சின்ன வார்த்தையில் பெரிய அர்த்தங்கள்
கடந்த தொடரில், கருக் குழந்தையின் பாலைத் தீர்மானிப்பது ஆண் விந்தணுதான் என்று இறைமறையில் சொல்லப்பட்டிருக்கும் அறிவியல் உண்மையை அதனுடைய ஆதாரத்துடன் பார்த்தோம். இந்த அறிவியல் உண்மை நபி மொழியிலும் இடம் பெற்றிருக்கிறது. அது எவ்வாறு இடம் பெற்றிருக்கிறது என்பதினை உங்கள் முன் தருவதில் பெருமிதம் அடைகிறேன்.
ஒரு குறிப்பட்ட காலத்தில் வாழந்திருந்த ஒரு மனிதரால் எல்லாக்காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் பேச, எழுத முடியாது, அவரது காலத்திலும், அதனைத் தொடர்ந்த சில காலங்களிலும் வாழ்ந்தவர்களால் மட்டும் புரிந்து கொள்ளும் விதத்தில்தான் அவரது பேச்சுகள், எழுத்துக்கள் அமைந்திருக்கும். குறிப்பிட்ட காலம் சென்றதும் அவரது பேச்சுக்கள், எழுத்துக்கள் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாததாக, அல்லது வார்த்தைப் பிரயோகம் மாறிவிட்டதாக ஆகிவிடுகிறது.
அதனைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அதற்காக தனி விளக்கவுரை அவசியப்படுகிறது. இதற்கு எடுத்துக் காட்டுகள் நமது நடைமுறையில் ஏராளம் உண்டு. இடம் சுருக்கம் கருதி இங்கு எழுதுவதைத் தவிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஆனால் 1430 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பேசிய வார்த்தைகள், அவரது மொழி பேசும் இன்றுள்ள அனைவராலும் மிக எளிதில் புரிந்து கொள்ளும் படியாக அமைந்திருக்கிறது. இது அவர்களது வார்த்தைகளுக்கு இறைவன் வழங்கிய அற்புதமாகும். காரணம் அவர்களது அந்த வார்த்தைகள் வஹி அறிவிக்கப்படாத இன்னொரு குர்ஆனாக திகழ்கிறது.
அஹ்மது, மற்றும் அபூ தாவூத் ஆகிய நூட்களில் இடம் பெற்றுள்ள குர்ஆனும், அது போன்ற இன்னொன்றும் எனக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய செய்தி இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. குர்ஆன் எல்லோரும் புரிந்து கொள்ளும் பொருட்டு எளிமையாக்கப்பட்டு, இறைவனால் பாதுகாக்கப் பட்டுவருவது போல, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அர்த்தமுள்ள வார்த்தைகளும் அனைவரும் புரிந்து கொள்ளும் பொருட்டு, எளிமையாக்கப்பட்டு, இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இன்ஷா அல்லாஹ் அது இனிமேலும் தொடரும். மேலும் அவர்களது வார்த்தைகளிலிருக்கும் அர்த்தமுள்ள போதனைகள் அனைத்து நாட்டவருக்கும், அனைத்து காலத்தில் வாழ்பவர்களுக்கும் பொருந்தி வரக்கூடியதாகவே அமைந்துள்ளன.குறைந்த சொற்களால் நிறைந்த பொருள்கள் தரும் பேச்சுக்கு சொந்தக்காரராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள்.
இதனையே அவர்கள் பின் வருமாறு சிலாகித்து கூறுவதைக் கேளுங்கள்.
عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ ، وَنُصِرْتُ بِالرُّعْبِ ، فَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ ، فَوُضِعَتْ فِى يَدِى . رواه البخاري
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:நான் ஒருங்கினைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பட்டுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு உதவப் பட்டுள்ளது. (ஒரு முறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்கள் கொண்டுவரப்பட்டு, என் கையில் வைக்கப்பட்டன. நூல்: புஹாரி.
