1. 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
2. ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?' எனக் கேட்டதற்கு, 'சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்' என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா குறிப்பிட்டார்கள். மேலும்,
"கடும் குளிரான நாள்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்" என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்.
3. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்:
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்:
"அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார்கள். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு,
'படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை 'அலக்'கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்' என்றார்." மேலும், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்''. பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் 'அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்' என்றார்கள். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் 'வராக'விடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல், அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார்.
'வரகா' அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், 'என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரகா நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?' எனக் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) 'இவர்தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய 'நாமூஸ்' (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்) ஆவார்' என்று கூறிவிட்டு, 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!' என்றும் அங்கலாய்த்தார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் 'ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவுவேன்' என்று கூறினார். அதன்பின்னர் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (இறைச்செய்தி) சிறிது காலம் நின்று போயிற்று.
4. 'நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என் பார்வையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்துக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டு அச்சமுற்றேன். (வீட்டிற்குத்) திரும்பி வந்து (கதீஜாவிடம்) என்னைப் போர்த்துங்கள் என்றேன். அப்போது, 'போர்வை போர்த்தியவரே எழும்! (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யும்!' (திருக்குர்ஆன் 74:01) என்பது தொடங்கி 'அசுத்தங்களைவிட்டு ஒதுங்கி விடும்!' என்பது வரை ஐந்து வசனங்களை இறைவன் அருளினான்" என் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என வஹீ (இறைச்செய்தி) நின்று போயிருந்த இடைக் காலத்தைப் பற்றிக் கூறும்போது ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். அதன் பின்னர் வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அடிக்கடி தொடர்ந்து வரலாயிற்று என்றும் அவர் கூறினார்.
5. அவரசப்பட்டு உங்கள் நாவை அசைக்காதீர்கள்" (திருக்குர்ஆன் 75:16) என்ற திருக்குர்ஆன் வசனத்தை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு விளக்கும்போது, 'நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைச்செய்தி அருளப்படும்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இது அவர்களின் உதடுகளை அவர்கள் அசைப்பதன் மூலம் புலனாயிற்று. 'வஹீ (இறைச்செய்தி)யை (மனனம் செய்ய) அவசரப்பட்டு உங்களுடைய நாவை அசைக்காதீர்கள். ஏனெனில் அதனை (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் நாவின் மூலம்) ஓத வைப்பதும் நம்முடைய பொறுப்பாகும். எனவே நாம் அதனைச் செவி தாழ்த்திக் கேட்பீராக - பின்னர் நீர் அதனை ஓதும்படிச் செய்வதும் நம்முடைய பொறுப்பாகும்" (திருக்குர்ஆன் 75:16-19) என்ற வசனங்களை அப்போது அல்லாஹ் அருளினான்' என்று கூறிவிட்டு, 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் இரண்டு உதடுகளை அசைத்தது போன்று அசைக்கிறேன்' என்று சொல்லித் தங்கள் இரண்டு உதடுகளையும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அசைத்துக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து ஸயீது இப்னு ஜுபைர் அறிவித்தபோது, 'இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு தங்களின் இரண்டு உதடுகளையும் அசைத்தது போன்று அசைக்கிறேன்' என்று கூறி அசைத்துக் காட்டினார்கள்.
மேலும், இப்னு அப்பாஸ் தொடர்ந்து,
'அதன் பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரும்போது (அவர்கள் ஓதுவதை) செவி தாழ்த்திக் கேட்பதை வழக்கமாக்கினார்கள். ஜிப்ரீல் சென்றதும் அவர்கள் ஓதியது போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஓதினார்கள்" என ஸயீது இப்னு ஜுபைர் கூறினார்கள்.
மேற்கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் புகாரி ஷரீஃப் வால்யூம் 1-இல் ஆரம்பமாக (1-5) இடம்பெற்றுள்ளன.
0 comments:
Post a Comment