சம்பிரதாயத்திற்காகவா?
"ஸஃப் -களை நேராக்கிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!" – என்று கூறப்படுவதை நாம் பலமுறை பள்ளிவாசலில்; கேட்டிருப்போம். இது ஒரு சம்பிரதாய வார்த்தையா? அல்லது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்ததா? என்பதைப் பற்றியெல்லாம் விளக்கமாக அறிந்து கொள்வதற்காகவே இச்சிறிய கட்டுரை.அணியணியாக... மலக்குகள்!
அல்லாஹ் தன் திருமறையில், ‘அணியணியாக நிற்போர் மீது சத்தியமாக!’ (37:1) என்று கூறுகின்றான். இங்கே ‘அணியணியாக நிற்போர்’ என்பது வானவர்(மலக்கு)களைக் குறிக்கும் என்பதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: அத்தப்ரி 21:7)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, மஸ்ரூக் ரளியல்லாஹு அன்ஹு, ஸயீது பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு, இக்ரிமா ரளியல்லாஹு அன்ஹு, முஜாஹித் ரளியல்லாஹு அன்ஹு, அஸ்-ஸுத்தீ ரளியல்லாஹு அன்ஹு, கதாதாஹ் ரளியல்லாஹு அன்ஹு, அர்ரபீ பின் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரின் கருத்தும் இதுவே. (நூல்: அல்-குர்துபி 15: 61, 62)
மேலும் ‘வானவர்கள் சுவனத்தில் அணியணியாகவே இருக்கின்றனர்’ என்பதாக கதாதாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். (நூல்: அத்-தபரி 21:7)
இதையே, இன்னொரு இடத்தில், ‘நிச்சயமாக நாங்கள் (கட்டளையை நிறைவேற்ற அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) அணிவகுத்து நின்ற வண்ணமாகவே இருக்கின்றோம்’ (37:165) என்று வானவர்கள் (மலக்குகள்) கூறுவதாக திருக்குர்ஆனில் ஏக இறைவன் குறிப்பிடுகிறான். இப்படி அணியணியாக நிற்கும் வானவர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதை அவர்களே இப்படி கூறுகிறார்கள்:
‘நிச்யமாக நாங்கள் (அவனை – அல்லாஹ்வைப்) புகழ்ந்து துதி செய்து கொண்டிருக்கின்றோம்.’ (அல்குர்ஆன் 37:166)
ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட அரண்!
அப்படி அணியணியாக நிற்போர் எப்படி நிற்கிறார்கள்? எப்படி நிற்க வேண்டும்?
‘விசுவாசிகளே! எவர்கள் ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட (பலமான) அரணைப்போல அணியில் (இருந்து பின்வாங்காது) நின்று அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்.’ (அல்குர்ஆன் 61:4)
அல்லாஹ் இவ்விடத்தில் அணியணியாக நின்று போர் புரிபவர்களை நிச்சயமாக நேசிப்பதாகக் கூறுவது அணியணியாக நிற்பதின் முக்கியத்துவத்தை மேலும் கூட்டுகிறது என்பது தெளிவு. இக்கரத்தையே, ‘அல்லாஹ்வுக்காக அணியணியாக நின்று போரிடுவோரை அல்லாஹ் நேசிக்கிறான்’ என்று ஸயீது பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழி
திருமறைக் கூறும் நெறிமுறைகளைத் தம் அன்றாட வாழ்வில் செயல்படுத்தி, மக்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த விஷயத்தில் எவ்லாறு நடந்து காட்டினார்கள்? என்பதைப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகள் மீது போர்த் தொடங்கும் முன்னர், தம் படையினர் அணிவகுத்து நிற்பதை விரும்பினார்கள்.
மேற்குறிப்பிட்ட திருமறை வசனத்தில் (61:4) அவ்வாறே அணியில் (இருந்து பின்வாங்காது) நிற்கும்படி அல்லாஹ் தன் விசுவாசிகளுக்கு கற்பிக்கிறான்.’ (நூல்: அல்-குர்துபி 18:81)
‘ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட (பலமான) அரணைப்போல் அணியில் (இருந்து பின்வாங்காது) நின்றுஸ’ எனும் வாசகம், போரிட அணிவகுத்து நிற்கும் ஒவ்வொருவரும் ஒருவரோடு ஒருவர் உறுதியாக இணைக்கப்பட்டவர்களைப் போன்று – எனப் பொருள் தரும் என்பதாக ஸயீது பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு மேலும் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் பங்கு என்ன?
‘உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது, ‘அணியணியாக (உங்களைப் பின்பற்றி வரக்கூடிய) ஆயிரம் மலக்குகளைக் கொண்டு, நிச்யமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்’ என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்’ (அல்குர்ஆன் 8:9) இந்தத் திருவசனத்தில் வாக்குறுதியளித்தவாறு பத்ரு போர்க் களத்தில் மலக்குகளை அனுப்பி அல்லாஹ் உதவி புரிந்ததை வரலாறு நமக்குக் கூறுகிறது.
ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் எனும் எல்லாவித வேறுபாடுகளும் நொறுங்கும் செயலல்லவா தொழுகையில் முஸ்லீம்கள் தோளோடு தோள் உராய அணிவகுத்து நிற்கும் செயல்! இறைத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன்படி செயல்பட வேண்டியது நமது கடமை என்பதை அனைவரும் உணர்ந்தால் ஒற்றுமைக்கு அது வித்திடும் என்பதை மனதில் கொள்வோம்.
0 comments:
Post a Comment