Aug 29, 2011

ஜும்ஆவும் பெருநாளும் இணைந்து வந்தால் பெருநாள் தொழாமல் ஜும்ஆ மட்டும் தொழலாமா?


o  ஜும்ஆவும் பெருநாளும் இணைந்து வந்தால் பெருநாள் மட்டும் தொழுதால் போதுமானது'' என்பது நபிமொழி; பெருநாள் தொழாமல் ஜும்ஆ மட்டும் தொழலாமா?

o ஹஜ்ஜுக்கு செல்வோரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என் சலாத்தினை எத்தி வைத்து விடுங்கள் என்று கூறலாமா?

ஐயம் 1 : ஜும்ஆவும் பெருநாளும் இணைந்து வந்தால் பெருநாள் மட்டும் தொழுதால் போதுமானது என்பது நபிமொழி; பெருநாள் தொழாமல் ஜும்ஆ மட்டும் தொழலாமா? ஜும்ஆ தொழாவிட்டல் லுஹர் தொழ வேண்டுமா? வேண்டாமா? இதற்குச் சரியான ஆதாரம் உண்டா? விளக்கவும்.

தெளிவு: இது பற்றிய ஹதீஸ்கள் வருமாறு:
""உங்களுக்கு இன்று இரண்டு பெருநாட்களும் ஒன்று சேர்ந்து (வந்து)ள்ளன. எனவே எவர் நாடுகின்றாரோ அவருக்குப் பெருநாள் தொழுகையே ஜும்ஆ தொழுகையைப் போதுமாக்கி வைத்துவிடும். (எனவே தொலைவிலுள்ள பகுதிகளிலிருந்து பெருநாள் தொழ வந்திருப்பவர்கள் விரும்பினால் தம் இல்லத்திற்குச் சென்று மீண்டும் ஜும்ஆவிற்காக வரும்சிரமத்திற்கு ஆளாக வேண்டாம்). ஆனால் நிச்சயமாக நாங்கள் ஜும்ஆ தொழத்தான் செய்வோம்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவூது, அல்ஹதீஸ் 3262)

..... நான் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பெரு நாள் தொழுகை தொழச் சென்றேன்; அப்பொழுது அவர்கள் குத்பா பேருரை நிகழ்த்துவதற்கு முன்னர் தொழ வைத்தனர். அன்றி அந்த நாள் வெள்ளிக் கிழமையாகவும் இருந்தது. எனவே அவர்கள் மதீனாவைச் சுற்றிலும் உள்ளவர்களை நோக்கி, "எவர் ஜும்ஆ தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்க விரும்புகிறாரோ அவர் அவ்விதம் இருக்கவும், எவர் தம் இல்லம் திரும்பிவிட விரும்புகிறாரோ அவருக்கு நாம் நிச்சயமாக அனுமதி வழங்குகிறோம்’ என்று கூறினர். அபூ உபைத் ஸயீதுப்னு உபைது. (புகாரீ, முஸ்லிம், அல்ஹதீஸ் 3263)

இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வெள்ளிக் கிழமையன்று முற்பகலில் பெருநாள் தொழுகை தொழ வைத்தனர். பின்னர் ஜும்ஆ தொழுகைக்கு நாங்கள் சென்றோம். அப்பொழுது அவர்கள் எங்கள் முன் வந்தார்களில்லை. எனவே நாங்கள் (ளுஹரை) தனித்தனியே தொழுது கொண்டோம். இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (அப்பொழுது) தாயிஃபில் இருந்தனர். பின்னர் அவர்கள் (மதீனா) வந்ததும் நாங்கள் அவர்களிடம் (இச்) செய்தியைக் கூறினோம். அதற்கு அவர்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) சுன்னத்திற்கேற்பச் செய்திருக்கிறார்கள் என்று கூறினர்.

மற்றோர் அறிவிப்பில், வெள்ளிக் கிழமையும் ஃபித்ரா பெருநாளும் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கிலாஃபத்தில்(ஒரு தடவை) ஒன்று சேர்ந்து வந்தன. அப்பொழுது அவர்கள் இரண்டு பெருநாட்களும் ஒரே நாளில் ஒன்று சேர்ந்து வந்திருக்கின்றன’, என்று கூறிய பின்னர் இரண்டையும் ஒன்றாக இணைத்து இரண்டு ரகாஅத்துகள் காலையில் தொழு(க வைத்)தனர். இரண்டிற்கு அதிகமாகத் தொழவில்லை அசர் தொழும் வரை. (அதாஃ இப்னு அபீரிபாஹ், அபூதாவூது, நஸயீ, அல்ஹதீஸ் 3264)

இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு பெரு நாட்கள் என்று கூறி மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடுவதை நினைவுபடுத்துகிறார்கள். தொலைவிலிருந்து வந்தவர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்குப் போய் திரும்பி வருவது சிரமம் என்ற காரணத்தாலும் பெருநாள் தொழுகையில் ஒன்று கூடிவிட்டதாலும் மீண்டும் ஒன்று கூடும் அவசியம் இல்லை என்ற கருத்தில் சொன்ன தாகவே விளங்க முடியும். "ஆனால் நிச்சயமாக நாங்கள் ஜும்ஆ தொழத்தான் செய்வோம்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருப்பது இதை உறுதிப் படுத்துகிறது.

பெருநாள் தொழுகை மக்கள் அனை வரும் பெருநாள் திடலில் ஒன்று கூடுவதை வலியு றுத்துமகிறதே அல்லாமல், பெருநாள் தொழு கையை ஃபர்ழ்-கடமையான தொழுகை என எடுத்துக் கொள்ள ஹதீஸில் ஆதாரம் இல்லை. அது கடமையான தொழுகை என்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைத் தெளிவு படுத்தி இருப்பார்கள்.

பெருநாள் தொழுகை தொழாமல் ஜும்ஆ தொழுகை தொழும் ஒருவரைக் குற்றப்படுத்த ஆதாரமில்லை. ஆனால் பெருநாள் தொழுகை தொழுது விட்டு வீடு சென்றவர்கள் மீண்டும் ஜும்ஆவுக்கு வருவது கட்டாயம் இல்லை என்றாலும் தங்கள் பகுதியில் ளுஹர் தொழ வேண்டும் என்பதையே ""நிச்சயமாக நாங்கள் ஜும்ஆ தொழத்தான் செய்வோம்" என்று, ஹதீஸின் பிற்பகுதி உறுதிப்படுத்துகிறது.

பெருநாள் தொழுகையிலேயே ஜும்ஆ தொழுகையும் நிறைவேறி விடுகிறது என்ற கருத்து இருக்குமானால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ தொழுவதை உறுதிப்படுத்தி இருக்கமாட்டார்கள் என்றே விளங்க முடிகிறது.

இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு தங்களுடைய ஆட்சி யின்போது பெருநாள், ஜும்ஆ இரண்டையும் இணைத்து இரண்டு ரகாஅத் மட்டும் தொழுதார்கள், அசர் வரை வேறு தொழுகை தொழவில்லை என்று இருக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத் தான நடைமுறை தெளிவாக இருப்பதாலும், அதையே மூன்றாவது கலீஃபா நடைமுறைப் படுத்தி இருப்பதாலும் அதன்படி நடப்பதே ஏற்றமாகும்.


ஐயம் 2: ஹஜ்ஜுக்கு செல்வோரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என் சலாத்தினை எத்தி வைத்து விடுங்கள் என்று கூறலாமா?
ஐயம்: A. ஹஜ்ஜுக்கு செல்வோரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என் சலாத்தினை எத்தி வைத்து விடுங்கள் என்று கூறுவதற்கு எந்தவித ஆதாரமுமில்லை! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திற்குப் பிறகு வாழ்ந்த எந்த நபித் தோழரும் இப்படிக் கூறிவிட்டதுமில்லை! என்று ஒரு இஸ்லாமிய சிறப்பு வெளியீடு கூறுகிறது; இது சரியா?
  B. அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் விஷேஷ வானவர்களை நியமித்து உலகில் உள்ளவர்கள் கூறும் சலாத்தினை எத்திவைப்பதாக செய்திகள் உள்ளதே விளக்கம் தாருங்கள்.


ஒன்று A.மற்றொன்றுக்கு Bக்கு முரண்படுகிறதே? அதனால் தெளிவு தாருங்கள்.

தெளிவு: ஹஜ்ஜுக்குச் செல்பவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நமது ஸலாத்தினை சேர்ப்பிக்கச் சொல்லி விடுவதற்கு குர்ஆன், ஹதீஸில் ஆதாரமில்லை என்பது உண்மைதான். இது சரியானதே.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கூறப்படும் "ஸலாம்" அவர்களிடம் சேர்ப்பிக்கப்படுகிறது என்பதும் சரியான ஹதீஸே. இந்த இரண்டிற்கும் முரண்பாடு இல்லை. நீங்கள் விளங்கிக் கொண்டதில்தான் முரண்பாடு இருக்கிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் உயிரோடு அடங்கி இருக்கிறார்கள் என்ற தவறான நம்பிக்கையில் இருப்பவர்கள்தான் இப்படி "ஸலாம்" சொல்லி அனுப்ப முடியும். உண்மையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 1406 வருடங்களுக்கு முன்னரே மரணித்து அடக்கம் செய்யப்பட்டார்கள் என்றே உண்மையான ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்ள முடியும். 3:144 இறைவாக்கும் இன்னும் பல இறைவாக்குகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன. 

அல்குர்ஆனின் கட்டளைகளில் உறுதியான நம்பிக்கை இல்லாதவன் உண்மை விசுவாசியாக இருக்க முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த ஆன்மா மதீனாவிலோ இவ்வுலகிலோ இல்லை. அல்லாஹ்விடம், அல்லாஹ் அவர்களுக்கு நிர்ணயித்த அந்தஸ்தில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது. அந்த நிலையை நம்மால் உணர முடியாது.

எனவே உலகின் எப்பகுதியிலிருந்து எந்த முஸ்லிம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு "ஸலாம்" சொன்னாலும் அது அவர்களிடம் மலக்குகளால் கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த விஷேஷ ஏற்பாட்டை அல்லாஹ்வே செய்துள்ளான். எனவே ஹஜ்ஜுக்குச் செல்பவர்களிடம் "ஸலாம்’ சொல்லச் சொல்லி அனுப்புகிறவர்கள் மார்க்கம் அறியாதவர்களே. அதே போல் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளையை ஏற்று அவர்களின் பள்ளிக்கு மஸ்ஜிதுன் நபவிக்கு ஸியாரத் செய்யும் நோக்கத்துடன் சென்றால் அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் வழிப்பட்டவர்கள் ஆவார்கள். யார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஸியாரத் செய்யும் நோக்கத்துடன் செல்லுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனத ரஸூலுக்கும் மாறு செய்தவர்கள் ஆவார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
-அந்நஜாத்

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )