Jan 5, 2012

மனித சமுதாயத்தின் வழிகேட்டிற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர்கள் யார்?


நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும். மனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது. நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான்.
1500 வருடங்களுக்கு முன்னால் மடமை நிறைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடிப்பதில் பெருமை, விபச்சாரம் செய்வதில் பெருமை, கொள்ளை அடிப்பதில் பெருமை, கொலை செய்வதில் பெருமை, சூதாடுவதில் பெருமை, மூட நம்பிக்கைகளில் பெருமை என அனைத்து வகை ஒழுங்கீனங்களிலும் பெருமை பேசும் சமுதாயமாக மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருந்த காலம்.
தகப்பனுக்குப் பின்னால், தகப்பனின் மனைவிகளையே தாரமாக்கிக் கொள்ளும் மடமை. அளவுக்கதிகமான பெண்களை தாரமாக்கிக் கொள்வதில் பெருமை, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பெண் சிசுக்களை உயிரோடு குழிதோண்டிப் புதைக்கும் அராஜகம், அற்ப காரணங்களுக்காக தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொள்ளும் கோரம், இப்படி அன்றைய மனித குலம் நரக விளிம்பில் நின்று கொண்டிருந்தது. இந்த நிலையை இறைவனது இறுதி வாழ்க்கை வழி காட்டி நெறிநூல் 3:103வது இறைவாக்கில் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
மனித சமுதாயத்தின் இந்த வழிகேட்டிற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர்கள் இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் தரகர்களாகப் புகுந்து மக்களை வஞ்சித்துக் கொண்டிருந்த மத குருமார்கள்; அதிகாரம் வகித்தவர்கள். இந்த நிலையில் எல்லாம் வல்ல ஏகன் இறைவன் தனது இறுதித் தூதரை அனுப்பி, அவருக்கு தனது இறுதி வழிகாட்டி நெறிநூல் அல்குர்ஆனை சிறிது சிறிதாக அருளினான். பல்லாயிரம் இறைத் தூதர்களுக்கு அருளப்பட்ட பதியப்படாத நெறி நூல்களுக்கு மாறாக, மார்க்கம் நிறைவு பெற்று விட்ட தால் அது உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கவும் பட்டுவிட்டது. கடந்த 1432 ஆண்டுகளாக அதன் ஒரு புள்ளியையும் இந்த மதகுருமார்களால் மாற்ற முடியவில்லை.
23 வருட கடும் முயற்சியில், எண்ணற்ற பெரும் தியாகங்களுக்குப் பின்னர், மடமையில் ஆழ்ந்து கிடந்த அந்த மக்களில் இறைவன் நாடிய சிலர், உண்மையை உணர்ந்து உயர்ந்தார்கள். அகில உலகிற்கும் வழிகாட்டிகள் என்ற ஒப்பற்ற மேலான நிலையை அடைந்தார்கள். முஸ்லிம்கள் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைப்படி நடந்த காலம் எல்லாம், அகில உலக மக்களையும் வழிநடத்திச் செல்லும் பேறு பெற்றார்கள்.
என்று ஷைத்தானின் நேரடி முகவர்களான இந்த மதகுருமார்கள் திருட்டுத்தனமாக முஸ்லிம் சமுதாயத்திலும் நுழைந்தார்களோ அன்றிலிருந்து முஸ்லிம்களின் அழிவு காலம் தொடங்கியது. உலக மக்களை வழிநடத்திச் செல்லக் கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம், இந்த மத குருமார்களின் பெரும் சதியால், வழி கேட்டில் சென்று கொண்டிருக்கும் இதர சமூகங்கள் பின்னால் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது.
இன்று பல பிரிவுகளாகச் சிதறிக் கிடக்கும் இயக்கங்கள் நடத்தும், ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த, மறியல், பேரணி, வாழ்வுரிமை போராட்டம், இருப்பதைக் காக்க, இழந்ததை மீட்க என்றெல்லாம் முழக்கமிட்டு முஸ்லிம் ஆண்களையும், பெண்களையும் நடுவீதிக்குக் கொண்டு வரும் கோரக் காட்சிகள் எல்லாம் மாற்றாரைப் பின்பற்றியே அல்லாமல் இறைவன் காட்டிய வழியில் அல்ல என்பது மட்டுமில்லாமல் இறைக் கட்டளை களை நிராகரித்துச் செயல்படும் கொடிய செயல்கள் என்பதை அல்குர்ஆன் 3:186, 13:26, 16:71, 17:30, 28:82, 29:62, 30:37, 34:36,39, 39:52, 41:34,35, 42:12 போன்ற இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது; இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது என்பதில் நம்பிக்கையற்ற நாத்திகச் சிந்தனையே இதற்கு காரணம்! ஷைத்தான் இச் செயல்களை அவர்களுக்கு அழகாகக் காட்டுகிறான்.
