Aug 12, 2011

நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?


o நல்லறங்கள் மாத்திரம் செய்வதற்காகவா?
o மருத்துவ பலனா?
o உண்ணாவிரதமா?
o பசியை புரிந்துகொள்ளவா?
o சுயமரியாதை
o பிச்சை எடுத்தல்:
o விபச்சாரம் செய்யாமலிருக்க பயிற்சி:
o கொலைவெறியிலிருந்து மீள எளிதான பயிற்ச்சி!
o பொய் சொல்லமலிருக்க பயிற்ச்சி!
o ஹலாலான சம்பாத்தியம்!
o கோபம் மற்றும் பொறாமை கொள்ளாமலிருக்க பயிற்ச்சி!
முஸ்லிம்கள் அதிகமதிகம் எதிர்பார்க்கக்கூடிய ரமழான் நம்மை வந்தடைந்து இருக்கிறது. முஸ்லிம்கள் அனைவரையும் இந்த மாதத்தில் ஆன்மீகத்தில் மிக ஈடுபாடு உடையவர்களாக நம்மால் காணமுடியும். தள்ளாத வயதிலும் கூட
நோன்பு வைப்பவர்கள், பசி பொறுக்க முடியாத பச்சிளம் குழந்தைகள், இப்படி முஸ்லிம்களில் அனைத்து சாராருமே நோன்பு நாள்களில் மிகுந்த ஆன்மீக ஈடுபாட்டில் உள்ளதை நாம் காணமுடியும்.



ரமழான் மாதத்தின் பகல் நேரத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் நோன்பு நோற்க முடியாத நிலையிலுள்ள தள்ளாத வயதினரும் கூட பலபேர் பார்க்கஉண்ண பருக மாட்டார்கள். வெறும் நோன்பு விஷயத்தில் மாத்திரமல்ல மற்ற ஏனைய விஷயங்களிலும் மிகுந்த பேணிப்புடன் நடந்துகொள்வதையும் தீமைகளின் பக்கம் மக்கள் அதிகம் செல்லாதிருப்பதையும் நாம் ரமழான் காலங்களில் பார்க்க முடியும்.
இவ்வாறு பக்திமான்களாக காணப்படும் முஸ்லிம்கள் ரமழான் அல்லாத காலங்களில் ஏன் நற்செயல்களில் அதிகம் ஈடுபடுவதில்லை? இன்னும் சில இடங்களில் சில சகோதரர்களால் 'ரமழான் முழுவதும் பள்ளியில் காணப்பட்ட முஸ்லிம்களை காணவில்லை! காணவில்லை!! என சுவர் விளம்பரம் செய்யுமளவிற்கு நம்மவர்கள் அப்படியே முழுமையாக மாறிப்போய் விடுகிறார்கள். ஒரு மாதம் தீமைகளின் பக்கம் கவனம் செலுத்தாதவர்கள் அடுத்த மாதம் அல்ல பெரு நாளிலேயே வேறு நபர்களாய் மாறிப்போய்விடுகிறார்கள். ரமழான் முழுவதும் நோன்பு நோற்று தொழுது வந்தவர்கள் பெருநாளன்று தனது மாற்றுமத நண்பர்களுக்கு விருந்தளிக்கிறோம் என்ற பெயரில் மது அருந்துவதையும் இன்னும் பல தீமையான காரியங்களில் ஈடுபடுவதையும் நம்மால் காணமுடியும்.

எனது சொந்த ஊரில் ஈத் தொழுகை முடிந்த பிறகு இளைஞர்கள் குத்பா மிம்பர் படியின் பின்புறம் கோலிக்குண்டு என்றழைக்கப்படும் விளையாட்டில் பணம் கட்டி அதிமும்முரமாக சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள். அவர்கள் பெருநாளைக்கு அணிந்த ஆடைகூட கறைபடிந்திருக்காது. ஆனால் அவர்களின் உள்ளம் அத்தனை கறைபடிந்து போயிருக்கும்.
இதற்கும் அவர்கள் சதாரான இளைஞர்களா! ரமழான் முழுவதும் நல்லறங்களில் ஈடுபட்டவர்கள் மாத்திரமல்ல. மக்களிடம் வசூலித்து சஹர் நேரத்தில் நோன்பு நோற்க எழுப்புவதற்காக ஒலிபெருக்கிகள் அமைத்து மார்க்க விஷயங்களை ஒலிபரப்பி மக்களை நன்மையின்பால் தூண்டியவர்கள் அவர்கள்.

இந்நிலைக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் நமக்கு ஒரு விஷயம் நன்றாகவே புலப்படும். அது என்னவென்றால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ரமழானின் நோக்கத்தை சரிவர உணராததால்தான் இப்படிப்பட்ட நிலையிலுள்ளார்கள். பலர் ரமழானின் நோக்கத்தை தவறாகவும் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவே ரமழானின் நோக்கத்தை சரிவர புரிந்துகொண்டாக வேண்டும். ரமழானில் நோன்பும் இன்னும் பிற நல்லறங்களும் கடமையாக்கப்பட்ட நோக்கத்தை சரிவர புரிந்துகொண்டோமேயானால் வருங்காலங்களில் நம்மை செம்மைப்படுத்திக்கொள்ள உறுதுணையாக அமைவதோடு மிகப்பெரிய நன்மையாகவும் இருக்கும். தற்போது நாம் நோன்பைப்பற்றியுள்ள மக்களின் எண்ண ஓட்டத்தை கருத்தில் கொண்டு அவைகளின் நிலை பற்றி சிறிது ஆராய்வோம்.

நல்லறங்கள் மாத்திரம் செய்வதற்காகவா?

ரமழான் என்பது ஏதோ சில நல்லறங்கள் புரிவதற்கும், பகலிலே பசித்திருப்பதற்காகவும், இரவிலே தொழுவதற்காகவும் கடமையாக்கப்பட்டது என நம்மில் பெரும்பாலோர் புரிந்துவைத்துள்ளனர். உண்மையில் இந்த நோக்கத்தை உள்ளடக்கியதாக மட்டும் இருந்திருக்குமானால் இது போன்று ரமழான் அல்லாத ஏனைய காலங்களிலும் இறைவன் நோன்பை கடமையாக்கியிருப்பான். ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதத்தை தேர்வு செய்து அதில் பசித்திருப்பதை கடமையாக்கியிருக்கிறான் என்றால் அதில் வேறு ஏதேனும் புறக்காரணங்கள், விஷேச காரணங்கள் இருந்தாக வேண்டும்.

இங்கு ஓர் ஐயம் எழும். அதுதான் முஹர்ரம் 9-10ஆகிய தினங்கள் அரபா நாள் போன்ற சில தினங்களில் நல்லறங்களில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே ஆகவே வணக்க வழிபாடுகளில் கவனஞ்செலுத்தவே நோன்பு கடமையாக்கட்டுள்ளது என கருதுவதில்; தவறொன்றுமில்லை. ஆனால் ரமழானுக்கும் ஏனைய தினங்களுக்குரிய வேறுபாடுகளை கண்டறிந்து கொண்டால் இந்த குழப்பம் தானாகவே தீர்ந்துவிடும். முஹர்ரம் என்பது நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஏனைய நபிமார்களுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் திருநாள். அரபா என்பது நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நினைவுபடுத்தும் முகமாக சமுதாயத்தின் தலைவர்கள் ஒரு இடத்தில் ஒன்றுகூடி சமுதாய நலனில் அக்கறை கொள்வதற்காக துவக்கப்பட்ட நாள். ஆனால் ரமழான் அப்படியில்லையே! குர்ஆன் இறங்கிய மாதமாயிற்றே!

மருத்துவ பலனா?
இன்னும் நம்மில் பெரும்பாலோர் ரமழான் மாதத்தில் நாம் பசித்திருப்பதினால் வயிற்றுக்கு நல்லது என்றும், 11 மாதங்களில் நமக்கு ஏற்பட்ட வயிறு சம்பந்தமான நோய்களை நிவாரணம் செய்வதற்காகத்தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என கருதுவோரும் உண்டு. இந்த வாதம் ஓரளவு ஏற்புடையதாக இருந்தாலும் யதார்த்தத்தில் அதுவல்ல நோக்கம். ஏனெனில் வயிற்றுக்கு நிவாரணி வேண்டும் என்ற நோக்குடன் கடமையாக்கப்பட்டிருந்தால் எப்பொழுதெல்லாம் வயிற்று பிரச்சினை வருகிறதோ அப்பொழுதெல்லாம் உங்கள் மீது கடமையென இறைவன் விதித்திருப்பான். நாம் அப்படி குர்ஆனுடைய எந்த அத்தியாயங்களிலும், ஹதீஸ்களிலும் நம்மால் காணமுடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் பசியோடு இருப்பதினால் அல்சர் போன்ற வியாதிகள் உருவாக சந்தர்ப்பங்கள் உள்ளது.


வயிற்று பிரச்சினைகளை சமாளிப்பதற்கு நோன்பைவிட மருத்துவப் பயன்பாடுகள் கொண்ட நவீன பொருட்கள் அதிகமாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கப் பெறுகிறோம்.

உண்ணாவிரதமா? 

இன்னும் நோன்பு வைப்பதின் நோக்கத்தை சொல்ல வரும்போது '''பசியோடு இறைவனிடத்தில் கேட்கப்படும் போது அத்தேவைகளை இறைவன் நிவர்த்தி செய்து விடுகிறான். பசியோடு இருக்கும்போது மனிதனே இரக்கம் கொள்ளும்போது அளவிலா கருணையுடைய இறைவன்; இரக்கம் கொண்டு நாம் கேட்டதையெல்லாம் தந்துவிடமாட்டானா?'' என சிலர் வாதிடுவர்.
உண்ணாவிரதம் என்ற பெயரில் அரசியல் நடத்துகிற நோக்கத்தில் செய்யப்படும் செயல்களோடு இறைவனுக்காக செய்யப்படும் வணக்கங்களை ஒப்பிட்டு விடக்கூடாது. இது மாதிரியான நோக்கங்களை சொல்வோமேயானால் இஸ்லாமிய நம்பிக்கையின்படி அது மிகத் தவறானதாகும்.

பசியை புரிந்துகொள்ளவா? 


இன்னும் பலர் நோன்பு நோற்பதற்கான காரணம் ''பசியின் நிலையை புரிந்துக்கொள்ளத்தான் கடமையாக்கப்பட்டது'' என்று கூறுவோரும் உண்டு. இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முற்படும்போது சில விஷயங்களை நம்முடைய கவனத்தில் கொண்டுவருதல் மிக அவசியமாகும். நோன்பு வைப்பவர்கள் பசியை உணர்வதற்காக எந்த வகையிலாவது ஈடுபாடு கொண்டுள்ளார்களா? என்று பார்க்கவேண்டும். உலக நடைமுறை இதற்கு பதிலளிக்கிறது.

நோன்பாளிகள் பலர் நோன்பு காலங்களில் நிறைய ஓய்வெடுத்துகொள்கிறார்கள். தனது அலுவல்களை வெகுவாகவே மாற்றிக்கொள்கிறார்கள். காலையில் சஹருக்காக அவர்கள் விதவிதமான உணவுகளை உட்கொள்வதிலும், இதெற்கெனவே பிரத்தியேக முயற்சிகள் எடுத்துவருகிறார்கள். இதன் காரணமாகவே ரமழான் மாதத்தில் குடும்ப செலவினங்கள் அதிகரிக்கிறது. சஹர் சாப்பிட்டபிறகு உண்ட மயக்கத்தோடு சுபுஹ் தொழுகையை நிறைவேற்றிவிட்டு நெடிய தூக்கம். அதன்பிறகு வீட்டுத்தேவைகளுக்கென சிறிது மார்க்கெட் செல்வது. தான் சார்ந்திருக்கும் தொழிற்துறைகளை சற்று கவனித்து விட்டு லுஹருடைய தொழுகையை நிறைவேற்றிவிட்டு கொஞ்சம் ஓய்வு! இப்படியாக தனது அலுவல்களை முடித்தபிறகு அஸர் தொழுகை. அஸருக்கு பிறகு மறுபடியும் நோன்பு திறப்பதற்காக பலத்த ஏற்பாடுகள் செய்துவிட்டு நோன்பு திறந்து விடுகிறார்கள்.
அரபு நாடுகளில் வேலைப்பார்ப்போரின் நிலை இதை விட சொகுசானது. அங்கு ரமாழனில் இரவு நேரந்தான் அலுவல்கள் அனைத்துமிருக்கும். இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் என்பதுதான் அரபுநாடுகளின் நிலை. இந்த முஸ்லிம்கள் எங்கே பசியை உணர்கிறார்கள்? ரமழான் வந்துவிட்டால் பசியை உணர்வதற்கு பதிலாக பகலில் எப்படி தூங்கி கழிக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள்! இவர்கள் பசியை உணர்வதற்கு கொஞ்சநஞ்ச காரணங்களாவது இருக்கிறதா? பசியை உணர்வதுதான் நோன்பின் நோக்கமாக இருக்குமேயானால் பின்வரும் நபிமொழிச்செய்தி அதற்கு முரனாக அமைகிறது.

எத்தைனையோ நோன்பாளிகள் தனது நோன்பிலிருந்து பசியைத்தான் உணர்கிறார்களே தவிர வேறு எதையும் உணர்வதில்லை. எத்தனையோ இரவு நேரங்களில் நின்று வணங்கும் தொழுகையாளிகள் கண்விழித்தைத்தவிர வேறு எதையும் உணர்வதில்லை. (அறிவிப்பாளர்: அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயி, இப்னுமாஜா, ஹாகிம்)

மேற்கூறப்பட்ட நபிமொழி உணர்த்த வரும் செய்தி என்ன? பசியை உணர்வதற்காகத்தான் நோன்பு கடiயாக்கப்பட்டது என்றிருக்குமானால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி கூறியிருக்கமாட்டார்கள். ஆகவே பசியை உணர்வதற்காக நோன்பு கடமையாக்கப்படவில்லை. இன்னும் திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கூறப்பட்ட நோன்பின் சிறப்புகளோடு ஒப்படுவோமானால் நாம் சொல்லக்கூடிய எந்த காரண காரியங்களும் சரியானதாக நமக்கு தோன்றாது.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)

ஆதமுடைய சந்ததியினர் செய்யக்கூடிய எல்லா நல்லறங்களும் அவர்களுக்கே சொந்தமானது, ஆனால் நோன்பு மாத்திரம் அவர்களுக்கு சொந்தமானதல்ல. அது எனக்கே சொந்தமானது. நானே அதற்கு கூலிக்கொடுக்கிறேன். என்று அல்லாஹ் சொல்வதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்னார்கள். (அறிவிப்பாளர்: ரளியல்லாஹு அன்ஹு, நூல் அஹ்மத், முஸ்லிம், நஸயீ)

நோன்பும், குர்ஆனும், மறுமைநாளில் அடியானுக்கு பரிந்துரை 
செய்யகூடியவைகளாகும். நோன்பு கூறும் ' ''இறைவா நான் இந்த அடியானை பகல்நேரத்தில் சாப்பிடவிடாமலும், மனோஇச்சைகளின்படி நடக்கவிடாமலும் தடுத்துவைத்திருந்தேன். ஆகவே இவன் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக!'' இன்னும் குர்ஆன் ''இறைவா இரவு நேரங்களில் இந்த அடியானை என்னை ஓதுவதற்காக இவனை தூங்கவிடாது தடுத்துவந்தேன். ஆகவே இவன் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக'' என கூறும். அவ்விரண்டின் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத்)

நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து யா ரஸுலல்லாஹ் என்னை சுவர்க்கத்திற்கு கொண்டு சேர்க்ககூடிய ஒரு நல்லறத்தை அறிவித்துத் தாருங்களேன் என வேண்டினேன். அதற்கவர்கள் நீ நோன்பு வைத்துவா ஏனெனில் நோன்புக்கு நிகர் வேறெதுவுமில்லை. என்றார்கள் பின்னர் இரண்டாம் தடவையாக அவர்களிடம் வந்து மேற்கூறிய கேள்வியையே கேட்டேன். அதற்கவர்கள் நோன்பு வைத்து வா என்றார்கள். (அறிவிப்பாளர் அப்துல்லாஹ் அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல் அஹ்மத் நஸயீ)

அல்லாஹ்வுடைய வழியில் ஒரு நாள் நோன்பு வைப்பதினால் இறைவன் நோன்பு வைப்பவருடைய முகத்தை நரக நெருப்பிலிருந்து 70 ஆண்டுகாலம் திருப்பிவிடுவான். (அறிவிப்பாளர் அபூஸயீதில் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல் புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, நஸயீ அஹ்மத்)

சுவர்க்கத்தில் ரய்யான் என்றழைக்கப்படக்கூடிய வாயிலொன்று உள்ளது. மறுமைநாளில் அந்த வாயிலிருந்து நோன்பாளிகள் எங்கே? என கூப்பிடப்படும். நோன்பாளிகளில் இறுதி நோன்பாளி நுழையும் வரை வாயில் திறக்கப்பட்டிருக்கும். அவரும் நுழைந்துவிட்டால் அதன் வாயில் மூடப்படும். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் ஸஃது இப்னு ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, நூல் புகாரி, முஸ்லிம்)

ரமழான் மாதம் வந்தபோது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களிடத்தில் அபிவிருத்திமிக்க மாதம் வந்துள்ளது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகிறது. நரக வாயில்கள் மூடப்படுகிறது. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. இதன் நன்மைகளை அடைய முயற்;சி செய்யாது எவர் உள்ளாரோ அவர் எந்த நன்மையையும் அடைந்துக்கொள்ளமாட்டார். (அறிவிப்பாளர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் அஹ்மத் நஸயீ பைஹகீ)

அர்பஜா என்பவர் கூறுகிறார். நான் உத்பா பின் பர்கதிடம் இருந்தேன் அவர் ரமழானின் சிறப்புகளை சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர் ஒருவர் எங்களிடம் வந்தார். அவர் ரமழானின் சிறப்பம்சங்களை எங்களிடம் சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னார் ரமழானில் நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். பின்பு சொன்னார்கள் அம்மாதத்தில் ஓர் மலக்கு மக்களிடம் நன்மைகளை தேடக்கூடிய மக்களே இதோ சுபச்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள் அதிகமாக நன்மைகளை செய்யுங்கள். தீமை செய்வோரே உங்கள் தீமைகளை குறைத்துக்கொள்ளுங்கள் என ரமழான் மாதம் முடியும்வரை சொல்லிக்கொண்டேயிருப்பார். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். (அறிவிப்பாளர் ஆபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் அஹ்மத் நஸயீ)

யார் ரமழான் மாதத்தில் ஈமானிய சிந்தனையோடும், இன்னும் பிற தேவைகளின் நிமித்தமாகவும் நோன்பு வைக்கிறார்களோ அவர்கள் முன் செய்த பாவமனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான். (அறிவிப்பாளர் ஆபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)

போர்க்களத்தில் கேடயம் கொண்டு எப்படி உங்களை பாதுகாத்துக்கொள்கிறீர்களோ அது போன்று நோன்பு நரகத்திலிருந்து உங்களை பாதுகாக்கும் கேடயமாகும். (நூல்: அஹ்மத்)
நோன்பாளிகள் நோன்பு திறக்கும் நேரத்தில் செய்யப்படும் துஆக்கள் உடன் அங்கீகரிக்கப்படும். ( இப்னு மாஜா)

இப்படி என்னிலடங்கா சிறப்புகள் அடங்கிய நோன்பை இது போன்ற அற்ப காரணங்களோடு ஒப்பிட்டுவிடக் கூடாது. அதை விட பெருங்காரணமிருக்கிறதா என சிந்திக்க வேண்டும். இதற்கு ஹதீஸ் ஒளியில் ஏதேனும் தடயங்கள் இருக்கிறதா என அலசியாக வேண்டும். இதோ சில தடயங்களை பாருங்கள்.

எவர் ரமழான் மாதத்தில் நோன்பு வைத்து, அதன் ஒழுக்கவிழுமங்களை அறிந்து, பேணப்படவேன்டிய விஷயங்களை பேணி நடந்து வருகிறரோ அவர் முன் செய்த பாவமனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீதுல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத், பைஹகீ)

ஒவ்வொரு தொழுகையும் அடுத்த நேர தொழுகை வரும் வரை பாவங்களை போக்கக் கூடியதாகும். ஒரு ஜும்ஆ தொழுகை மறு ஜும்ஆ தொழுகை தொழும் வரை ஏற்படும் பாவங்களை போக்கக்கூடியதாகும். ஒரு ரமழான் மாத்தில் நோன்பு வைப்பது அடுத்த வருடம் வரும் ரமழானில் நோன்பு வைக்கும் வரை ஏற்படும் பாவங்களை போக்ககூடியதாகும். எனினும் இக்காலங்களில் பெரும் பாவங்கள் எதுவும் செய்யாமலிருப்பது மிக்க அவசியமாகும். அதாரம்: முஸ்லிம்

இந்த ஹதீஸை சற்று விளக்கப்படுத்தி கூறினால் நோன்பின் நோக்கத்தை யாரும் சுட்டிக்காட்டாமலே விளங்கிக்கொள்ளமுடியும். ஒரு தொழுகையை நிறைவேற்றியதின் பின்னால் அந்த தொழுகை தொழுகையாளிக்கு எவ்வளவு பாதிப்பை உருவாக்கியிருக்க வேண்டும் என்றால் அடுத்த நேர தொழுகை வரை அந்த தொழுகையாளி எத்தகைய சிறும்-பெரும் பாவங்களும் செய்யாமலிருக்கத் தூண்டவேண்டும். அதுபோன்று ஜும்ஆ தொழுகையும் ஒரு ஜும்ஆவின் பாதிப்பு ஒருவருக்கு அடுத்த ஜும்ஆ வரை எவ்வித கெட்ட செயல்களில் ஈடுபடாமலிருக்க உதவி புரியவேன்டும். அது போன்றே நோன்பும் ஒரு வருடம் நோற்ற நோன்பு அடுத்த வருடம் வரை மனஅளவிளான பாதிப்பை ஏற்படுத்தவேண்டும்.

உண்மையில் இந்த நோன்பு கடமையாக்கப்பட்டது எதற்காக என்றால் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பயிற்ச்சி கொடுப்பதற்காக கடமையாக்கப்பட்டது. நோன்பு நோற்கிற எல்லா முஸ்லிம்களும் பயிற்சி எடுக்கிறார்கள். இந்த பயிற்சி ஏனைய 11 மாதங்களில் எப்படி தனிமனித ஒழுக்கவிழுமங்களிலும், அடுத்தவர்களின் உரிமைகளிலும் எப்படி நடந்து கொள்ளவேன்டும் என்பதை செயல்வடிவமான பயிற்சியாக அளிக்கப்படுகிறது.
இந்த ஆன்மீகப் பயிற்சி எப்படியெல்லாம் முஸ்லிம்களை புடம் போட்ட தங்கமாக மாற்றக்கூடிய வலிமை வாய்ந்தது என்பதை ஒவ்வொன்றாக பாருங்கள்.

சுயமரியாதை 

மனித சமுகத்தில் தோன்றக்கூடிய எல்லா பிரச்சினைகளும் முஸ்லிம்களுக்கும் ஏற்படும். முஸ்லிம்களுக்கும் அடுத்தவரிடம் கையேந்தக்கூடிய நிலை ஏற்படலாம். அந்த நேரங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் நோன்பு கடமையாக்கப்பட்டது.

இன்று நம் நாட்டில் சுயமரியாதைக்காக பல்வேறு இயக்கங்கள் தன்னுடைய பொன்னான நேரத்தையும், பொருளாதாரத்தையும் செலவழித்து வருகின்றன. ஏனெனில் நம் நாட்டில் சாதியம் என்ற பெயரால் மிகப்பெரிய கொடுமை பெருஞ்சமுதாயத்திற்கெதிராக கட்டவிழ்த்து விடப்படுகிறது.
நாம் அவர்களின் விஷயத்தில் அவர்கள் விரும்பாதவரை தலையிடப் போவதில்லை. ஆனால்; இதில் முஸ்லிம்கள் மிகப்பெரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளார்கள். எந்த நிலையிலும் வயிற்றுப் பசியைக் காரணங்காட்டி யாரிடமும் அடிமைப்பட்டுவிடக்கூடாது மேலும் யாரையும் அடிமைப் படுத்திவிடவும் கூடாது. நமது சுயமரியாதை எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என நாம் நினைக்கின்றோமோ அதே போன்று அடுத்தவர்களின் சுயமரியாதையையும் நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம். (திருக்குர்ஆன் 17:70)

''மக்களே உங்களின் இரத்தமும், செல்வமும் மிக சிறப்பிற்குரியதாகும். அரபா நாளான இன்றைய நாளைப்போல! ஹஜ்ஜுடைய இந்த மாதத்தைப்போல! மக்காவுடைய புனிதத்தைப்போல!
நான் இறைவனின் செய்திகளை உங்களிடம் சொல்லிவிட்டேனா? இறைவனே நீயே இதற்கு சாட்சி. முஸ்லிமின் எல்லா உரிமைகளும் தூய்மையானது. அவன் இரத்தம், செல்வம், மானம் ஆகியவைகளும் புனிதமானது.'' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜத்தில் விதாவில் உரை ஆற்றினார்கள்.

வயிறு பசித்து அடுத்தவனிடம் கையேந்தி அடிமைப்படாமலிருக்க நீண்ட பயிற்ச்சி தேவை. எந்த வகையான பயிற்ச்சியும் இல்லாததின் காரணமாகத்தான் நம்நாட்டில் தீண்டத்தகாதவர்களாகவும், காலணிவாசிகளாகவும் ஆகிப்போனார்கள். இந்த நிலை முஸ்லிம்களுக்கு எந்தக்காலத்திலும் ஏற்பாடாமலிருக்க ஒவ்வொரு வருடமும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட பயிற்ச்சிதான் நோன்பு.

அடுத்தவரிடம் பசியின் காரணமாக அடிமைப்படும் அவல நிலை ஒருவேலை நமக்கும் ஏற்பட்டால்; 'ரமழான் மாதத்தில் பசியோடு மாத்திரம் அல்ல! பெருந்தாகத்தோடும் இருந்தேன். அற்ப ஒருபிடி சோறுக்காக என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன். இறைவனல்லாத யாருக்கும் அடிமைப்பட்டுவிட மாட்டேன். பசியென்ன எனக்கு புதிதா? ரமழான் மாதம் முழுவதும் பசித்திருந்தேனே அப்போது யாரிடமும் அடிமைப்பட வில்லையே! இப்போது நான் ஏன் அடிமைப்பட வேண்டும். எக்காரணங்கொண்டும் எனது சுயமரியாதையை எதற்காகவும் அதிலும் குறிப்பாக வயிற்றுக்காக விட்டுக்கொடுக்கவே மாட்டேன்' என்ற வீரஉணர்வை நமக்கு ஊட்டக்கூடிய பயிற்ச்சிதான் நோன்பு.

பிச்சை எடுத்தல் 

நோன்பு கடமையாக்கப்பட்ட நோக்கத்தை ஆராய்ந்துவருகிறோம். இந்த நோன்பு எப்படியெல்லாம், எதற்கெல்லாம் பயிற்ச்சியளிக்கிறது என்று பாருங்கள்.


நீங்கள் தெருக்களில், கடைவீதிகளில் பார்த்திருப்பீர்கள். உடற்கட்டான மனிதன் பார்ப்பதற்கு ஆஜானுபாகுவான ஆள். சைக்கிளிலே கையை விட்டுவிட்டு தன் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக சர்க்கஸ் சாகசங்களை செய்துகாட்டுகிறான். அதன் முடிவில் ஒரு டியூப்லைட்டை தரையில் வைத்துக்கொண்டு தன் நெஞ்சால் உடைத்துக் காட்டுவதையும் அதன் பின்னால் தன் வயிறை சுட்டிக்காட்டி எல்லாம் ஒரு ஜான் வயித்துகாகத்தான் என்று சொல்லிக் கொண்டே பிச்சை கேட்பதையும், இது போன்றே மோட்டார் சைக்கிளிலே வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து சாகசங்கள் செய்து காண்போரை வியக்கவைக்கும் திறமைகள் கொண்டவர்களும் அதன் முடிவில் கடைகடையாக எல்லா நபர்களிடம் பிச்சை கேட்பதையும், அதுபோன்றே கேட்பதற்கினிய குரல் பெற்றிருப்பதால் உடலில் எந்த ஊனமில்லாத நிலையில் பாட்டுப் பாடிக்கொண்டே வயிற்றில் அடித்துக்கொண்டு பிச்சை எடுப்பதையும் நாம் பார்த்திருப்போம்.
இப்படி கஷ்டப்பட்டு சாகசங்கள் செய்பவர்களுக்கு பிரச்சினையாக தெரிவதெல்லாம் ஒரு ஜான் வயிறும் பசியம்தான். இவர்கள் எப்படியெல்லாம் திறமைப் படைத்தவர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சைக்கிள் ஓட்டுபவரை நாம் பார்க்கும்போது என்ன ஆகுமோ என நாம் பயந்து நடுங்குவோம். மோட்டார் சைக்கிள் ஓட்டுவரை பார்க்கும்போது சொல்லவேண்டிய தேவையே இல்லை. இவர்களை விட திறமையற்றவர்களாகிய பார்வையாளர்கள் மூன்று நேரமும் வயிறாற சாப்பிட்டுவிடுகிறார்கள். ஆனால் பிரமிக்கத்தக்க ஆற்றல் படைத்தவர்களுக்கு சோற்றுக்கு வழியில்லை என்றால் என்ன ஆச்சரியம்.
இவ்வளவு சாகசங்களையும் செய்துக்காட்டி பிச்சை எடுப்பதற்கு முன்னால் ஒரு நிமிடம் சிந்தித்;துப்; பார்த்திருந்தால் பிச்சை எடுப்பதற்கு அவர்களுக்கு மனது வருமா?. நமது செயல்களைப் பார்த்து பயப்படுகிற, ஆச்சிரியப்படுகிற இந்த மக்கள் நன்றாக சாப்பிடுகிறார்களே! நாம் ஏன் நமது திறமைகளை வெளிப்படுத்தி உழைத்து சம்பாதிக்ககூடாது! வாழ்வில் முன்னுக்கு வரக்கூடாது என ஒரு நிமிடம் அவர்கள் சிந்திப்பதற்கு அவகாசம் இல்லை. ஏன் இந்த இழிநிலை?. காரணம் அவர்களுக்கு முறையான பயிற்சி கிடையாது. மனோதத்துவ ரீதியாக தெம்பூட்டுவதற்கு பயிற்ச்சி அளிக்கப்படவில்லை. அவர்களும் தன்னை முறையான பயிற்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை.
ஒரு முஸ்லிம் வருடாவருடம் பயிற்ச்சியளிக்கப்படுகிறான் இது போன்ற நிலையை சந்திக்ககூடிய முஸ்லிம்கள் மனோதத்துவ பயிற்சி அளிக்கப்படுவதால் தன்னை வெகுவாக மாற்றிக்கொள்ள இயலும்.
இதை சொல்ல வேண்டிய கண்ணியமிக்க உலமாக்கள் ரமழான் மாதம் வந்து விட்டால்; பையை தூக்கிக்கொன்டு வந்துவிடுகிறார்கள். ஒரு மணி நேரம்; அல்லது மக்களது ஆர்வத்தை பொறுத்து அடுக்கடுக்கான வசனங்களால் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தி விட்டு மக்களிடம் கை ஏந்திவிடுகிறார்கள். சில கண்ணிமிக்க உலமாக்கள் இதற்காக பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையிருப்பதால் நோன்பும் வைப்பதும் கிடையாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அல்லாஹ் பயணத்திலிருப்பவர்களுக்கு நோன்பு வைக்கவேண்டாமென சலுகை தந்துள்ளான் என தப்ஸீர் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவர்கள் நோன்பின் நோக்கத்தை நன்றாக படித்தவர்கள் அந்தோ பாவம் மகத்துவம் உணராதவர்கள்.

எந்த நேரத்திலும் யாரிடமும் கையேந்தக் கூடாது எந்த நிலையிலும் நம் சுயமரியாதையை இழந்து விடக்கூடாது என்ற கருத்தில் வருகிற குர்ஆனின் வசனங்களையும், நபிமொழிகளையும் ஆராய்ந்தால் பிச்சை எடுத்தலை இஸ்லாம் எந்த அளவிற்கு வெறுக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

விபச்சாரம் செய்யாமலிருக்க பயிற்சி 

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது (திருக்குர்ஆன் 17:32)


மனித சமூகம் அனைவருமே விபச்சாரம் செய்யக்கூடாது என்பதிலே இருவேறு கருத்துக்கொண்டவர்கள் அல்;லர். ஆனால் அதை எப்படி ஒழிப்பது என்பதில்தால் பலவகை கருத்து மாற்றங்கள் உள்ளது.
இஸ்லாம் எடுத்த எடுப்பிலேயே கல்லெறிந்து கொல்வதையோ அல்லது கசையடி கொடுப்பதையோ கடைபிடிக்கவில்லை. அதற்கு முன்னால் மனதளவில் பெரும் மாற்றத்தையும், விபச்சாரம் செய்ய தூண்டக்கூடிய அனைத்து காரணகாரியங்களையும் களைந்தெடுத்துவிட்டு அதன்பிறகு மனக்கட்டுபாட்டையும் போதிக்கிறது. இவ்விஷயத்தில் அதிகமானவர்கள் மனக்கட்டுப்பாடு உடையவர்களாக காணப்படுவதில்லை. 
இப்படிப்பட்டவர்களுக்கு மனக்கட்டுபாட்டு பயிற்ச்சியளிப்பது மாத்திரம் போதுமாக அமையாது. ஆனால் அவர்கள் திருந்தும் வண்ணம் மறுபடியும் அந்த தவறை செய்யாமலிருக்கவும் அடுத்தவர்களும் அதன்மூலம் பாடம் பெறவும் சற்று வலுவான தண்டனைகள் கொடுத்தாக வேண்டியுள்ளது. ஆகவே நியாயமான உணர்வுடனும், நிதானத்தோடும், நடுநிலையோடும் அணுகுவோர் இஸ்லாம் விபச்சாரத்திற்கு அளிக்கிற தன்டனைகளில் தவறு காண முடியாது.

இந்த அணுகுமுறைகள் தவறானது என விமர்சிப்போர் உண்மையில் விபச்சார பிரியர்களாகத்தான் இருக்கமுடியும். விபச்சாரத்தை ஒழிப்பதிலே அவர்களுக்கு எள்முனை அளவினும் ஆர்வம் கிடையாது என்று தான் பொருள் கொள்ள வேண்டி வரும்.

விபச்சாரம் ஒழிய இஸ்லாம் காட்டிய ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை குர்ஆன் சுன்னாவின் ஒளியிலும் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையிலுள்ள நாடுகளில் நடக்கும் விபச்சாரத்தின் எண்ணிக்கையும் பற்றி சிந்தித்தால் இஸ்லாம் எந்த அளவிற்கு விபச்சாரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்திருக்கின்றது என்பதை அறியமுடியும். வெறும் சட்டங்களால் மட்டும் விபச்சாரத்தை ஒழித்துவிட இயலாது மாறாக மக்களிடம் விபச்சாரம் ஒரு கொடும் தீமை என்பதை புரியவைக்க வேண்டும். விபச்சாரம் புரிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ளும் அளவிற்கு மனிதனுக்கு மனப்பக்குவத்தை அளிக்கவேண்டும். அத்தகைய மனப்பக்குவத்தை அளிப்பதற்கு நோன்பு பெரும் பங்கு வகிக்கிறது.

கொலைவெறியிலிருந்து மீள எளிதான பயிற்ச்சி 

கொலையை அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிச (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். (திருக்குர்ஆன் 17:33)


மனித உயிர் மிக உன்னதமானது. இறைவனால் வழங்கப்பட்ட மிகப்பெரிய சன்மானம். அப்படிப்பட்ட உயிரை தகுந்த குற்றவியல் காரணங்களில்லாது கொலை செய்யக் கூடாது. இதுப்பற்றி இஸ்லாம் மிகுந்த சிரத்தையோடு கண்கானித்து மனித உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சிறப்புமிகு பல சட்டங்களை இயற்றியதோடு நில்லாமல் அச்சட்டங்களை அமுல்படுத்துவது இறைவனுக்கு செய்யும் வணக்கவழிபாடுகளோடு இணைத்துள்ளது.

நோன்பு என்பது ''நான் வன்முறையில் கொலை போன்ற மாபாதக செயல்களில் ஈடுபடமாட்டேன்'' என்ற உறுதிமொழி எடுத்துக்கொள்கிற பயிற்ச்சியுமாகும் என்பதை நோன்பு வைப்பவர்கள் உணரவேன்டும். எதையும் காரணங்காட்டி அநியாயமான முறையில் யாரையும் கொலை செய்துவிடக் கூடாது. ஒருவருடைய உயிரை பறிப்பதற்கு கூட சட்ட ரீதியான காரணங்களை அரசாங்கத்திடம் காட்டித்தான் அரசாங்கத்திடமிருந்துதான் அதற்குரிய விளைவை எதிர்பார்க்க வேண்டும் என இஸ்லாம் சொல்கிறது.
தனிமனித வாழ்விலும் இத்தகைய ஒழுக்கங்கள் நிறைந்து காணப்படவேண்டும் என்பதற்காக மனோதத்துவ ரீதியாகவும் ஒவ்வொரு வருடமும் வெகுசிரத்தையோடு பயிற்ச்சியளிக்கிறது. இப்படிப்பட்ட பயிற்சி எடுத்தவர்கள் மனித உயிர்களுக்கு உலை வைக்கமாட்டார்;கள் மேலும் வன்முறையில் இறங்கவோ அல்லது கொலை பாதகங்கள் செய்யவோ முன்வரமாட்டார்கள் என்பது தெளிவாக தெரியவரும்.

எவன் சட்ட ரீதியான காரணங்களில்லாது ஒரு உயிரைப் பறிக்கிறானோ அவன் மனித சமூகமனைத்தின் உயிரையும் பறித்துவிட்டவன் போலாகிவிடுகிறான். எவன் சட்ட ரீதியான காரணங்களில்லாத காரணத்தினால் ஒரு உயிரை கொலை செய்யாது விட்டுவிடுகிறானோ அவன் மனித சமூகமனைத்தையும் வாழவைத்து விட்டவன் போலாகிவிடுகிறான் என்பதை ஆல்குர்ஆன் மிகத் தெளிவாகவே எடுத்துறைக்கிறது.

மேற்கூறப்பட்ட அல்குர்ஆனின் வசனம் கொலை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் வசனமாகும். இந்த வசனத்தில் ஒரு உயிரைப்பறிப்பது மனித சமூகமனைத்தின் உயிரை பறிப்பதற்கு சமம் என சொல்லப்படுகிறது. அதுபோன்று ஒரு உயிரை வாழ வழி வகுப்பது மனித சமூகமனைத்தும் வாழ வழி வகுப்பது என்று பரைகாற்றுகிறது.

பொய் சொல்லமலிருக்க பயிற்ச்சி 

இந்த தலைப்பு சற்று ஆச்சிரியமாக உள்ளதா? இருக்கத்தான் செய்யும். ஏனெனில் இயந்திரயிமாகிப் போன மனித வாழ்வில் எதற்கெல்லாமோ பயிற்சி கொடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் செய்யும் பணிகள், யாருடைய தயவுமில்லாமல் செய்யும் வேலைகள் இன்று படிப்புகளாகவும், பயிற்ச்சிகளாகவும் மாறிப்போயிருக்கிறது. சமையல் என்பது நம் வீட்டு பெண்கள் தானவே செய்யும் வேலை என்ற காலம் மலையேறிப் போய் அதற்கு கூட மூன்றான்டு படிப்பு என்;றாகிவிட்டது.


வீட்டை எப்படி சுத்தமாகவும், நவீனமாகவும் வைத்திருப்பது என்பது தன்னுடைய சொந்த முயற்சியிலோ அல்லது குடும்ப அமைப்பிலிருந்து தெறியவரும் சமாச்சாரம் என்ற நிலை மாறி அதற்கும் படிப்புகள் அல்லது தனி கோர்ஸ்கள். இப்படி எல்லாவற்றையும் வியாபார யுக்தி ஆக்ரமித்த பின்னால் நாமும் செய்வதறியாது அதன்பின்னே அடியொட்டி நடந்திட வேண்டிய நிர்கதி ஏற்பட்டுவிட்டது.

பொய் சொல்லக்கூடாது என்பதிலே கொஞ்ச காலத்திற்கு முன்னால் இருவேறு கருத்துடையவர்கள் இருந்ததில்லை. இன்றும் கூட பொய் சொல்லக்கூடாது என்பது நமது மனசாட்சி அறிவுறுத்தும் விஷயமாகும். ஆனால் தொழில் வியாபாரம் என்று வரும்போதும் வயிற்றுப்பிரச்சினை என்று வரும்போதும் தனது கொள்கையை மனித சமூகம் வெகுவாகவே மாற்றிக்கொண்டு விடுகிறது. பிழைப்புக்கு பொய் சொல்லவிட்டால் எப்படி காலம் கழிக்கமுடியும்? சோற்றுக்கு என்ன செய்வது என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

இஸ்லாம் இதில் முழுக்கவணத்தையும் செலுத்தி வயிற்றைக் காரணங்காட்டி பொய் சொல்வதை முழுவதுமாக தடை செய்துள்ளது. 'இஸ்லாம் வெறும் சித்தாங்களை மட்டும்தான் சொல்லியிருக்கிறது அவைகள் நடைமுறைக்கு சாத்தியப்படாது' என எவரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக வருடாந்திரம் ஒரு தடவை முஸ்லிம்களிடம் பொய் சொல்லக்கூடாது என்பதை உயிரோட்டம் உடையதாக ஆக்கும் வன்னம் தான் நோன்பை கடமையாக்கியுள்ளது. ஒவ்வொரு முஸ்லிமும் எந்த நேரத்திலும் பொய் சொல்லக்கூடாது என்பதை நோன்பின் மூலம் உளமார்த்தமான பயிற்ச்சியளிக்கப்படுகிறான்.
''பொய் ஈமானை தின்றுவிடும். (நபிமொழி)''

ஹலாலான சம்பாத்தியம் 

நோன்பு தரும் பயிற்சிகளில் மிக முக்கியமானது ஹலாலான சம்பாத்தியம். இன்றைய முஸ்லிம்களிடம் ஹலாலான சம்பாத்தியம் என்பது மிக குறைந்து விட்டது. எப்படியாவது பொருளீட்ட வேண்டும் என்ற முனைப்பில் இஸ்லாம் எதையெல்லாம் தடைசெய்துள்ளதோ அதையெல்லாம் தனது வணிக முறைகளாக மாற்றிக்கொண்டு விட்டார்கள். ஒருகாலத்தில் வட்டிக்கு கடன் வாங்குவதையே வெறுத்து ஒதுக்கிய இந்த சமுதாயத்தில் கந்து வட்டி கடைக்காரர்களும், மீட்டர் வட்டி கடைக்காரர்களும் பெருகி போய் இருக்கிறார்கள். சாராய வாடையே ஆகாது என்று சொன்ன சமுதாயத்தில் இன்று சாராய வியாபாரம் வெகு விமரிசையாக நடத்திகொண்டிருக்கிறது. சினிமாவுக்கு சென்றால் அபராதம் என்ற நிலைமாறி சினிமா தியேட்டர் முதலாளிகள் பள்ளிவாயில்களின் முத்தவல்லிகளாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்கள். இவர்கள்; ஐந்து நேரமும் தொழுகிறார்கள் நோன்பும் வைக்கிறார்கள்.


இதில் ஒரு விஷயத்தை பற்றி ஆச்சிரியப்படாமலிருக்க முடியவில்லை. இவர்கள்; ஹராமான தொழிற்துறைகளை தொடங்கும்போது பாத்திஹா ஓதாமல் தொடங்கமாட்டார்கள். அது வட்டிக் கடையானாலும் சரி அல்லது சினிமா தியேட்டர் ஆனாலும் சரி எப்படியாவது பாத்திஹா ஒதித்தான் தொடங்குவார்கள்.

இதற்கும் சன்மார்க்க காவலர்களாகிய கண்ணிமிக்க உலமாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அல்பாத்திஹா போட்டு பழகிப்போனவர்கள். இவ்வுலமாக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளில் சிறிதளவாவது உறுதியோடு இருக்கிறார்களா? இல்லவே இல்லை. ஹராமான பொருளை நாம் சாப்பிடக்கூடாது என்று ரமழான் முழுக்க உபதேசம் செய்பவர்கள் ஹராமான முறைகளில் தொழில் புரியும் அதிபர்களின் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்வது ஏன்?. சாப்பிட்டுவிட்டு அவர்களின் தொழில்களில் அபிவிருத்தி ஏற்பட துஆ செய்துவிட்டும் வருகின்றனர்.
ஏன் இந்த கொள்கை மாற்றம்? ஏன் இவ்விதமான இரண்டு நிலைபாடுகள்? உண்மையில் நோன்பின் நோக்கம் இதுவல்ல. ரமழான் மாதத்தில் நமது நிலைப்பாட்டில் எவ்வாறு உறுதியாக இருக்கின்றோமோ அதே நிலைப்பாட்டை நோன்பல்லாத காலங்களிலும் கடைபிடிக்கவேண்டும் என்பதற்கான செயல் வடிவில் கொடுக்கப்பட்ட பயிற்சிதான் நோன்பு. நோன்பு நோற்பவர்கள் தனது நோன்பின் நோக்கம் ஹராமான வியாபாரம், தொழிற்துறைகளில் இனிமேல் ஈடுபடக்கூடாது என்பதற்;காக கொடுக்கப்படுகிற பயிற்சியாகும் என்பதை நமது கவனத்தில் கொள்ளல் மிக அவசியமாகும்.

கோபம் மற்றும் பொறாமை கொள்ளாமலிருக்க பயிற்ச்சி 

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (திருக்குர்ஆன் 3:134)


நோன்பு கடமையக்கப்பட்ட நோக்கத்தை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்துவருகிறோம். உலகில் எதற்கெல்லாமோ பயிற்சி தரப்படுகிறது. பொறாமை படாமலிருக்க எங்காவது ஒரு பயிற்ச்சி உன்டா? கோபப்படாதீர்கள்! டென்ஷென் ஆகாதீர்கள். கோபப்பட்டால் இரத்தம் அழுத்த நோய் வரும் என்றெல்லாம் மருத்துவ முடிவுகள் தெறிவித்தாலும் கொஞ்ச நேரம் பசியாய் இருப்பவனிடம் இந்த தத்துவத்தை சொல்லிப்பாருங்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல. நான் கோபமே படமாட்டேன் என்று சொல்வார்கள். அவர்கள் சாப்பிடும் நேரத்தில் ஏதாவது இடையூறு செய்து பாருங்களேன். அப்போது தெறியவரும் அவர்கள் எவ்வளவு பெரிய பொருமைசாலிகள் என்று.
ஆகவே இந்த விஷயத்தில் இஸ்லாம் மிகத் தெளிவாகவே பயிற்சி கொடுக்க முற்படுகிறது. கோபத்தின் ஆனிவேர் எங்கிருந்து உருவாகுமோ அந்த இடத்தில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுபாட்டுடைய பயிற்சி அளிப்பதின் மூலமாக கோபம் கொள்ளலை குறைக்க முடியும். ஆகவே கோபம் கொள்ளலையும் அடுத்தவரைப் பார்த்து இஸ்லாம் அனுமதிக்காத வழியில் பொறாமை படுவதையும் நீக்குவதற்காக இஸ்லாம் நோன்பை கடமையாக்கி பயிற்சி தருகிறது.

எனவே மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் சுட்டிகாட்டுகிற நோக்கங்களையும் அதன் அடிப்படையில் அமைந்த விளக்கங்களையும் நாம் அனைவரும் சரிவர புரிந்துகொள்ள வேண்டும். நோன்பு நோற்பது என்பது வெறுமனே பசியை அறிந்து கொள்ளும் நோக்கத்திற்காக கடமையாக்கப்பட்டது அல்ல மாறாக நம் உணர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நல்லறங்கள் பல புரிந்து இறைவனின் திருப்பொறுத்தத்தைப் பெறுவதற்காக கடமையாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அத்தகைய நன்மக்களாக நம் அனைவரையும் வல்ல அல்லாஹ் ஆக்கியருள்வானாக!.

source: http://www.ottrumai.net/index.htm

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )