Aug 25, 2011

நோன்பு - தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

நோன்பு - தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
o நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல் o மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது
o நோன்பு வைத்துக் கொண்டு குளித்தல்
o நோன்பாளி உணவை ருசி பார்த்தல், நறுமணம் பூசிக் கொள்ளுதல்
o இரத்தத்தை வெளியேற்றுதல்
o நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்றல்
o சிறுவர்கள் நோன்பு நோற்பது

 நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்

நோன்பை முறிக்கும் காரியங்களை ஒருவர், தான் நோன்பு நோற்றுள்ள நினைவு இல்லாமல் செய்து விடலாம். பதினோரு மாதப் பழக்கத்தின் காரணமாக, தாகம் எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்து விடுவது உண்டு. குடித்தவுடன் அல்லது பாதி குடித்தும் குடிக்காமலும் உள்ள நிலையில் நோன்பு நோற்ற நினைவு வரும். இந்த நோன்பின் கதி என்ன? மறதியாகச் சாப்பிட்டால் அல்லது குடித்தால் எப்போது நினைவு வருகிறதோ உடனே அதை நிறுத்திக் கொண்டு விட்டால் அவரது நோன்புக்கு எள்ளளவும் குறைவு ஏற்படாது. நோன்பாளியாகவே அவர் தனது நிலையைத் தொடரலாம்.


ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாகச் சாப்பிட்டாலோ பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1933, 6669)

அவர் களாச் செய்ய வேண்டியதில்லை என தாரகுத்னீயில் இடம் பெற்ற ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. எனவே மறதியாகச் சாப்பிட்டவர்கள், பருகியவர்கள், நினைவு வந்ததும் உண்ணுவதையும், பருகுவதையும் நிறுத்தி விட்டு நோன்பாளிகளாக இருந்து கொள்ள வேண்டும். அது முழுமையான நோன்பாக அமையும். நோன்பு நோற்றவர் மறதியாக உடலுறவு கொள்வது சாத்தியக் குறைவானதாகும். இது இருவர் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் ஒருவருக்கு மறதி வந்தால் மற்றவர் நினைவு படுத்திவிட முடியும். ஆனாலும் உண்மையிலேயே இருவருக்கும் மறதி ஏற்பட்டு விட்டால் இருவருக்கும் இது பொருந்தக் கூடியது தான்.

 மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது 

நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தமது மனைவியரை முத்தமிடுவார்கள்; கட்டியணைப்பார்கள். அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 1927)

நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்ட போது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 2039)

இதில் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது தான் முக்கியமான அளவுகோலாகும். முத்தமிடுவதில் ஆரம்பித்து உடலுறவில் போய் முடிந்து விடும் என்று யார் தன்னைப் பற்றி அஞ்சுகிறாரோ அத்தகையவர்கள் பகல் காலங்களில் அதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது இல்லறத்தில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்வதற்காக எழக்கூடியவர்கள் குளித்து விட்டுத் தான் ஸஹர் செய்ய வேண்டுமா? இது குறித்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறை என்ன? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டுக் குளிக்காமல் நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காகக் குளிப்பார்கள் என்று கூறும் 
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன. 

ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள். (அறிவிப்பவர்கள்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 1926, 1930, 1932)

தொழுகையை நிறைவேற்றத் தான் குளிப்பது அவசியமே தவிர நோன்புக்காகக் குளிக்க வேண்டியதில்லை. குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்று விட்டு சுப்ஹு தொழுகைக்காகக் குளிக்கலாம்.

 நோன்பாளி உணவை ருசி பார்த்தல், குளித்தல், நறுமணம் பூசிக் கொள்ளுதல் 

நோன்பு வைத்துக் கொண்டு குளித்தல்

நோன்பு நோற்றவர் நோன்பு துறக்கும் முன் குளிக்கக் கூடாது என்று சிலர் எண்ணுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாகத் தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். (நூல்கள்: அஹ்மத் 22107, அபூதாவூத் 2018)

நோன்பாளி உச்சி வெயில் நேரத்து வறட்சியைக் குறைத்துக் கொள்வதற்காகக் குளிப்பதும், தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்வதும் கூடும் என்பதை இதிலிருந்து அறியலாம். சில பகுதிகளில் ஆறு, குளம், ஏரிகளில் குளிக்கும் வழக்கம் உள்ளது. அவ்வாறு குளிக்கும் போது காதுகளையும், மூக்கையும் விரல்களால் அடைத்துக் கொண்டு குளிக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். காதுகள் வழியாகவோ, மூக்கின் வழியாகவோ தண்ணீர் உள்ளே செல்லக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். இதற்கும் ஆதாரம் இல்லை. காதுகளுக்குள்ளேயும் மூக்குக்கு உள்ளேயும் தண்ணீர் செல்வது நோன்பை முறிக்கும் என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறவில்லை.

காதுகளையும், மூக்கையும் அடைக்காமலே தண்ணீரில் மூழ்கிக் குளிக்கலாம். நறுமணம் பயன்படுத்துதல் நோன்பு நோற்றவர்கள் குளிக்கும் போது வாசனை சோப்புகள் போடக் கூடாது என்றும், உடம்பிலோ ஆடையிலோ நறுமணம் பூசிக் கொள்ளக் கூடாது என்றும் பலர் நினைக்கின்றனர். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர்கள் நறுமணம் பூசுவதைத் தடை செய்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பாளிக்கு இத்தகைய தடை எதனையும் பிறப்பிக்கவில்லை. நோன்பாளி நறுமணம் பூசக் கூடாது என்றிருந்தால் அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்கள். எனவே சோப், பவுடர், இதர நறுமணப் பொருட்களை நோன்பாளிகள் தாராளமாகப் பயன்படுத்தலாம். இதனால் நோன்புக்கு எந்தப் பாதகமும் ஏற்படாது.

நோன்பு நோற்றவர் பல் துலக்குதல் நோன்பு நோற்றவர் நோன்பு துறந்த பிறகு தான் பல் துலக்க வேண்டும். அதற்கு முன் பல் துலக்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரும் வாடை அல்லாஹ்வுக்கு கஸ்தூரியை விட விருப்பமானது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இதைத் தவிர இவர்களுக்கு வேறு ஆதாரம் இல்லை. இந்த வாதம் ஏற்க முடியாத வாதமாகும். நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை வாயில் உற்பத்தியாவதில்லை. காலியான வயிற்றிலிருந்து தான் அந்த வாடை உற்பத்தியாகின்றது. பல் துலக்குவதால் நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரும் வாடை நீங்கிவிடப் போவதில்லை. எனவே இவர்களின் கருத்தை நாம் ஏற்க வேண்டியதில்லை.
ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதை வலியுறுத்தி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதால் நோன்பாளி பல் துலக்கலாம்.

நோன்பாளி பல் துலக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் சிலர் கை விரலாலோ, பல் துலக்கும் குச்சியாலோ தான் பல் துலக்க வேண்டும் என்றும் பல்பொடி, பற்பசை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறுகின்றனர். இவற்றுக்கு சுவை இருக்கிறது என்று காரணம் கூறுகின்றனர். பற்பசைக்குரிய சுவை பற்பசையில் உள்ளது போலவே சாதாரண குச்சியிலும் அதற்குரிய சுவை இருக்கத் தான் செய்கிறது. எனவே சுவையைக் காரணம் காட்டி இதைத் தடுக்க முகாந்திரம் இல்லை.

தண்ணீரில் வாய் கொப்பளிக்கும் போது கூட தண்ணீரின் சுவையை நாக்கு உணரத் தான் செய்யும். இவ்வாறு உணர்வதற்குத் தடையேதும் இல்லை. உண்பதும், பருகுவதும் தான் தடுக்கப்பட்டுள்ளது. பல் துலக்கியவர் பல் துலக்கிவிட்டு விழுங்க மாட்டார். எனவே இதைத் தடை செய்ய சரியான காரணம் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. உணவுகளை ருசி பார்த்தல் உணவு சமைக்கும் போது, போதுமான அளவு உப்பு மற்றும் காரம் உள்ளதா என்பதை அறிய நாக்கில் வைத்துப் பார்ப்பது பெண்களின் வழக்கமாக உள்ளது. நோன்பு நோற்றவர் இவ்வாறு ருசி பார்ப்பதில் தவறேதும் இல்லை. உள்ளே விழுங்கி விடாமல் ருசி பார்க்கலாம்.

மேலே நாம் சொன்ன அதே காரணங்களால் இதையும் தடுக்க முடியாது. எச்சிலை விழுங்குதல் நோன்பு நோற்றவர்கள் வாயிலிருந்து ஊறும் எச்சிலை அடிக்கடி உமிழ்ந்து கொண்டே இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நோன்பினால் ஏற்பட்ட வறட்சியை இதன் மூலம் இவர்கள் மேலும் அதிகமாக்கிக் கொள்கின்றனர். எச்சிலை விழுங்கக் கூடாது என்றோ, அடிக்கடி காரி உமிழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றோ அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கட்டளையிடவில்லை.

நோன்பாளி உணவை ருசி பார்த்தல், குளித்தல், நறுமணம் பூசிக் கொள்ளுதல் போன்றவை நபித் தோழர்கள் காலத்தில் நோன்புக்கு எதிரானதாகக் கருதப்பட்டதில்லை. பிற்காலத்தில் வந்த அறிவீனர்கள் தான் இதை நோன்புடன் சம்பந்தப்படுத்தி விட்டனர். புகாரியில் நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்களின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

o இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது துணியைத் தண்ணீரில் நனைத்து, தன் மீது போட்டுக் கொள்வார்கள்.

o சமைக்கப்பட்ட உணவை ருசி பார்ப்பது தவறில்லை என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.

o வாய் கொப்பளிப்பதும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் பஸரி கூறினார்.

o உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொண்டு வெளியே வரட்டும் என்று இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

o என்னிடம் கல்லால் ஆன தண்ணீர்த் தொட்டி உள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு அதில் மூழ்கிக் குளிப்பேன் என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.

o பச்சையான குச்சியால் பல் துலக்குவது குற்றமில்லை என்று இப்னு சீரீன் கூறினார். அதற்கு ருசி இருக்கிறதே என்று ஒருவர் கேட்டார். அதற்கவர்கள் தண்ணீருக்கும் தான் ருசி உள்ளது. ஏன் வாய் கொப்பளிக்கிறாய்? என்று திருப்பிக் கேட்டார்கள். இது புகாரி 1930வது ஹதீஸுக்கு முன்னால் உள்ள பாடத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தக் காரியங்கள் நோன்புக்கு எதிரானது என்ற கருத்து பிற்காலத்தில் உருவானது என்பதற்கு, புகாரியில் இடம் பெற்ற இந்தச் செய்திகள் ஆதாரமாகவுள்ளன.

 இரத்தத்தை வெளியேற்றுதல் 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலும் அதற்கடுத்த கால கட்டத்திலும் அரபியரிடம் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு, கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி வெளியேற்றி வந்தனர். கண்ணாடிக் குவளையைப் பயன்படுத்தியும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி வந்தனர். இது உடலுக்கு ஆரோக்கியமானது எனவும் நம்பி வந்தனர். இந்த வழக்கம் இன்றைக்கு ஒழிந்து விட்டாலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்த இந்த நடைமுறையிலிருந்து வேறு பல சட்டங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.  

இரத்தம் கொடுப்பவரும், எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ (705)

இந்தக் கருத்தில் இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளன. ஆனாலும் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இந்தச் சட்டம் நடைமுறையிலிருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது. இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். அப்போது, இரத்தம் கொடுத்தவரும் எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்று கூறினார்கள். இதன் பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: தாரகுத்னீ (பாகம்: 2, பக்கம்: 182)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நோன்பு நோற்றவர் இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுத்ததுண்டா? என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் (இதனால்) பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதை நாங்கள் வெறுத்தோம் என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ நூல்: புகாரி 1940)

நோன்பு நோற்றவர் உடலிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதை ஆதாரமாகக் கொண்டு, உயிர் காக்கும் அவசியத்தை முன்னிட்டு இரத்த தானம் செய்வதால் நோன்பு முறியாது என்பதை அறிந்து கொள்ளலாம். நோன்பு நோற்றவர் உடலில் இரத்தம் ஏற்றிக் கொள்ளுதல், குளுகோஸ் ஏற்றிக் கொள்ளுதல், ஊசி மூலம் மருந்துகளை உடலில் ஏற்றிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இதை ஆதாரமாகக் காட்ட முடியாது. ஏனெனில் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும் உள்ளே செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. வெளியேற்றுவதற்கான சான்று உள்ளே செலுத்துவதற்குப் பொருந்தாது. மேலும் குளுகோஸ் ஏற்றும் அளவுக்கு ஒருவரது நிலை இருந்தால் அவர் நோன்பை முறித்துவிட சலுகை பெற்றவராக இருக்கிறார்.

குளுகோஸ் ஏற்றிக் கொண்டு நோன்பை முறித்து மற்றொரு நாளில் முறித்த நோன்பை களாச் செய்யலாம். குளுகோஸ் ஏற்றும் நிலைமை ஏற்படாமல் உடலுக்குத் தெம்பு ஏற்றும் நோக்கத்தில் குளுகோஸ் ஏற்றினால் அது கூடாது என்று கூறலாம். ஏனெனில் குளுகோஸ் என்பது உணவுடைய நிலையில் தான் உள்ளது. உணவு உட்கொள்வதற்குப் பதிலாக குளுகோஸ் ஏற்றிக் கொண்டு உணவு உட்கொண்டது போன்ற சக்தியைப் பெற இயலும். எனவே உண்ணக் கூடாது என்ற தடையை மீறியதாகவே இது அமையும். இது போலவே இரத்தம் ஏற்றும் நிலையும் சாதாரண நிலையில் நடப்பது அல்ல! உயிர் காக்கும் அசாதாரணமான நிலையில் தான் இரத்தம் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும். இது போன்ற நிலைமையை அடைந்தவர் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளார்.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விடுவது இவரைப் பொறுத்த வரை கடமையாகவும் ஆகிவிடும். ஊசி மூலம் மருந்து செலுத்தும் அளவுக்கு உடல் நிலை சரியில்லாதவரும் நோன்பை விட்டு விட அனுமதி பெற்றவர் தான். நோயாளியாக இருப்பவர் வேறு நாளில் வைத்துக் கொள்ள இறைவன் தெளிவான வழி காட்டியிருக்கும் போது இவர்கள் நோன்பை விட்டுவிடுவதே சிறப்பாகும்.

அப்படியே உடலுக்குள் இவற்றைச் செலுத்தினால் வயிற்றுக்குள் சென்று செயல்படுவதை விட விரைவாக இரத்தத்தில் கலப்பதால் உணவு உட்கொண்டதாகத் தான் இதைக் கருத வேண்டும். ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது முக்கியமான கொள்கையாகும். ஒவ்வொருவரும் தத்தமது செய்கைகளுக்குப் பொறுப்பாளிகள் என்றாலும் இதிலிருந்து சில வணக்கங்கள் மட்டும் விதி விலக்குப் பெறுகின்றன. நோன்பும் அவ்வாறு விதிவிலக்குப் பெற்ற வணக்கங்களில் ஒன்றாகும்.

 நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்றல் 

நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 1952)

ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார். அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா?என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆம்! நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1953)

புகாரியின் மற்றொரு ஹதீஸில் ஒரு பெண் வந்து இவ்வாறு கேட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நோன்பு கடமையாகி களாவாகவுள்ள நிலையில் யாரேனும் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருக்காக நோன்பு நோற்கலாம் என்று கூறுவதை விட நோற்பது அவசியம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கடனுடன் நோன்பை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒப்பிட்டுள்ளார்கள். மேலும் கடனை விட நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதியுடையது எனவும் கூறுகிறார்கள். 

இறந்தவர்களுக்காக மார்க்கத்தில் இல்லாத கத்தம் பாத்திஹா ஓதுவதை விடுத்து இறந்தவர் மீது நோன்பு களாவாக இருந்தால் அதை நிறைவேற்றலாம். இறந்தவரின் சொத்துக்களுக்கு மட்டும் வாரிசாக ஆசைப்படுவோர் மார்க்கம் அவர்கள் மீது சுமத்திய இந்தக் கடமையைச் செய்வதில்லை.

நாமறிந்த வரை பெற்றோர்களுக்காக ஹஜ் செய்பவர்களைக் கூட காண்கிறோம். ஆனால் நோன்பு நோற்பவர்களைக் காண முடியவில்லை. பெற்றோர் மீது கடமையான நோன்புகள் களாவாக இருந்தால் தான் வாரிசுகள் நோற்க வேண்டும். உபரியான சுன்னத்தான நோன்புகளுக்கு ஆதாரம் இல்லை. ஏனெனில் இறந்தவர்களை அது குறித்து அல்லாஹ் விசாரிக்க மாட்டான். மேலும் இந்த ஹதீஸில் கடமையான நோன்பு பற்றியே கூறப்பட்டுள்ளது.


 சிறுவர்கள் நோன்பு நோற்பது 

சிறுவர்கள் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் எல்லாக் கடமைகளும் பருவ வயதை அடைந்தவர்களுக்கு மட்டுமே உரியதாகும். சிறுவர்களுக்கு நோன்போ, தொழுகையோ கடமையில்லை என்றாலும் தொழுகைக்கு ஏழு வயது முதலே பயிற்சியளிக்க வேண்டும். பத்து வயதில் தொழாவிட்டால் அடிக்க வேண்டும் என்றெல்லாம் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை இத்தகைய கட்டளை ஏதும் நபிகள் நாயகத்தினால் பிறப்பிக்கப்படவில்லை. பருவமடைந்தவர்களுக்கே பயணத்தில் இருப்பதாலும், நோயாளியாக இருப்பதாலும், கர்ப்பிணியாக இருப்பதாலும் நோன்பிலிருந்து மார்க்கம் சலுகையளித்துள்ளது. எனவே சிறுவர்களை தொழுகையைப் போல் கட்டாயப்படுத்தி நோன்பு நோற்குமாறு வற்புறுத்தக் கூடாது.

தொழுகைக்குப் பலவிதமான நடைமுறைகள், ஓத வேண்டியவை உள்ளன. அவற்றையெல்லாம் சிறுவயது முதலே கற்றுப் பயிற்சி எடுக்கும் அவசியம் உள்ளது. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை பருவமடைந்தால் அடுத்த நாளே நோன்பைக் கடைப்பிடிக்க முடியும். அதே நேரத்தில் சிறுவர்களுக்குச் சக்தியிருந்தால் அவர்களையும் நோன்பு நோற்கச் செய்ய அனுமதி உள்ளது. அனுமதி தானே தவிர அவசியமில்லை. ரமளான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு தான் கடமையான நோன்பாக இருந்தது. இந்த நோன்பு குறித்துப் பின்வரும் செய்தி புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

ஆஷுரா தினத்தில் நாங்களும் நோன்பு நோற்போம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். அவர்களுக்குத் துணியால் விளையாட்டுப் பொருளையும் தயார் செய்து வைத்துக் கொள்வோம். அவர்கள் உணவு கேட்கும் போது அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து நோன்பு துறக்கும் வரை கவனத்தைத் திருப்புவோம். (அறிவிப்பவர்: ருபைய்யி பின்த் முஅவித் ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி 1960, முஸ்லிம் 2092)

இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள் என்பது தான் தெரிகிறது. அவர்கள் தொழுகைக்குக் கட்டளையிட்டது போல் கட்டளை இடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும் ஆஷுரா நோன்பு என்பது ஒருநாள் மட்டுமே நோற்கும் நோன்பாகும். ஒரு நாள் என்பதால் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காட்டலாம். ரமளான் நோன்பு ஒரு மாதம் முழுவதும் உள்ள நோன்பாகும்.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )