மேலும் அவர்கள் கூறுவார்கள்: "எங்கள் ரட்சகா! ஜஹன்னம் எனும் நரகத்திஉன் வேதனையை எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக! நிச்சயமாக அதன் வேதனை தாங்கிக்கொள்ள முடியாததாக இருக்கிறது. நிச்சயமாக அது நிலையாகத் தங்கியிருப்பதற்கும் சற்று நேரம் தங்குவதற்கும் மிகக் கெட்டதாகவும் இருக்கின்றது."(அல் குர் ஆன் 25: 65, 66)
பிரார்த்தனை தான் வணக்கத்தின் மூளை - சத்து என்று கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கேட்டுப் பெற வேண்டிய இம்மை, மறுமை சம்பந்தப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் இறைவனிடம் கேட்குமாறு நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.
இறைமறையாம் திருக்குர்ஆனிலும் சுமார் 60 க்கும் மேற்பட்ட ''துஆ''க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எந்த பிரார்த்தனையை அதிகமதிகமகக் கேட்க வேண்டும் என்பதற்கு பின்வரும் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.
உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒருமுறை துஆச் செய்யும்பொழுது "யா அல்லாஹ் என் கணவர் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்), தந்தை அபூஸுஃப்யான், சகோதரர் முஆவியா உள்ளிட்ட அனைவரையும் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த செல்வத்துடனும் நல்வாழ்வு வாழச்செய்வாயாக" என்று பிரார்த்திதார்கள். இதைக்கேட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உம்மு ஹபீபாவே! அல்லாஹ்வால் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்ட இந்த விஷயங்கள் பற்றிக் கேட்பதைவிட நரகின் வேதனையை விட்டுப் பாதுகாப்புக்கும், பாவமன்னிப்புக்கும் கேட்டால் நன்றாக இருக்கும்" என்று கூறி பிரார்த்தனைகளிலேயே அதிக இடம் பிடிக்க வேண்டிய விஷயம் இதுதான் என்பதை உணர்த்தினார்கள்.
ஏனெனில் அல்லாஹ் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்து அவர்களுக்கு சிரம் பணிந்து மரியாதை செய்யுமாறு அவன் கட்டளையிட்டபோது அதற்குப் பெருமையாக மறுத்துப் பேசிய இப்லீஸிடம் சொன்ன வார்த்தை "உன்னையும் உன்னைப் பின் தொடர்ந்தவர்களையும் கொண்டு ஜஹன்னம் - நரகத்தை நான் நிச்சயம் நிரப்புவேன் (அல்குர்ஆன் 7 : 18) என்பதுதான்.
"மனிதர்களாலும், ஜின்களாலும் ஜஹன்னமை (நரகத்தை) நான் நிரப்புவேன்" என்ற உம் இறைவனின் சொல் பூர்த்தியாகிவிட்டது (அல்குர்ஆன் 12 : 119) போன்ற வசனங்கள் நரகின் கொடிய வேதனையிலிருந்து நாம் பாதுகாப்புத் தேடியவர்களாகவே இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.
நரகத்தை விட்டும் பாதுகாப்புப் பெற்றுவிட்டால் போதும் மற்ற அனைத்தும் இலேசாகிவிடும். சுவர்க்கத்தை தனியாகக்கேட்க வேண்டிய கட்டாயமில்லை. எனினும் கேட்கலாம். எனவேதான் ஹஜ்ஜின்போது கேட்க வேண்டிய மிக மிக முக்கியமன ‘துஆ’வாகிய "ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா..." எனும் எல்லோரும் அறிந்துள்ள - எப்போதும் கேட்கின்ற ‘துஆ’வில் "இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நல்வாழ்வைத் தா, மறுமையிலும் நல்வாழ்வைக் கொடு! நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்று" என்று நாம் கேட்கின்றோம். நரகிலிருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டாலே அப்புறமென்ன நிலையான சொர்க்கம் தானே!
எனவே நமது ‘துஆ’க்களில் மிகவும் அதிகமாக இடம் பிடிக்க வேண்டிய கோரிக்கை "நரகிலிருந்து பாதுகாப்பு" தான். எனவேதான் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ஸுப்ஹுக்குப் பிறகும், மஃரிபுக்குப் பிறகும் "அல்லாஹும்ம அஜிர்னீ மினன்னார்" என 7 தடவை கூறி நரகை விட்டுப் பாதுகாக்கக் கோருமாறு பணித்தார்கள்.
‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்).
0 comments:
Post a Comment