இஸ்லாத்தின் அடிப்படை வணக்க வழிபாடுகளுள் நோன்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் மனித வாழ்க்கையின் முழுமையான நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் இதன் விளைவுகள் அமைந்திருக்கின்றன.
மனித வாழ்க்கைக்குரிய இறைவழிக்காட்டலான அல்குர்ஆனை ரமழான் மாதத்தில் இறைவன் இறக்கி வைத்ததிலிருந்து இம்மாதத்தினதும், இக்கடமையினதும் புனிதத்துவத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.
ஏனைய எல்லாக் கடமைகளோடும் தொடர்புபட்ட விளக்கங்களை வழங்கும் அல்குர்ஆனின் போதனைகள் இப்புனிதமான மாதத்தோடு தொடர்புபட்டதாகவே அமைந்திருக்கின்றன.
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ரமழான் வந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களிடம் வளம் மிக்க மாதமொன்று வந்துள்ளது. அதில் உங்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
அதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன.
ஆயிரம் மாதங்களை விடச்சிறந்த ஓர் இரவு அதில் இருக்கிறது. அந்த நன்மையை இழந்தவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான்.'' என்று கூறினார்கள். (அஹ்மத், நஸாஈ, பைஹகீ)
நோன்பு பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டுகிறது,
''விசுவாசிகளே! உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போல பயபக்தியுடையோர்களாக மாறலாம் என்பதற்காக உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது (அல்பகரா:183)
இந்த வசனத்தில் மனிதனுடைய வாழ்க்கை நெறிப்படுத்தப்படுகின்ற மூன்று முக்கியமான பிரிவுகளை இறைவன் சுட்டிக் காட்டுகின்றான். விசுவாசிகளே என விளீத்துப்பேசுவதிலிருந்து இறைவிசுவாசத்தின் முக்கியத்துவத்தை அவன் உணர்த்திக்காட்டுகிறான்.
ஒரு மனிதனிடத்தில் உண்மையான விசுவாசம் ஏற்பட்டதன் பின்னரே அவனால் செயல்கள் பற்றிய முடிவுக்கு வரமுடியும். இதனால்தான் அல்குர்ஆனில் ஈமானைப்பற்றிக்குறிப்பிடும் போது ''அமலுஸ் ஸாலிஹாத்" என்ற நல்ல செயல்களையும் இறைவன் தொடர்புபடுத்தி விடுகிறான். ஈமானுக்குப்பின்னர் நோன்பும், இறைவனைப்பற்றிய அச்சமும் அவனைப்புனிதப்படுத்தக் கூடியன என்ற கருத்து இங்கு தெளிவுபடுத்தப்படட்டுள்ளது.
நோன்பு நோற்கின்ற ஒரு முஸ்லிம் இறைவன் கூறுகின்ற கருத்துப்படி மூன்று முக்கியமான மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும்.அவன் முதலாவது வாழ்க்கையின் எல்லாக் கட்டத்திலும் அல்லாஹ்வை அஞ்சி நடக்கின்ற ஒரு நிலைக்கு மாற வேண்டும். இரண்டாவது, நேர்வழியை அருளியவனின் புகழ்பாடி அவனுடைய பெருமையை மேலோங்கச் செய்யவேண்டும். நன்மைகளை அருளியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.
இங்கு இறையச்சம், இறைவனைப் தூய்மைப்படுத்தல், இறைவனுக்கு நன்றி செலுத்தல் என்ற மூன்று அம்சங்களும் நோன்பின் விளைவுகளாக எடுத்துக் காட்டப்பட்டிருகின்றன. இத்தகைய விளைவுகளை நோன்பு மனிதனிடத்திலே ஏற்படுத்தவில்லையாயின் அது உண்மையில் நோன்பாக அமையமாட்டாது. உயிரற்ற உடலைப் போன்று,நறுமணமற்ற மலரைப்போல அந்நோன்பு காணப்படும்.
உடலின் நோன்பு மட்டும் இஸ்லாத்தின் எதிர்பார்ப்பல்ல, உள்ளத்தின் நோன்பையும் சேர்த்தே அதன் பெறுமதியை இஸ்லாம் மதிக்கிறது, இதனைத்தான் நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு குறித்துக்காட்டினார்கள்.
''நோன்பு பிடிப்பவர் பலர் பசியுடனும் தாகத்துடனும் இருப்பவர்களாக மட்டுமே நின்று விடுகின்றனர்.விலக்கப்பட்டதைச் செய்து நோன்பை முறித்துக்கொள்கினறனர். (ஆகுமான உணவு உன்பதை நிறுத்தி மனித ஊணைத்தின்கின்றனர். புறம் பேசுவது மனித மாமிசத்தைப் புசிப்பதாகும்.) எத்தனையோ மனிதர்கள் நோன்பு நோற்கின்றனர். அவர்கள் தாகித்திருந்ததைத் தவிர வேறு எந்தவொரு பயனும் அவர்களுக்கு இல்லை. எத்தனையோ மனிதர்கள் நின்று வணங்குகின்றனர். அவர்கள் விழித்திருந்ததைத் தவிர வேறு எந்தவொரு பயனும் அவர்களுக்கு இல்லை.(தாரமி)
நோன்பு ஓர் அலாதியான ஆத்மீக தெம்பினை மனிதனுக்கு வழங்குகின்றது. ஒருமாதகாலமாக ஆத்மீக மழையில் நனையக் கூடியபாக்கியம் அவனுக்குக்கிடைக்கின்றது. ஒரு வியாபாரி இலாபங்களை ஈட்டிக் கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே தயாராகின்றான். அதிகமாக முதலீடுகளைச் செய்கின்றான். எத்தனையோ சிரமங்களை எதிர்கொள்கின்றான்.
வாழ்க்கையில் ஒருமனிதனுக்கு ஒரு ரமழான் கிடைப்பதே பாக்கியமாகும். அதன் ஒவ்வொரு நிமிடமும் அருளாகும். அல்லாஹ்வின் அருள்மழையில் நனையும் பாக்கியத்தை யார்தான் இழக்க விரும்புவார்? இவவாறான ஒருமாதத்தை அடைந்து கொள்பவர்கள் நோன்பு நோற்பதிலும், இரவுநின்று வணங்குவதிலும், அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதிலும், திக்ர் செய்வதிலும் ஈடுபட்டுவருகிற போது அல்லாஹ்வோடு வாழ்வதில் ஒரு சுவையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
அப்போது இச்சாதாரண அடியானை அல்லாஹ் மிக உயர்ந்த இடத்தில் வைத்துநோக்குகின்றான். அவனைப்பற்றி அல்லாஹ் பெருமையடைகின்றான். அல்லாஹ்வின் உயர்ந்த அன்பும் திருப்தியும்தான் இங்கே மனிதனது நோக்கமாக அமைகின்றது. வேறு எத்தகைய உலக இலாபங்களோ முகஸ்துதியோ அங்கு காணப்படமாட்டாது.
ஆதமின் மக்கள் செய்யும் அமல்கள் அனைத்தும் அவனுக்காகவே புரியப்படுகின்றன நோன்பைத்தவிர. அது எனக்கே உரியது அதற்கு நானே கூலி கொடுக்கிறேன். எனக்காகவே அவன் உண்பதைத் தவிர்க்கின்றான், எனக்காகவே அவன் பானங்களைப் பருகாதிருக்கிறான் என்னைப் பயந்தே அவன் தனது ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்கிறான் எனக்குப் பயந்தே அவன் தனது மனைவியுடன் சேராதிருக்கிறான்.'' என்று அல்லாஹ் நோன்பாளிகளைப்பற்றிக் கூறுகிறான். (இப்னு குதைமா)
நோன்பாளி பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பது கொண்டு ஆத்மீக உணர்வுகளை வளர்த்துக்கொள்ளமுடியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் இவ்வாறுதான் தமது ஆத்மீகப் பசியைத் தீர்த்துக்கொண்டார்கள்.
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருப்பார்கள்.'' (புஹாரி, முஸ்லிம்)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ் தஆலா ரஸீல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வபாத்தாகும் வரை அவர்கள் ரமழானில் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்.'' (புஹாரி,முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ரமழானிலும் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்து வந்தார்கள். அவர்களது உயிர் கைப்பற்றப்பட்ட வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.'' (புஹாரி)
நோன்பு காலங்களில் சாதாரண நாட்களைவிட ஒருவர் தனது பிராத்தனைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நோன்பாளியோடு இறைவன் இரக்கப்படுகின்றான், அன்பு கொள்கின்றான், அவன் தன்னிடம் கேட்கிறானா என்பதை அவன் ஆவலோடு பார்த்திருக்கின்றான். இதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு தெளிவுப்படுத்தினார்கள்.
மூன்று பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தந்தை தனது பிள்ளைக்காகக் கேட்கின்ற துஆ, நோன்பாளியின் துஆ, பிரயாணியின் துஆ.''