இந்த நபி மொழியில் ஒருங்கினைந்த பொருள்களைத் தரும் சொற்கள் என்பதற்கு பல அர்த்தம் கொள்ள முடியும். அதாவது குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகிப் போகாமல் எல்லாக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும்படியான ஒருங்கினைத்த வார்த்தை என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம். அதே போல், குறைந்த சொற்களால் நிறைந்த பொருள்கள் தரும் பேச்சு என்றும் அதனைப் புரிந்து கொள்ளலாம்.
அதே போல், சாதாரணப் அர்த்தத்தை பிரிதி பலிக்கும் அவர்களது வார்த்தையானது அறிவியல் உண்மையையும் உள்ளடக்கி இருக்கும் எனவும் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல அறிவியல் உண்மைகளையும் பேசியிருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் பலஅறிவியல் உண்மைகளை 1430 ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருக்கிறார்கள் என்பது வியப்பிலும் மிகப் பெரும் வியப்பாக இருக்கிறது.அவர்கள் பேசிய அந்த அறிவியல் உண்மைகள் அவர் ஒரு இறைத்தூதர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரங்களில் மிக முக்கிய ஒன்றாக இன்றும் திகழ்கிறது. அன்றைக்கும், இன்றைக்கும் நபிகளாரின் வார்த்தைகளில் உள்ள அந்த அறிவியல் உண்மையை அறிந்தவர்கள் பலரும் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ற வரலாறு பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருங்கிச் சொல்லி நிறைய கருத்துகள் கூறும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், அறியாமைக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் அமைப்பில் பல அறிவியல் உண்மைகளை மிக எளிமையாகக் கூறியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் நாம் எழுதி வரும் கருயியல் அறிவியல் குறித்து அவர்கள் கூறியிருக்கும் ஒரு தகவல். இதோ! அதனை உங்களுக்கு முன் சமர்பிக்கிறேன்.عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم أنه قال كنت قائما عند رسول الله صلى الله عليه وسلم فجاء حبر من أحبار اليهود فقال السلام عليك يا محمد فدفعته دفعة كاد يصرع منها فقال لم تدفعني فقلت ألا تقول يا رسول الله فقال اليهودي إنما ندعوه باسمه الذي سماه به أهله فقال رسول الله صلى الله عليه وسلم إن اسمىمحمد الذي سماني به أهلي فقال اليهودي جئت أسألك فقال له رسول الله صلى الله عليه وسلم أينفعك شيء إن حدثتك قال أسمع بأذني فنكت رسول الله صلى الله عليه وسلم بعود معه فقال سل فقال اليهودي أين يكون الناس يوم تبدل الأرض غير الأرض والسماوات فقال رسول الله صلى الله عليه وسلم هم في الظلمة دون الجسر قال فمن أول الناس إجازة قال فقراء المهاجرين قال اليهودي فما تحفتهم حين يدخلون الجنة قال زيادة كبد النون قال فما غذاؤهم على أثرها قال ينحر لهم ثور الجنة الذي كان يأكل من أطرافها قال فما شرابهم عليه قال من عين فيها تسمى سلسبيلا قال صدقت قال وجئت أسألك عن شيء لا يعلمه أحد من أهل الأرض إلا نبي أو رجل أو رجلان قال ينفعك إن حدثتك قال أسمع بأذني قال جئت أسألك عن الولد قال ماء الرجل أبيض وماء المرأة أصفر فإذا اجتمعا فعلا مني الرجل مني المرأة أذكرا بإذن الله وإذا علا مني المرأة مني الرجل آنثا بإذن الله قال اليهودي لقد صدقت وإنك لنبي ثم انصرف فذهب فقال رسول الله صلى الله عليه وسلم لقد سألني هذا عن الذي سألني عنه ومالي علم بشيء منه حتى أتاني الله به رواه مسلم
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஃதவ்பான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இறைத்தூதர் அருகில் நின்று கொண்டிருக்கும் போது, யூத அறிஞர் ஒருவர் வந்து முஹம்மதே! அஸ்ஸலாமு அலைக்க (உன் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினார். (அதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த) நான் அவரைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். நிலை தடுமாறி விழப்போன அவர், ஏன் என்னைத் தள்ளுகிறாய்? என்று கேட்டார். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே என்று நீ சொல்லக் கூடாதா? (முஹம்மதே! என்று பெயர் கூறி அழைக்கிறாயே அதனால்தான் தள்ளினேன்) என்றேன். அதற்கு அந்த யூதர் அவருக்கு அவரின் குடும்பத்தினர் சூட்டிய பெயர் கொண்டுதான் நாங்கள் அழைப்போம் என்று கூறினார். (இதனைக் கண்டு கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆம்! எனது பெயர் முஹம்மத்-தான் இதுவே எனது குடும்பத்தினர் இட்ட பெயராகும் என்றார்கள்.பின்பு, யூத அறிஞர் உங்களிடம் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காகவே வந்தேன் என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் கூறப் போகும் எந்த விஷயமும் உமக்கு பயனளிக்குமா? எனக் கேட்டார்கள். செவி சாய்த்துக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் வந்த யூதர். தன்னிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறிக் கொண்டே (ஆழ்ந்த சிந்தனையுடன்) கேளுங்கள் என்றார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்."இந்த பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்?", என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அஸ்ஸிராத் எனும்) பாலத்தின் அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள்.மக்களிலேயே முதன் முதலில் (அப்பாலத்தைக்) கடப்பவர்கள் யார்? என்று அடுத்து வினவினார் அந்த யூதர். ஏழை முஹாஜிரீன்கள் (மக்காவைத் துறந்து மதீனா வந்து குடியேறிய அகதிகள்) என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். அவர்கள் சுவனத்தில் நுழையும் போது வழங்கப்படும் வெகுமதி என்ன? என்று வினவினார்.
அதற்கு மீனின் ஈரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித்துண்டு எனப் பதிலளித்தார்கள். அதன் பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன? என்று அவர் கேட்க, சுவனத்தின் ஓரங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் காளை மாடு அவர்களுக்காக அறு(க்கப்பட்டு விருந்தளி)க்கப் படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள் என்று அவர் வினவினார்.
அதற்கு அங்குள்ள ஸல்ஸபீல் என்றழைக்கப்படும் நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்) என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்த போது, நீர் கூறியது முற்றிலும் உண்மையே என்றார் அந்த யூதர்.பூமியில் வசிப்பவர்களில் ஒர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே உம்மிடம் நான் வந்தேன். என்று கூறினார்.
நான் கூறப்போகும் விஷயம் உமக்குப் பயன் தருமா? என்று அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். செவி சாய்த்துக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.குழந்தை(யின் பிறப்பு) குறித்து கேட்பதற்காக நாம் உம்மிடம் வந்தேன் என்றார். அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆணின் நீர் (விந்தணு) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவை இரண்டும் சேரும் போது ஆணின் நீர் (விந்தணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்து விட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும், பெண்ணின் நீர் (சினை முட்டை) மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும் என்று கூறினார்கள்.
அந்த யூத அறிஞர் நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஒர் இறைத்தூதர்(நபி)தாம் எனக் கூறி விட்டு திரும்பிச் சென்று விட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவர் எதைக் குறித்து என்னிடம் கேட்டாரோ அவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துக் கொடுத்தான் என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம்.இந்த நபி மொழியினை சற்று ஆழ்ந்த சிந்தனையோடு மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். இன்றைய 21-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல் உண்மையைகளை மிக எளிமையாகவும், அதே நேரத்தில் அறியாமைக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் விதத்திலும் கூறப்பட்டிருப்பது தெரியவரும்.
மேலும், குழந்தை உருவாக்கத்திற்கு ஆண் விந்தணுவின் நிறமும், பெண்ணின் மதனநீரின் நிறமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இறைத்தூதர் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இன்னொரு நபி மொழியில் ஆணின் விந்தணு கெட்டியாகவும், வென்மை நிறமுடையதாகவும், பெண்ணின் மதன நீர் மெருதுவாகவும், மஞ்சள் நிறமுடையதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆரோக்கியமான குழந்தை உருவாக வேண்டுமானால் ஆணின் விந்து கெட்டியாகவும், வென்மையாகவும் இருக்க வேண்டும். காரணம் அதில்தான் வீரியமுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும், அதனால் குழந்தை தரிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். பெண்ணின் விந்து மெருதுவாகவும், மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும். அப்போது தோன்றும் கருமுட்டை முழு வளர்ச்சி அடைந்ததாக இருக்கும். அப்போது தன்னை நோக்கி வரும் உயிரணுவை முழு அளவில் ஏற்றுக் கொண்டு குழந்தை உருவாக காரணமாக அமைகிறது.ஆணின் விந்து கெட்டி குறைந்ததாகவோ, அல்லது நிறமாறியதாகவோ இருக்குமானால் அவனது விந்துவில் உள்ள உயிரணுக்கள் வீரியம் குறைந்ததாகவும், எண்ணிக்கை குறைந்தாகவும் இருக்கும். அதனால் குழந்தை தரிக்க வைக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அதுபோல், பெண்ணின் விந்து, அதன் தன்மையிலோ, நிறத்திலோ மாறுபட்டிருக்குமானால் குழந்தை தரிப்பதில் தடங்கல்கள் பலவும் ஏற்படும் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.
அடுத்து, இந்த நபி மொழித் தொடரில், இரண்டும் கலந்து விடும் போது என்று நபியவர்கள் கூறியதன் மூலம், குழந்தை உருவாகுவதற்கு ஆண் பெண் ஆகிய இருவரின் விந்துவும் அவசியம் என்பதை எளிமையாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், இந்த உண்மையை கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்புவரை இன்றைய அறிவியல் உலகில் யாருமே அறிந்திருக்க வில்லை. அதற்குப் பிறகுதான் இந்தச் செய்தியினை ஆய்வு செய்து அறிந்து கொள்ள முனைந்தார்கள்.
நபி மொழியில் மோதல் போக்கா?
இந்த நபி மொழியில் சொல்லப்பட்டிருக்கும் தகவலை மேலோட்டமாக படித்துப் பார்க்கும் போது, குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துடன் மோதுவது போன்றும், இன்றைய அறிவியல் உண்மைக்கு மாறு பட்டிருப்பது போன்றும் தோன்றலாம்.
காரணம், குழந்தையின் பாலைத் தீர்மானிப்பது ஆணின் விந்தணுதான் என்று குர்ஆன் கூறிக் கொண்டிருக்கிறது. இதனையே இன்றைய அறிவியல் உலகமும் உறுதிப்படுத்தி உள்ளது.
ஆனால், நபி மொழியில் இடம் பெற்றிருக்கும் கருத்து அதற்கு மாறுபட்டிருப்பதாக சிலருக்குத் தோன்றலாம். ஏனெனில், ஆணின் விந்து பெண்ணின் விந்தினை மிகைத்து விட்டால், அப்போது அல்லாஹ்வின் அனுமதியின் படி குழந்தை ஆணாகவும், பெண்ணின் விந்து ஆணின் விந்தை மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் அனுமதியின் படி குழந்தை பெண்ணாகவும் உருவாகும் என்று கூறும் போது குழந்தையின் பாலைத் தீர்மனிப்பது ஆண்விந்தணுவிற்கு இருக்கும் அதே பங்களிப்பு பெண்ணின் விந்துவிற்கும் உண்டு என்றுதானே விளங்குகிறது என்று கருத இடம் உண்டு.
இது போன்ற ஐயங்கள் தோன்றுவதற்கு காரணம் இந்த நபி மொழியின் சரியான பொருளை சரிவர புரிந்து கொள்ளாமையே. எனவே, இந்த நபி மொழியின் பொருளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நபி மொழி, இன்னொரு நபி மொழிக்கு விளக்கமாக அமைகிறது என்பதால், கருயியல் குறித்து வந்திருக்கும் வேறு நபி மொழிகளையும் பார்க்க வேண்டும். அப்போது மேற் கூறப்பட்ட நபி மொழி எந்தக் கருத்தை வலியுறுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.
இது குறித்த விரிவான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்பு, பெண்ணின் கருவறை அமைப்பினையும், அங்கு எவ்வாறு கருத்தரிக்கிறது, கருத்தரிக்கும் போது அங்கு என்ன என்ன நிகழ்கிறது என்பது குறித்து புரிந்து கொள்வது மிக அவசியமானதாகும். அப்போதான் இந்த நபி மொழியின் பொருளை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment