உலகில் வாழும் காலத்தில் தான் தோன்றித் தனமாக வாழும் எத்தனையோ பேர் தனது இறுதிக் காலத்தில் கவலைப்பட்டு, கைசேதப் படுவதைக் காண்கிறோம். மூஸா நபியை எதிர்த்த பிர்அவ்னுடைய நிலையை ஒத்ததாக பலருடைய நிலை மாறிவிடுகிறது.
மனித குலத்திற்குறிய நேரிய வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு மனிதனையும் மரணிக்கும் போது முஸ்லீம்களாக மரணித்துவிடும்படி வலியுறுத்துகிறது.
அல்லாஹ் தனது திருமறைக் குா்ஆனிலே ஒவ்வொரு மனிதனுடையவும் இறுதி நேரம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிக் குறிப்பிடும் போது மிக அழகான வழி முறையொன்றைக் காட்டித்தருகிறான்.
என் மக்களே! அல்லாஹ் உங்களுக்கு இம்மார்க்கத்தை தேர்வு செய்துள்ளான். முஸ்லீம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது என்று இப்றாஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினா். (குர்ஆன் 2: 132)
உலகம் தோன்றியதிலிருந்து அழியும் வரைக்கும் இந்த உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதனும் தனது வழிகாட்டியாக இஸ்லாத்தைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதுவல்லாத எந்த ஒரு மார்க்கமும் மனிதனின் வழிகாட்டியாக இருக்க முடியாது என்பதையும் மேற்கண்ட வசனம் எடுத்துரைக்கிறது.
இஸ்லாத்தைப் பொருத்தவரை மனிதன் எவ்வளவு பெரியவனாக கவுரவமானவனாக, அந்தஸ்தில் உயர்ந்தவனாக, கல்வியில் அறிவு முதிர்ச்சி பெற்றவான இருந்தாலும் இறைவனின் பார்வை அவனுடைய அறிவை, அந்தஸ்தை அடிப்படையாக வைத்து அமைவதல்ல மாறாக அவனுடைய கொள்கை என்ன? அவன் முஸ்லிமா? காபிரா? இதுதான் இறைவனின் பார்வை.
முஸ்லீம் அல்லாத யாராக இருந்தாலும் அவன் எவ்வளவு பெரியவானக இருந்தாலும் இறைவனின் பார்வையில் அவன் சல்லிக் காசுக்கு அருகதையற்றவனாக மாறிவிடுவான்.
நோயுடன் மரணிப்பது பாவமானதா?
மனிதர்களில் பெரும்பாலானவர்கள் தனது இறுதி நேரம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும், தான் நோயாளியாக மரணித்துவிடக் கூடாது என்பதில் தான் கவணமாக இருக்கிறார்கள்.ஒருவர் நோயாளியாக மரணித்தால் அது பெரிய பாவமான காரியம் என்பதைப் போலவும், மரணிக்கும் தருவாய் ஆரோக்கியமானதாகத் தான் இருக்க வேண்டும் என்று இறைவனின் சட்டம் இருப்பதைப் போலவும் பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் இஸ்லாத்தின் நிலைபாடு இதற்கு மாற்றமானதாகும்.
ஒரு முஸ்லீம் நோயாளியாக இருந்தால் அவருடைய பாவங்களை இறைவன் மண்ணிப்பதற்காகத் தான் அந்த நோயைக் கொடுக்கிறான் என்பது இஸ்லாத்தின் கொள்கை. இதே நேரம் நமக்கு ஏற்படும் நோயை நாம் பொருத்துக் கொண்டு இறைவனிடம் பொருப்புச் சாட்டி விட்டால் இறைவன் அதற்கான கூலியாக சுவர்க்கத்தைத் தருகிறான்.
குறிப்பிட்ட பெண்மணி ஒரு வலிப்பு நோயாளியாக இருந்து தனது நோயை நீக்கும்படி இறைவனிடம் பிரார்திக்குமாறு நபியவர்களிடம் வேண்டுகிறார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ நோயைப் பொருத்துக் கொண்டால் நீ சுவர்க்கம் செல்வாய் என்கிறார்கள் அதன் அடிப்படையில் அவா்களும் நோயைப் பொருத்துக் கொள்கிறார்கள்.
சுவர்க்கத்திற்கு நற்செய்தி சொல்லப் பட்டவர்களில் ஒருவராக இன்றைக்கும் நாம் அவா்களைப் பார்க்கிறோம்.
அதே போல் நபியவா்கள் தனது மரணத் தருவாயில் கடுமையான காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவா்களாகத்தான் உயிர் நீத்தார்கள், நோயாளியாக மரணிப்பது பாவத்திற்குறிய, தண்டனைக் குறிய குற்றமாக இருந்திருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களின் இறுதி நிலையைப் பற்றி என்ன சொல்வது என்ற கேள்வி எழுந்து விடும்.
ஆக ஒருவர் நோயாளியாக மரணித்தால் அது பாவமான, நரகத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் காரியம் அல்ல. ஆனால் ஒருவன் முஸ்லிமில்லாமல் காபிராக மரணித்தால் அவன் கண்டிப்பாக நரகத்திற்குத் தான் செல்வான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எப்படி மரணிக்கிறோமோ, அப்படியே எழுப்பப்படுவோம்.
ஒவ்வொரு மணிதர்களும் தான் மரணிக்கும் போது எந்த நிலையில் மரணிப்பார்களோ, அந்த நிலையில் தான் எழுப்பப் படுவார்கள் என்பது இஸ்லாம் மரணத்தைப் சொல்லுகின்ற ஒரு முக்கியமான செய்தியாகும்.
ஒவ்வொரு மனிதனும் எப்படி மரணிக்கிறானோ அப்படியே தான் (மறுமையில்) எழுப்பப்படுவான். (அறிவிப்பவர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல் முஸ்லிம் 5126)
நாம் எந்த நிலையில் மரணித்தாலும் அந்த நிலையில் தான் எழுப்பப் படுவோம் என்பதற்கான நேரடியான ஆதாரமாக மேற்கண்ட செய்தி இருக்கிறது.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:(இஹ்ராம் கட்டிய) ஒருவர் அரஃபா மைதானத்தில் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தனது வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் நீராட்டி இரு ஆடைகளால் பிரேத உடை (கஃபன்) அணிவியுங்கள்; அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் (இஹ்ராம் கட்டியிருந்த) அவர் மறுமை நாளில் தல்பியா (லப்பைக்...) சொல்லிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்'' எனக் கூறினார்கள். (புகாரி: 1265)
அரபா பெரு வெளியில் இஹ்ராம் கட்டிக் கொண்டு தல்பியா சொல்லிக் கொண்டிருந்தவா் தனது வாகனத்தில் இருந்து தவறி விழுந்துவிட்டார், நபியவர்கள் அவரைப் பார்த்து இவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப் படுவார் என்று சொல்கிறார்கள். ஏன் என்றால் அவருடைய மரண நேரம் அவா் தல்பியா சொல்லிக் கொண்டிருந்தார் என்பதே அதற்கான காரணம்.
ஆக ஒருவர் எந்த நிலையில் மரணிக்கிறாரோ அந்த நிலையில் தான் எழுப்பப்படுவார் என்பதற்கு மேற்கண்ட செய்திகள் ஆதாரமாகும்.
நாம் மரணிக்கும் போது முஸ்லீம்களாக இருந்தால் நாளை மறுமையில் வெற்றிபெற முடியும் மாறாக இறைவனுக்கு மாறு செய்பவர்களாக மரணித்தால் நரகத்தில் வீழ்ந்து நஷ்டமடைந்துவிடுவோம்.
உண்மை முஸ்லீம்களாக வாழ்ந்து மரணித்து நாளை மறுமையில் வெற்றி அடைவோமாக !
0 comments:
Post a Comment