முஸ்லிம்கள் அல்லாஹ் வழிகாட்டியபடி நடந்து உலகை வழி நடத்திச் செல்லத் தவறியதால், மீண்டும் இவ்வுலகம் நரக விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. அன்று காணப்பட்ட அனைத்து மிருகச் செயல்களும் இன்றைய மனித சமுதாயத்தில் நீக்கமற காணப்படுகின்றன. இந்து மதகுருமார்கள் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து, அவற்றை வழிபட்டு, தங்களுக்கு தட்சணை கொடுப்பதோடு, கோவில் உண்டியல்களில், அவர்கள் கொள்ளையடித்ததில் ஒரு பகுதியை போட்டுவிட்டால், அவர்கள் செய்த கொடூர குற்றங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து சுவர்க்கம் அனுப்பிவிடுவான் என்ற மூட நம்பிக்கையை வளர்த்து வருகிறார்கள். அதனால் இந்து பெருங்கூட்டம் வழிகேட்டில் சென்று கொண்டிருக்கிறது
அடுத்து கிறித்தவ மதகுருமார்கள் போதனைப்படி, அவர்களை நம்பியுள்ள கிறித்தவ மக்கள் எப்படிப்பட்ட பாதகச் செயல்களில் ஈடுபட்டாலும், மதகுருவிடம் வந்து காணிக்கை செலுத்தி, தான் செய்த குற்றங்களைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டால் (Confession) இறைவன் மன்னித்து விடுவான் என்ற மூட நம்பிக்கையில் மூழ்கி துணிந்து பல ஒழுங்கீனங்களை, பாவங்களை செய்து வருகின்றனர். அவர்களும் வழிகேட்டிலேயே செல்கின்றனர்.
அடுத்து முஸ்லிம் மதகுருமார்களை நம்பியுள்ள முஸ்லிம்கள் குர்ஆன் கூறும் நேரடி கருத்துக்களை நிராகரித்துவிட்டு, இந்த மதகுருமார்கள் கூறும் கோணல் வழிகளை நேர்வழியாகக் கொண்டிருக்கின்றனர். இந்த மதகுருமார்களின் ஆதரவு இல்லாமல் இறைவனின் பொருத்தம் கிடைக்காது. சுவர்க்கம் புக முடியாது என்ற மூட நம்பிக்கையில் மூழ்கி அவர்களின் சுயநலப் பொய்க் கூற்றுகளை ஏற்று அவர்களுக்கு வாரி வழங்குவதோடு, முஸ்லிம்களும் பல கொடூர குற்றச் செயல்களில் மூழ்கின்றனர். மதகுருமார்கள் பின்னால் செல்லும் முஸ்லிம்களும் வழிகேட்டிலேயே இருக்கின்றனர்.
இப்படி அனைத்து மதகுருமார்களும் இறைவனுக்கு இணை வைக்கும் நிலையில் பலகோடி பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து அவற்றின் உண்டியல்களை நிறைத்து, இம்மத குருமார்களுக்கும் கை நிறையத் தட்சிணைக் கொடுத்து விட்டால் எப்படிப்பட்ட கொடூர, பாவமான, இழிசெயல்களைச் செய்தாலும் இப்பொய்க் கட வுள்களின் ஆசியால் இறைவன் அனைத்தையும் மன்னித்து சுவர்க்கம் அனுப்பிவிடுவான் என்ற மூடநம்பிக்கையில் மூழ்கி பஞ்சமா பாவங்களையும் துணிந்து செய்து வருகின்றனர். அதனால் உலகே அழிவின் விளிம்பில் நிற்கிறது.
இது போதாதென்று இந்த மதகுருமார்களின் அட்டூழியங்களைத் தாங்க இயலாத சில அறிவு ஜீவிகள் கடவுள் என்று ஒன்று இருக்கப் போய்த் தானே இந்த மதகுருமார்கள் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறார்கள். கட வுளே இல்லை என்று நிலை நாட்டிவிட்டால் கட வுளின் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், அநியாயங்கள், அக்கிரமங்கள் அனைத்தையும் ஒழித்து விடலாம் என சாத்தியமே இல்லாத ஒன்றை மூடத்தனமாக நம்பி கடவுளை மற, மனிதனை நினை. கடவுளை கற்பிப்பவன் முட்டாள், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என முழக்கமிடுகின்றனர். பொய்க் கடவுள்களையும், மதகுருமார்களையும் ஒழித்துக் கட்ட திராணியற்ற இந்த நாத்திகர்களின் தவறான போதனையால், மதகுருமார்கள் ஏற்படுத்தும் பெரும் தீங்குகளை விட, நாத்திகர்களின் கடவுள், மறுமை மறுப்பு முழக்கம் மெகா மெகா தீங்குகளை இவ்வுலகில் ஏற்படுத்தி வருகிறது.
கடவுளோ, மறுமையோ இல்லை. அதனால் நாம் எப்படிப்பட்ட கொடூரமான பெரும் குற்றங்களைச் செய்தாலும் நமக்கு எவ்வித ஆபத்துமில்லை. எப்படியும், வரம்பு மீறியும் இவ்வுலகில் வாழலாம்; அனுபவிக்கலாம். நாம் இவ்வுலகில் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் நமது திறமையால் ஏமாற்றிவிட்டால், அல்லது கொள்ளையடிப்பதில் ஒரு பகுதியை ஆட்சியாளர்களுக்கும்,
அதிகாரிகளுக்கும் கையூட்டாகக் கொடுத்து விட்டால் தப்பி விடலாம்; குபேர வாழ்க்கை வாழலாம் என மனப்பால் குடிக்கின்றனர். போலி பொய்க் கடவுள்களின் உண்டியலில் கொள்ளை அடித்ததில் ஒரு பகுதியைப் போட்டுவிட்டால் தப்பி விடலாம் என்று விபரம் கெட்ட ஆத்திகர்கள் மதகுருமார்களை நம்பி ஏமாறுவதுபோல், நாத்திகர்களும், நாத்திக மத குருமார்களை நம்பி ஏமாறுகின்றனர். தமிழகத்தில் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து நூறு தலைமுறைக்கும் மேலாக பல்லாயிரம் கோடிகளைக் குவித்து வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பெரியாரை ஆசானாகக் கொண்ட நாத்திகச் சிந்தனையுடையவர்களே என்பதை இங்கு அவதானிக்கவும்.
தங்கள் பகுத்தறிவுக்கும், மனசாட்சிக்கும் விரோதமாக இம்மாபாதகச் செயலை செய்யத் தூண்டும் தீய சக்தி எது என சிந்திக்கவும் உணரவும் தவறுகின்றனர் நாத்திகர்கள். ஆக பல தெய்வ நம்பிக்கை ஆத்திகர்களாலும், நாத்திக நம்பிக்கையாளர்களாலும் இன்று உலகே நாசக்காடாக ஆகிக் கொண்டிருக்கிறது. நான்கு கால் மிருகங்கள் வாழும் காடுகளை விட இரண்டு கால் மிருகங்கள் வாழும் நாடுகள் கேடு கெட்டுக் காணப்படுகின்றன. முறையான சிந்தனையையும், பகுத்தறிவையும் கொண்டுள்ள மனிதர்கள் வேதனையில் வெந்து நூலாகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலை மாறி மீண்டும் உலகில் சுபீட்சம் துளிர்க்க வேண்டும் என்றால், மனிதன் உண்மையிலேயே மனிதனாக வாழவேண்டும் என்றால் அதற்குரிய வேறு வழியே இல்லாத ஒரே வழி இறைவன் நம்மைப் படைத்து நமக்குக் காட்டியுள்ள அந்த ஒரே வழிதான். 1450 வருடங்களுக்கு முன்னர் இன்று போல் அன்று நரகின் விளிம்பில் நின்று கொண்டிருந்த மக்களை, மனித குலத்திற்கென்றே இறைவன் இறக்கி அருளிய நெறிநூலே காப்பாற்றி உயர் நிலைக்கு உயர்த்தியது. அதுபோல் இன்றும் மனிதனின் சுய கற்பனைகள் அனைத்தையும் புறந்தள்ளி அந்த ஒரே இறைவன் அருளிய இறுதி நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து, அதன் போதனைப்படி மனிதன் நடக்க முன்வந்தால் மட்டுமே உலகு உய்ய வழி பிறக்கும். வேறு வழியே இல்லை; இது உறுதி. அறிவு ஜீவிகளே முறையாகச் சிந்தியுங்கள்.
source: அந்நஜாத்

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )