக்கப்பட்டதால் மதீனா மற்றும் அபீசினீயா போன்ற நாடுகளை நோக்கி ஹிஜ்ரத் செய்தவர்களே.
நம்மைப் பொறுத்தவரை இன்றைக்கு ஹிஜ்ரத் செய்யும் அவசியேமா, தேவையோ, வாய்ப்போ இல்லை. ஆதலால் இறைவனுக்காக ஊரை விட்டோ, நாட்டை விட்டோ, மனைவி மக்கள் மற்றும் சொத்துக்களை விட்டோ நாடு துறந்து செல்ல வேண்டிய தேவையில்லை. அப்படி ஒரு சூழல் இருந்தாலும் இறைவனுக்காக ஹிஜ்ரத் செல்வோமா என்பது பெரும் கேள்விக்குறியே!
எனினும் நாடு துறந்து செல்லும் ஹிஜ்ரத் இல்லையென்றாலும் இறைவனுக்காக அவன் தடை செய்தவற்றை வெறுப்பதும் ஒரு வகையில் ஹிஜ்ரத்தே. அதையாவது நாம் செய்து ஓரளவு இறை திருப்தியைப் பெற முயல வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லை களி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல்: புகாரி 10
இறைவனுக்கு நன்றி செலுத்துதல்
நீங்கள் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் உங்களை விட்டும் தேவையற்றவன். அவன் தனது அடியார்களிடம் மறுப்பைப் பொருந்திக் கொள்ள மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக் கொள்வான். ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.
அல்குர்ஆன் 39:7
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது இறைவனுடைய பொருத்தத்தை பெற்றுத்தரும் என்று இக்குர்ஆன் வசனம் கூறுகிறது. இந்த கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியும் உறுதிப்படுத்துகிறது.
இஸ்ரவேல் சமுதாயத்தைச் சார்ந்த மூவரை இறைவன் சோதித்த போது ஒருவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியதால் அவர் இறைவனின் திருப்திக்குரிய நபராக ஆனார் என்று ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் அந்த சுவையான சம்பவத்தை இப்போது பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்கüடம் அனுப்பினான். அவர் தொழு நோயாüயிடம் வந்து, "உனக்கு மிகவும் விருப்பமானது எது?'' என்று கேட்க அவர், "நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்'' என்று சொன்னார்.
உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், "எந்தச் செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?'' என்று கேட்க அவர், "ஒட்டகம் தான்... (என்றோ) அல்லது மாடுதான்...(எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)'' என்று பதிலüத்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், "இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்'' என்று சொன்னார்.
பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். "உனக்கு மிகவும் விருப்பமானது எது?'' என்று கேட்டார். அவர், "அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்'' என்று சொன்னார். உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது.
அவ்வானவர், "எந்தச் செல்வம் உனக்கு விருப்பமானது?'' என்று கேட்டார். அவர், "மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்'' என்று சொன்னார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, "இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்'' என்று சொன்னார்.
பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, "உனக்கு மிகவும் விருப்பமானது எது?'' என்று கேட்டார். அவர், "அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதிலüத்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரது பார்வையைத் திருப்பித் தந்தான்.
அவ்வானவர், "உனக்கு எந்தச் செல்வம் விருப்பமானது?'' என்று கேட்க அவர், "ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதில் அüத்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாüயாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.
பிறகு அவ்வானவர் தொழு நோயாüயாய் இருந்தவரிடம் தமது பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, "நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது.) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த(இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்'' என்று சொன்னார்.
அதற்கு அந்த மனிதர், "(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)'' என்றார். உடனே அவ்வானவர், "உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்ற தொழு நோயாüயாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?'' என்று கேட்டார்.
அதற்கு அவன், "(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்கüடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்'' என்று பதிலüத்தான். உடனே அவ்வானவர், "நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று சொன்னார்.
பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாüயிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலüத்ததைப் போன்றே பதிலüத்தான். வானவரும், "நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று சொன்னார்.
பிறகு (இறுதியாக), குருடரிடம் தமது தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, "நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்துபோய் விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன்'' என்று சொன்னார்.
(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், "நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்தனாக்கினான். ஆகவே, நீ விரும்புவதை எடுத்துக் கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கின்ற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்.'' என்று சொன்னார்.
உடனே அவ்வானவர், "உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரு தோழர்கள் (தொழு நோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபம் கொண்டான்'' என்று சொன்னார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3464
எனவே இறைவனுக்கு வணக்க வழிபாடுகளைப் புரிந்து நன்றி செலுத்துவதன் மூலம் இறை திருப்தியைப் பெறலாம்.
பாவத்திலிருந்து விலகியிருத்தல்
அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க சிற்சில குற்றங்களை விட்டும் விலகி இருத்தல் அவசியம். ஏனென்றால் பாவங்கள் செய்பவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான். அல்லாஹ்வின் பொருத்தம் அவர்களுக்கு கிடைக்காது.
நீங்கள் அவர்கள் மீது திருப்தியடைய வேண்டுமென்பதற்காக உங்களிடம் சத்தியம் செய்கின்றனர். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் குற்றம் புரியும் கூட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான்.
அல்குர்ஆன் (9.96)
அல்லாஹ்வின் கோபத்திற்குரிய, சாபத்திற்குரிய வார்த்தைகளை பேசி விடாமல் அல்லாஹ் திருப்திக் கொள்ளும் வார்த்தைகளையே பேச வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6478
எந்தச் சூழ்நிலையிலும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளாத வார்த்தைகளை உதிர்த்து விடக் கூடாது.
நபிகள் நாயகம் அவர்கள் தம் குழந்தை இறந்து பெரும் துன்பத்தில் ஆழ்ந்த போதும் அல்லாஹ் பொருந்தாத எதுவும் தம்மிடம் நிகழ்ந்து விடக் கூடாது என்றே கவனத்துடன் செயல்பட்டுள்ளார்கள்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்து வந்த ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! தாங்களா (அழுகிறீர்கள்)?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவ்ஃபின் புதல்வரே!'' என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு "கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக்கொண்டிருக்கிறது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூறமாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1303
கணவனுக்குக் கட்டுப்படுதல்
கணவன் இல்லறத்திற்கு அழைக்கின்ற போது மனைவி அதற்கு இணங்கிக் கட்டுப்பட வேண்டும். தக்க காரணமின்றி மறுத்தால் அவள் மீது இறைக்கோபம் ஏற்படும் என நபிமொழி எச்சரிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2830
இப்படிப் பாவங்களிலிருந்து விலகி நன்மையின் பால் ஆர்வம் கொண்டு நல்லறங்களைப் புரிந்தால் மேலான இறைதிருப்தி நமக்கு கிடைக்கும் என்று குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்களும், இறை திருப்தியைப் பெற்றவர்களும் ஆவர்.
அவர்கள் இறைவனிடம் அவர்களின் கூலி சொர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது.
அல்குர்ஆன் 98:8,9
(நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 57:20
நமது செயல்பாடுகளை இறைவன் பொருந்திக் கொள்ளும் படியாக அமைத்து கொள்ள இறைவன் அருள் புரிவானாக!
0 comments:
Post a Comment