நோன்பு நோற்கின்ற நோன்பாளி, நீதியான ஆட்சியாளன்,அநியாயம் இழைக்கப்பட்டவன் ஆகிய மூவருடைய பிரார்த்தனையை அல்லாஹ் நிராகரிப்பதில்லை.'' (திர்மிதி, அஹ்மத்)
நோன்பில் மனித ஆத்மாவுக்கு கிடைக்கும் இன்னொரு முக்கியமான உணவு இரவுத் தொழுகைகளாகும். அதில் ஓர் அலாதியான சுவை முஃமினுக்குக் கிடைக்கின்றது. அச்சுவையைப் பெற்றவர் ஒரு நாளும் அதனை இழக்க விரும்பமாட்டார்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் எழுந்து கால்கள் வீங்கும் அளவுக்கு நீண்ட நேரம் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதரே முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையிலும் ஏன் இப்படி தொழ வேண்டும் என்று கேட்டேன். அதற்கவர்கள் நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா என்று பதிலளித்தார்கள்.'' (புஹாரி,முஸ்லிம்)
இவ்வாறு தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏனையோரும் இதன் உயர்ந்த பலனைப்பெற வேண்டுமென்ற வகையில் அடுத்தவர்களையும் தூண்டினார்கள்.
''மனிதர்களே! நீங்கள் ஸலாத்தைப் பரப்புங்கள். (ஏழைகளுக்கு) உணவளியுங்கள் மேலும், மனிதர்கள் இரவில் ஆழ்ந்து நித்திரை செய்யும் போது நீங்கள் எழுந்து கொள்ளுங்கள்,(அப்படியெனில்) மிக நிம்மதியாக சுவர்க்கத்தில் நுழைவீர்கள்.'' (திர்மிதி)
இவ்வாறான இரவுத்தொழுகைகளின் மூலம் அல்லாஹ்வை மனிதன் நெருங்க முடியும்.
ஹதீஸ் குத்ஸியொன்றில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். இரவில் மூன்றில் ஒரு பகுதி கழிந்தவுடன் அல்லாஹுத்தஆலா அடிவானத்திற்கு இறங்கி வந்து, என்னுடைய அடியார்களில் யார் பாவமன்னிப்புதேடுகிறார்கள்? நான் அவர்களை மன்னிக்க காத்திருக்கின்றேன் யார் என்னிடம் கேட்கிறார்கள் நான் அவர்களுக்கு கொடுக்கக் காத்திருக்கிறேன் அடியான் என்னை நோக்கி ஒரு சாண் வந்தால் நான் அவனை நோக்கி ஒருமுழம் வருவேன் அவன் நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்.''
ஹதீஸ் குத்ஸியொன்றில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். இரவில் மூன்றில் ஒரு பகுதி கழிந்தவுடன் அல்லாஹுத்தஆலா அடிவானத்திற்கு இறங்கி வந்து, என்னுடைய அடியார்களில் யார் பாவமன்னிப்புதேடுகிறார்கள்? நான் அவர்களை மன்னிக்க காத்திருக்கின்றேன் யார் என்னிடம் கேட்கிறார்கள் நான் அவர்களுக்கு கொடுக்கக் காத்திருக்கிறேன் அடியான் என்னை நோக்கி ஒரு சாண் வந்தால் நான் அவனை நோக்கி ஒருமுழம் வருவேன் அவன் நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்.''
லைலத்துல்கத்ர்
நோன்பின் அதி உயர்ந்த அருட்பாக்கியம் லைலத்துல்கத்ர் இரவாகும். இவ்விரவை பரகத் நிறைந்த இரவென்றும் ஆயிரம் மாதங்களைவிடச்சிறந்த இரவென்றும் அல்குர்ஆன் வர்ணிக்கின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவவிரவின் சிறப்பு பற்றி விளக்கிக் காட்டினார்கள். ''லைலதுல் கத்ர் இரவில் யாராவது ஒருவர் ஈமானிய உணர்வோடும் அல்லாஹ் தருவான் என்ற எதிர்ப்பார்ப்போடும் வணங்கினால் அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.'' (புஹாரி,முஸ்லிம்)
இப்புனித இரவில் இபாதத் புரிவதென்பது ஆயிரம் மாதங்கள் இபாதத் புரிந்த நன்மையை வழங்ககூடியது என்பதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் பிரயோசனங்களை எடுத்துக் கொள்ள முற்பட்டதோடு தனது குடும்பத்தினரையும் அதற்காகத் தூண்டினார்கள் என்பதை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் ஓர் அறிவிப்பு தெளிவுபடுத்துகின்றது.
ரமழானின் இறுதிப் பத்தை அடைந்தால் இரவில் விழித்திருந்து வணக்கங்களில் ஈடுபடுவார்கள் தனது குடும்பத்தினரையும் எழுப்பி விடுவார்கள் தன் இல்லற வாழ்விருந்து ஒதுங்கிக் கொள்வார்கள். (புஹாரி,முஸ்லிம்)
லைலத்துல் கத்ர் இரவு நரக விடுதலைக்காக அதிகம் பிரார்த்தனை புரியப்படும் இறுதிப்பத்தில் வருகின்றது ரமழானின் இறுதிப்பத்தில் லைலத்துல் கத்ரை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் (புஹாரி) என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்துக் காட்டினார்கள்.
அவ்விரவைத் தேடி அமல்கள் புரிவதும், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் மனிதனுக்குக் கிடைக்கும் உயரிய வரப்பிரசாதமாகும்.சில துர்ப்பாக்கியசாலிகள் நோன்பையே ஒரு சுமையாகக் காண்கின்றனர் அவர்களுக்கு லைலத்துல் கத்ரோ இரவுத் தொழுகைகளோ ஒரு பொருட்டாகத் தென்படுவதில்லை. அவர்கள் பற்றியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்.
யார் இத்தினத்தில் நன்மைகள் செய்வதை விட்டும் தடுத்துக் கொள்கிறாரோ அவர் தன் பாதையில் தடையை ஏற்படுத்திக் கொள்கிறார். நோன்பில் ஸஹர் செய்வதிலும் ஆத்மீக உறவு வளர்கின்றது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். ஸஹர் செய்யுங்கள் நிச்சயமாக ஸஹர் செய்வதில் பரகத் இருக்கிறது. (புஹாரி)
ஸஹர் செய்வது பரகத் ஆகும் எனவே ஸஹர் செய்வதை விட்டு விடாதீர்கள். ஒரு மிடர் தண்ணீரை அருந்தியாவது சஹர் செய்யுங்கள். ஏனென்றால் ஸஹர் செய்பவர்களுக்காக அல்லாஹ் அருள் புரிகின்றான்.மேலும் வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். (அஹ்மத்)
உலக வாழ்க்கையில் மனிதன் காரியங்களை ஆற்றுகின்ற போது பல்வேறு தவறுகளைப்புரியலாம். இத்தவறுகள் உலக வாழ்க்கையிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடுவதோடு, மறுமையில் இறைவனது தண்டனைகளையும் ஒருவனுக்கு கொடுத்து விடும். இதனால் தவறு செய்கின்ற ஒரு நிலையிலிருந்து ஒருவனை மாற்றி விடுவதற்காக பாவமன்னிப்பு என்ற அம்சத்தை இறைவன் ஏற்படுத்தியிருக்கின்றான். மிகக் கூடுதலாக பாவமன்னிப்பு பற்றிய விடயம் நோன்போடு தொடர்புபடுத்தி விளக்கப்படுகிறது.
யார் ஈமானுடனும், கண்காணிப்புடனும் ரமழான் நோன்பை நோற்கின்றாரோ அவரது முன்,செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் (அஹ்மத், திர்மிதி, நஸஈ, இப்னுமாஜா, அபுதாவூத்) என நபியவர்கள் கூறினார்கள்.
ஒரு மனிதன் புரியும் தவறுகள் பாவமன்னிப்பால் நீக்கப்படுகின்ற போது அவன் புது மனிதனாக மாறி சமூக பிரச்சினைகளை நல்ல முறையில் எதிர்கொண்டு தனக்கும், சமுதாயத்துக்கும் பிரயோசனமுள்ளவனாக மாற வழி பிறக்கிறது. நோன்பு மாதம் நன்மைகளை அள்ளிக் கொட்டும்மாதமாகும். இதனால் நோன்பு வருகின்ற போதே நபியவாகள் நன்மைகளை முடிந்தவரை தேடிப் பெற்றுக்கொள்ளத் தயாராகிவிடுவதாக ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன்.
ஒரு முஸ்லிம் இச்சந்தர்பத்தை நழுவவிடக் கூடாதென இஸ்லாம் விரும்புகின்றது. பாவங்களிலிருந்து விடுபட்டு சுவர்க்கத்துக்குச் செல்ல அவன் ஆசைப்பட வேண்டும். ஹதீஸ்கள் அவ்வாசையை அவனுக்கு ஊட்டிக் கொண்டே இருக்கின்றன.
ஒரு முஸ்லிம் இச்சந்தர்பத்தை நழுவவிடக் கூடாதென இஸ்லாம் விரும்புகின்றது. பாவங்களிலிருந்து விடுபட்டு சுவர்க்கத்துக்குச் செல்ல அவன் ஆசைப்பட வேண்டும். ஹதீஸ்கள் அவ்வாசையை அவனுக்கு ஊட்டிக் கொண்டே இருக்கின்றன.
சுவர்க்கத்தில் அர்ரய்யான் எனப்படும் ஒரு வாயில் உண்டு. நோன்பாளிகள் மாத்திரமே மறுமையில் அதனுடாக நுழைவர். அவர்களைத் தவிர வேறு யாரும் அதனூடாக நுழையமாட்டார்கள்.நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும். அப்போது அவர்கள் எழுந்து அதனூடாக நுழைந்து சுவர்க்கம் செல்வார்கள். அவர்களனைவரும் சென்ற பின்பு அந்த வாயில் மூடப்படும். (புஹாரி,முஸ்லிம்)
0 comments:
Post a Comment