Aug 25, 2011

திருக்குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காதா?

[ அறியாமை எனும் இருளை அகற்றி அறிவொளி பெருக்கிட, அகிலத்தின் இரட்சகன் அருளாளன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அதி அற்புதமே அருள்மறைக் குர்ஆன் ஆகும்.

அல்குர்ஆன் அனைத்து துறைகளைப் பற்றியும் அனைவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் எளிமையாகவும், அதே வேளை உயர்ந்த இலக்கிய நயத்துடனும் பேசுவதன் மூலம் தன்னிகரில்லா வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இஸ்லாமிய சமுதாய மக்களோ அல்குர்ஆனை படித்து விளங்கி, அதன்படி செயற்படுவதை விடுத்து தகடு, தட்டு, தாயத்துக்களில் எழுதிக் கொள்வதற்கும், இறந்தவர்களுக்காக ஓதுவதற்காவும் அல்குர்ஆனை பயன்படுத்தி அல்லாஹ்வின் சாபத்தை பெற்று வருகின்னர்.

அருள்மறைக் குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காது, திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரிய வேதம் என்கின்ற போலிவாதங்களை விடுத்து, நாம் ஒவ்வொரும் திருமறையை படித்து விளங்கி, அதன்படி செயற்படுவதுடன், திருமறையின் உயரிய போதனைகளை முஸ்லிம் அல்லாதவர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு நம்மீது உள்ளது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.]

‘இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?’ (அல்குர் ஆன் 54:17)

அறியாமை எனும் இருளை அகற்றி அறிவொளி பெருக்கிட, அகிலத்தின் இரட்சகன் அருளாளன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அதி அற்புதமே அருள்மறைக் குர்ஆன் ஆகும்.


ஓரிறையின் ஈடு இணையற்ற இறுதிப் புரட்சியாய் திகழும் உலகப் பொதுமறை திருமறைக்குர்ஆன் ஆன்மீகத்தைப் பற்றி மாத்திரம் பேசவில்லை. மாறாக, பொருளாதாரம், குற்றவியல் சட்டங்கள், அரசியல், விஞ்ஞானம், சமூகவாழ்வு என ஒவ்வொரு துறைகளைப் பற்றியும் துறைசார் நிபுணர்கள், மாமேதைகள் பேசுவதனை விட மிக அழகாகவும், துல்லியமாகவும் பேசுவதன் மூலம், உலகளாவிய மனித சமுதாயத்தின் பிரச்சினைகளின் தீர்வாய், அமைதியான சர்வதேச அரசியல் சாசனமாய் திருமறைக் குர்ஆன் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறாக, அருள்மறைக் குர்ஆன் தன்னிகரில்லா வாழ்வியல் வழிகாட்டியாக, தனது உயரிய வழிகாட்டலை வழங்கிக் கொண்டிருக்கையில் திருமறைக் குர்ஆனை எல்லோராலும், படித்து விளங்க முடியாது. மாறாக, அல்குர்ஆனை விளங்குவதாக இருந்தால் 16 கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று இஸ்லாமிய சமுhயத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர்களில் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், இறைவேதமோ தன்னை எளிதில் விளங்கிட முடியும் எனப் பறைசாற்றுகின்றது.

‘(முஹம்மதே!) அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது மொழியில் எளிதாக்கியுள்ளோம்.’ (அல்குர்ஆன் 44:58).

‘இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கி யுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?’ (அல்குர் ஆன் 54:17,22,32,40)

‘நீங்கள் விளங்குவதற்காக இவ்வாறு அழ்ழாஹ் தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.’ (அல்குர்ஆன் 02:242)

‘இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில்தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.’ (அல்குர்ஆன் 02:185).

‘இந்தக் குர்ஆன், அழ்ழாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவு படுத்தும் வேதமாகவும் உள்ளது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிட மிருந்து வந்தது.’ (அல்குர்ஆன் 10:37)

‘இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும், நேர் வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் உமக்கு அருளினோம்.’ (அல்குர்ஆன் 16:89)

‘(இது) நாம் அருளி விதியாக்கிய அத்தியாயமாகும். நீங்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவான வசனங்களை இதில் அருளினோம்.’ (அல்குர்ஆன் 24:01)

‘இவை தெளிவான வேதத்தின் வசனங்கள்.’ (அல்குர்ஆன் 26:02, 28:02)
‘அவர்கள் படிப்பினை பெறுவதற்காக இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் கூறியுள்ளோம்.’ (அல்குர்ஆன் 39:27)
‘(இது) விளங்கிக் கொள்ளும் சமுதாயத்திற்காக வசனங்கள் தெளிவுபடுத்தப்பட்ட வேதம். அரபு மொழியில் அமைந்த குர்ஆன்.’ (அல்குர்ஆன் 41:03)

‘(முஹம்மதே! நம்மை) அஞ்சுவோருக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி கூறுவதற்காகவும், பிடிவாதம் பிடிக்கும் கூட்டத்துக்கு எச்சரிக்கை செய்வதற்காகவுமே உமது மொழியில் இதை எளிதாக்கியுள்ளோம்.’ (அல்குர்ஆன் 19:97)

‘அலிஃப், லாம் ரா. இது தெளிவான வேதத்தின் வசனங்கள்.’ (அல்குர்ஆன் 12:01)

‘அலிஃப், லாம், ரா இது வேதமாகிய தெளிவான குர்ஆனின் வசனங்கள்.’ (அல்குர்ஆன் 15:01)

‘அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது’ (அல்குர்ஆன் 16:64)

‘தா, ஸீன். இது குர்ஆனின், தெளிவான வேதத்தின் வசனங்கள்.’ (அல்குர்ஆன் 27:01)

‘தெளிவான வசனங்களை (முஹம்மதே!) உமக்கு அருளினோம். குற்றம் புரிவோரைத் தவிர (யாரும்) அதை மறுக்கமாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 02:99)

மேலும் பார்க்க: அல்குர்ஆன் 02:159, 02:221, 02:219, 03:103, 03:118, 04:26, 04:174, 05:15, 05:89, 06:105, 07:152, 10:15, 11:01, 17:41, 17:89, 22:16, 22:72, 24:18, 24:34, 24:46, 24:59, 29:49, 46:07, 58:05, 65:11

மேலுள்ள இறைவசனங்களில் அருளாளன் அல்லாஹ் ‘படிப்பினை பெறுவதற்காக எளிதாக்கி யுள்ளோம்’, ‘விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம்’, ‘மனிதர்களுக்கு நேர்விழிகாட்டும்’, ‘நேர்வழியை பொய்யிலிருந்து பிரித்துக்காட்டும்’, ‘மனிதர்களுக்கு விளக்கம்’ என்றெல்லாம் கூறுவதன் மூலம் ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்த மொழிகளில் அருள்மறைக் குர்ஆனை விளங்கிக் கொள்ளலாம் என தெளிவுபடுத்துகின்றது. மதுவிலும், மாதுவிலும் மயங்கி தாய்க்கும், தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாத காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த ஒரு சமுதாயம் மனிதப் புனிதர்காக மாறியது எப்படி? வாழ்வியல் வழிகாட்டி திருமறைக் குர்ஆன் விளங்கவில்லையானால், அவர்களது உள்ளத்தை தொடவில்லையானால் அவர்கள் மாறியிருப்பார்களா? என்பதை அல்குர்ஆனை படித்து விளங்க முடியாது எனக்கூறக் கூடிய மார்க்க அறிஞர்கள் சிந்திக்க வேண்டும்.

மேலும், ''வுழு'' எனும் அங்கத்தூய்மை இன்றி அல்குர்ஆனை முஸ்லிம்கள் தொட முடியாதெனவும், அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரிய வேதநூல் எனவும் அல்லாஹ்வும், அவனது தூதரும் விதிக்காத நிபந்தனைகளை விதித்து முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதவர்களையும் அந்நியப்படுத்தி வைத்திருக் கின்றனர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர்களில் சிலர்.

இதோ அகிலத்தின் இரட்சகனின் வார்த்தைகள்:

‘இது மனிதர்களுக்கு விளக்கமும், நேர் வழியும், (இறைவனை) அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்.’ (அல்குர்ஆன் 03:138)

‘இக்குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லா முன் மாதிரியையும் வழங்கியுள்ளோம். மனிதர்களில் அதிகமானோர் (இறை) மறுப்பைத் தவிர வேறு எதையும் ஏற்பதில்லை.’ (அல்குர்ஆன் 17:89)

‘மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான்.’ (அல்குர்ஆன் 18:54)

‘இக்குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். (முஹம்மதே!) அவர்களிடம் நீர் சான்றைக் கொண்டு வந்தால் ‘நீங்கள் வீணர்களேயன்றி வேறில்லை’என்று (நம்மை) மறுப்போர் கூறுவார்கள்.’ (அல்குர்ஆன் 30:58)

‘(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 34:28)

‘மனிதர்களுக்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை நாம் உமக்கு அருளினோம். நேர்வழி பெற்றவர் தமக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி கெடுபவர் தமக்கு எதிராகவே வழி கெடுகிறார். (முஹம்மதே!) நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்ல.’ (அல்குர்ஆன் 39:41)

மேலும் பார்க்க: அல்குர்ஆன் 02:159, 02:168, 02:185, 02:221, 04:170, 04:174, 07:158, 10:57, 10:104, 10:108, 14:1, 14:52, 16:44, 17:106, 22:49, 29:43, 39:27

மேலுள்ள திருமறை வசனங்களில் அருளாளன் அல்லாஹ், இது ‘மனிதர்களுக்கு விளக்கம் எனவும்’, ‘மனிதர்களுக்காக எல்லா முன்மாதிரிகளும் வழங்கப்பட்டுள்ளது’, ‘மனிதர்களுக்காக இவ்வேதம் அருளப்பட்டுள்ளது’ என்றெல்லாம் கூறுவதன் மூலமும்; ‘மனிதர்களை’ விளித்துப் பேசுவதன் மூலமும் அருள்மறைக் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரிய வேதநூல் அல்ல. மாறாக, உலக மக்களுக்குரிய ‘உலகப் பொதுமறை’ எனப் பறைசாற்றுகின்றது.

அது மாத்திரமன்றி, சிந்திக்க மாட்டார்களா?, விளங்க வேண்டாமா?, சிந்தித்துப் பார்க்கவில்லையா?, சிந்திக்க வேண்டாமா? அவர்களின் உள்ளங்களின் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? என்றெல்லாம் வினாத் தொடுப்பதன் மூலம் படித்தவன், பாமரன், அரபி மொழிப் பண்டிதன், அரபியல்லாத மொழியை தாய்மொழியாகக் கொண்டவன் என முழு மனித சமுதாயமும் அல்குர்ஆனை படித்து விளங்க வேண்டும் என அருள்மறை ஆர்வமூட்டுகின்றது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.’ (அல்குர்ஆன் 04:82)

‘அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.’ (அல்குர்ஆன் 17:41)

‘உங்களிடம் ஒரு வேதத்தை அருளினோம். அதில் உங்களுக்கு அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா?’ (அல்குர்ஆன்-21:10)
‘இச்சொல்லை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது அவர்களின் முந்தைய முன்னோர்களிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துள்ளதா?’ (அல்குர்ஆன் 23:68)

‘அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழமாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 25:73)

‘படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு அருளினோம்.’ (அல்குர்ஆன்-38:29)
‘அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?’ (அல்குர்ஆன் 47:24)
‘(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.’ (அல்குர்ஆன் 16:44)

‘அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) விளங்குகிற உள்ளங்களும், கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும். பார்வைகள் குருடாகவில்லை. மாறாக உள்ளங்களில் உள்ள சிந்தனைகளே குருடாகி விட்டன.’ (அல்குர்ஆன் 22:16)

திருமறைக் குர்ஆனின் கட்டளைகளை சிரமேற்கொண்டு செயற்பட்ட முஸ்லிம்களில் பலர் விஞ்ஞானிகளாகத் திகழ்ந்துள்ளனர். ‘அல்ஜிப்ரா’ எனும் எண்கணித முறைகளை கண்டுபிடித்து வர்களும் கூட முஸ்லிம்கள்தான். இறை வேதமாம் திருமறையை ஆய்வு செய்யப் புறப்பட்ட விஞ்ஞான உலகம், வானவியல் Astronomy), மருத்துவம் (Medicine), புவியியல் (Geography), இயற்பியல் (Physics), வேதியல் (Chemisty), விலங்கியல் (Zoology), தாவரவியல் (Botany), உயிரியல் (Biology), கருவியல் (Embryology), சமுத்திரவியல் (Oceanography), மண்ணியல் (Geology) என அனைத்து துறைகளைப் பற்றியும் மிக அழகாகவும், ஆணித்தரமாகவும் 1430 ஆண்டுகளுக்கு முன்னரே அல்குர்ஆன் பேசியுள்ளதைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.
அது மாத்திரமன்றி, வாழ்வியல் வழிகாட்டி திருக்குர்ஆன் சாதாரணமாக ஒவ்வொருவரது வாழ்விலும் இடம்பெறும் கடன் கொடுக்கல் வாங்கல்கள், அதற்குண்டான சாட்சிகள், எழுத வேண்டிய முறைகள், அடமானம், சொத்துரிமை, அளவை நிறுவை, திருமணம், விவாகரத்து என அனைத்து துறைகளைப் பற்றியும் அனைவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் எளிமையாகவும், அதே வேளை உயர்ந்த இலக்கிய நயத்துடனும் பேசுவதன் மூலம் தன்னிகரில்லா வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இஸ்லாமிய சமுதாய மக்களோ அல்குர்ஆனை படித்து விளங்கி, அதன்படி செயற்படுவதை விடுத்து தகடு, தட்டு, தாயத்துக்களில் எழுதிக் கொள்வதற்கும், இறந்தவர்களுக்காக ஓதுவதற்காவும் அல்குர்ஆனை பயன்படுத்தி அல்லாஹ்வின் சாபத்தை பெற்று வருகின்னர்.
எனவே, அருள்மறைக் குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காது, திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரிய வேதம் என்கின்ற போலிவாதங்களை விடுத்து, நாம் ஒவ்வொரும் திருமறையை படித்து விளங்கி, அதன்படி செயற்படுவதுடன், திருமறையின் உயரிய போதனைகளை முஸ்லிம் அல்லாதவர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு நம்மீது உள்ளது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )