Dec 15, 2011

மார்க்க விஷயங்களில் ஆதாரம் கேட்பது தவறாகுமா?


மார்க்க விஷயங்களில் ஆதாரம் கேட்பது தவறாகுமா?
உலமாக்களிடம் பொதுமக்கள் அவசியம் கேள்வி கேட்க வேண்டும், கேட்டால்தான் மார்க்க விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படும் என்று நீங்கள் கூறி வருகின்றீர்கள். ஆனால் சில உலமாக்களிடம் சென்று கேட்டால் அவர்கள் அதனை வெறுக் கின்றார்கள். ‘கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது, சொன்னதை நீங்கள் நம்ப வேண்டியது தான், ஏழு வருடம் நாங்கள் மார்க்கத்தைக் கற்று விட்டுத்தான் இதனைக் கூறுகின்றோம்’ என்றெல்லாம் கூறுகின்றனர். இது பற்றி மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன?
விளக்கம்:  இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து சட்டங்களும் அனைவரும் புரிந்து கொள்கின்ற அமைப்பில்தான் இயற்றப்பட்டுள்ளன. ‘அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.’ (அல்குர்ஆன் 4:28) மார்க்கம் என்பது உலமாக்களுக்கு மாத்திரம் சொந்தமான ஒன்றல்ல. அது அனைத்துலக மக்களுக்கும் பொதுவான ஏக இறைவனின் கொள்கையாகும்.
‘கவனத்திற் கொள்க! தூய இம் மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.’ (அல்குர்ஆன் 39:3)
இந்த மார்க்கத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லத் தயங்கும் ஒரு கூட்டம் கேள்விகள் தொடுப்பது பிழையான செயலாகவும் அதனால் அழ்ழாஹ்வின் சாபம் ஏற்படுமென்றும் கூறி அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றி அதில் குளிர்காய்ந்து வருகின்றனர். அல்லாஹ் அருள் மறையில் 2:174ல் மார்க்கத்தை சுய நலனுக்காக மறைக்கும் உலமாக்களை சபிப்பதாகக் கூறுகின்றான். திருமறைக் குர்ஆனில் அழ்ழாஹ் கேள்வி கேட்பதை எவ்வாறு ஊக்குவிக்கின்றான் என்பதற்கு பின்வரும் வசனம் சிறந்த சான்றாகும்.
‘(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!’ (அல்குர்ஆன் 21:7)
மக்களுக்கு ஏற்படும் சந்தேகங் களுக்கு தெளிவைக் கொடுக்க வேண்டியது மார்க்க அறிஞர்களின் கடமையாகும். மேற்குறித்த வசனம் கேள்வி கேட்குமாறு ஊக்குவிக்கும் போது ‘என்ன ஆதாரம்? என்று ஒருவர் ஒரு மௌலவியிடம் கேட்பது எவ்வகையில் தவறாகும்? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதை அல்குர் ஆன் அழகாக எடுத்தியம்புகின்றது.
‘பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். ‘அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்’ எனக் கூறுவீராக!’ (அல்குர்ஆன் 2:189), ‘தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர்.
‘நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அழ்ழாஹ் அதை அறிந்தவன்’ எனக் கூறுவீராக!’ (அல்குர்ஆன் 2:215),
‘புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். ‘அதில் போரிடுவது பெருங்குற்றமே.’(அல்குர்ஆன் 2:217) மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக!’ (அல்குர்ஆன் 2:219),
‘மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அழ்ழாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்’ எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:222)
மேற்குறித்த வசனங்களிலும் அதுவல்லாத 5:4, 8:1, 17:85, 18:83, 20:105, 33:63, 51:12, 70:1 ஆகிய வசனங்களிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அன்றைய காலத்து மக்கள் கேள்விகள் கேட்டதையும் அதற்கு அருளாளன் அழ்ழாஹ்வே பதிலளிக்குமாறு தூதரைப் பணிப்பதையும் சிந்தித்தால் புரிந்து கொள்ளலாம்.
ஒருவர் ஒரு விஷயத்தை விளக்கினால் அதில் பல சந்தேகங்கள் கேட்பவர்களுக்கு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். தோன்றும் சந்தேகங்களை உரையாற்றியவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றால் தான் அவ்வுரை பரிபூரண தெளிவைக் கொடுக்கும். நாங்கள் சொல்வதை அப்படியே கண்மூடி நம்பவேண்டுமென யாராவது கூறி கேள்வி பதில் நிகழ்வை உதாசீனம் செய்தால் அவர் மக்களை ஏமாற்றுகின்றார், தான் விரும்பியதை மார்க்கமாக சொல்லுகின்றார், பொதுமக்களை மடையர்கள் என்று நினைக்கின்றார் என்பது அர்த்தமாகும்.
பள்ளிவாயல்களில் இஷாவுக்குப் பின் எழுந்து உரையாற்றத் தெரிந்தவர்களுக்கு ஏன் மக்களுக்கு அவ்வுரையில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாது? பெண்கள் பயான் எனும் பெயரில் நடாத்தப்படும் எத்தனையோ நிகழ்ச்சிகளை இன்று பார்க்கின்றோம். அங்கு நடைபெறும் நிகழ்சிகளில் கேள்வி பதில் என்ற எந்த நிகழ்வும் கிடையாது.
மௌலவி சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளை போன்று கேட்டு விட்டுச் செல்லும் மௌட்டீகத்தைத் தான் இன்று நிதர்சனமாகக் காணுகின்றோம். அல்லாஹ்வின் புனிதமான இம்மார்க்கத்தை அலட்சியம் செய்யும் போலி மார்க்க அறிஞர்களே திட்டமிட்டு கேள்வி கேட்பதைத் தடுத்து வருகின்றனர்.
இன்னும் சில ஊர்களில் ஆலிம்களிடம் அறிவுபூர்வமாக கேள்வி கேட்டால் ஊரைக் கூட்டி கேள்வி கேட்ட சகோதரரை ஊர் விலக்கம் செய்து அவரை அடித்துத் துன்புறுத்தி ஏதோ பாரிய திருட்டு மோசடியைச் செய்தவர் போன்று சித்தரிக்கும் சமூகக் கொடுமையை இன்று மேற்கொள்பவர்கள் யார்?
தங்களை இஸ்லாமிய இயக்கவாதிகள் என பள்ளிக்குப் பள்ளி ஊருக்கு ஊர் அறிமுகம் செய்யும் இவர்கள் ஏன் பொதுமக்கள் ஆதாரங்களைக் கேட்டால் கொதித்தெழ வேண்டும்? மார்க்கம் என்பது யாருடைய வீட்டுச் சொத்துமல்ல. ஒரு மௌலவியிடம் கேள்வி கேட்டால் ஆத்திரப்படுகின்றார் என்றால் அதனுடைய அர்த்தம் அவர் மார்க்கமென்று உங்களிடம் பொய் சொல்கின்றார் என்பதேயாகும். ஏனெனில் உலமாக்களின் பொருப்பும் கடமையும் மக்களுக்காக மார்க்கத்தை விளக்கி, ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பது மட்டுமே. ஒவ்வொரு ஊர்களிலும் ‘ஜம்இய்யதுல் உலமா’ என்ற பெயரில் இயங்கும் சபையும் இவ்விடயத்தில் அசமந்தப் போக்காக நடந்து கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அன்பார்ந்த உலமாக்களே!
அல்லாஹ்வின் தீனை இப்பூமியில் விளக்கும் பொறுப்பை நபிகளாருக்குப் பின்னால் நீங்களே பெற்றிருக்கின்றீர்கள். அன்றாடம் மக்களுக்கு ஏற்படும் புதிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பது உங்களின் மீதுள்ள பாரிய அமானிதமாகும். உங்களின் கடமையை சரிவர நீங்கள் நிறைவேற்றா விட்டால் அழ்ழாஹ்விடம் தப்பிக்க முடியாமல் போய்விடும்.
பெண்கள் தங்கத்தினாலான வளையல் நகைகளை அணிவது கூடுமா? கூடாதா? மையவாடியில் விஸ்தரிப்புக்காக கடைகள் அமைக்கலாமா? இல்லையா? போன்ற நவீன பிரச்சினைகளுக்கு ஏன் பதில் சொல்லாமல் நீண்ட மௌனம் காக்கின்றீர்கள்? சமூகத்திற்குப் பயந்து சத்தியத்தை மறைப்பதை அல்லாஹ் பின்வருமாறு கண்டிக்கின்றான். ‘அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்!’ (அல்குர்ஆன் 2:42) ஆக எல்லாம் வல்ல நாயன் அறிவார்ந்த மார்க்க அறிஞர்கள் மூலமாக இச்சமூகத்தை மேம்பாட்டிற்கும் எழுச்சிக்கும் இட்டுச் செல்வானாக!

அபூ அஹ்மத் அல் அதரி

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )