Dec 16, 2011

மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்!


book1ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது …” (அல்-குர்ஆன் 2:185)
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)
ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்-குர்ஆன் 43:1-3)
அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (அல்-குர்ஆன் 12:1-2)
இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்-குர்ஆன் 16:2)
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்-குர்ஆன் 41:2-4)
தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். (அல்-குர்ஆன் 18:1-3)
(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 43:43-44)
முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்: -
“ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” (திர்மிதி)
“இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காக, இஸ்லாமிய அறிவை பெற்றுக் கொண்டிருக்கும்போது யார் உயிர் நீத்தார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நபிமார்களுக்கு அடுத்த நிலையில் இருப்பார்கள்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)
முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
யார் ஒருவர் தன்னுடைய சகோதரனை இந்த உலக ஆசைகளின் துன்பங்களில் இருந்து நீக்குகிறாரோ, அவரை அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களில் இருந்து நீக்குவான். யார் ஒருவர் இந்த உலகத்தில் ஒரு முஸ்லிமின் குற்றத்தை மறைக்கிறாறோ, அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய குற்றத்தை மறைப்பான்; தன்னுடைய சகோதரனுக்கு பின்னால் இருந்து உதவி செய்யக் கூடியவனுக்கு,  அல்லாஹ் அவரின் பின்னால் இருந்து உதவி செய்வான். அறிவைப் பெறுவதற்காக யார் நடந்து செல்கிறார்களோ அவருக்கு அல்லாஹ் அவருடைய பாதையை இலகுவாக்குகிறான்; சொர்க்கத்திற்கான வழியையும் காட்டுகிறான்; யாரெல்லாம் அல்லாஹ்வின் இல்லத்தில் ஒன்று கூடி குர்ஆனை ஓதி, பிறருக்கும் கற்றுக்கொடுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்ளும் மலக்குகளும் சுழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் உள்ளவர்களிடம் அவர்களைப்பற்றி சிலாகித்துக் கூறுவான். (திர்மிதி)
முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
இரவில் ஒரு மணி நேரம் மார்க்க அறிவைப் பெறுவதற்காக வெளியே செல்வது முழு இரவிலும் நின்று வணங்கி செலவழிப்பதை விட சிறந்தது. (திர்மிதி)
இறை இல்லத்தில் இரண்டு கூட்டங்களின் பக்கம் (நபி {ஸல்}) சென்றார்கள்; இரண்டு வகுப்பினரும் சிறந்தவர்கள் என்றாலும், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரைவிட சிறந்தவர். ஒரு வகுப்பினர் அல்லாஹ்விடம் துவா கேட்டுக் கொண்டிருந்தனர். அல்லாஹ் நாடினால் அவர்கள் கேட்டதை அவர்களுக்கு வழங்குவான் அல்லது தாமதப்படுத்துவான்; மார்க்கத்தைப் புரிந்து கொள்வதற்காக மார்க்க அறிவைப் பெற முயற்சித்து அதை அறியாதவர்களுக்கும் கற்பித்துக் கொண்டும் அந்த இரண்டாம் வகுப்பினரே சிறந்தவர். நிச்சயமாக நான் ஒரு கற்றுக் கொடுப்பவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்” என்று சொல்லி அவர்களிடையே அமர்ந்து விட்டார்கள்.
இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெறுவது ஒவ்வொரு பருவ வயதை அடைந்த, புத்தி சுவாதீனமுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் சட்ட வல்லுனர்களும் ஒரு மனதாக குரல் கொடுக்கின்றனர்.
ஒரு சில மக்கள் தான், மார்க்க அறிவைப் பெருவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக, வெட்கப்பட்டு, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை சொல்லி தங்களுடைய செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.
மார்க்க அறிவைப் பெறுவதற்கு ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் முயற்சிக்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
நன்றி : www.islamhelpline.com

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )