''நாம் வானத்திலிருந்து அளவுடன் தண்ணீரை இறக்கிவைத்தோம். பின்னர் அதனைப் பூமியில் நாம் தங்க வைத்தோம். அதனைப் போக்கிவிடவும் நாம் ஆற்றலுடையோர் ஆவோம். மேலும், அதனைக் கொண்டு பேரீச்சை, திராட்சை முதலிய தோப்புகளையும் நாம் உங்களுக்காக உற்பத்தி செய்தோம். அவைகளில் உங்களுக்கு வேண்டிய அநேகமான கனி வர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுகிறீர்கள்.'' (ஸுறா அல் முஃமினூன் 18,9)
நிலத்தினடியிலுள்ள நீரானது மேலிருந்து பொழிகின்ற மழை நீரினால் உருவாகின்றது என்ற உண்மை மிக அண்மைக்காலக் கண்டுபிடிப்பாகும். பெய்யும் மழை நீருக்கும் நிழத்தினுள்ளே இருக்கும் நீருக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பது சமீபகாலம் வரை நிலவி வந்த கருத்தாகும். ஆனால் அல்குர்ஆனோ திட்டவட்டமாக இந்த உண்மையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எத்துனை அழகாகக் குறிப்பிட்டிருக்கின்றது.!
''நாம் வானத்திலிருந்து திட்டமிட்ட அடிப்படையில் அளவுடன் நீரை இறக்கினோம்''
அதாவது, அழிவை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் மிதமிஞ்சிய நீரை இறக்காமலும் வரட்சியும் நீர்ப்பற்றாக்குறையும் ஏற்படும் விதத்தில் குறைந்த அளவு மழையை இறக்காமலும் பொருத்தமற்ற நேரத்தில் மழை பொழியச் செய்து நீரைப் பயனற்றதாக ஆக்கி விடாமலும் திட்டமிட்ட அடிப்படையில் அளவுடன் இதனை இறக்குகின்றோம் என்பது இதன் கருத்தாகும்.
''பின்னர் அதனைப் பூமியினுள்ளே தங்க வைத்தோம்.''
மழையாகப் பொழிந்த நீரே பூமியினுல் இருந்து பெறப்படுகின்றது என்ற உண்மை இதன் மூலம் தெளிவாகின்றது.
தமது வல்லமையைக் கொண்டு நீரைப் பூமியினுள் தேக்கி வைத்துள்ள அல்லாஹுத்தஆலா, தான் நாடினால் அதனைப் போக்கிடவும் சக்தியுடையவனாவான். இதனையே அல்லாஹ்:
''அதனைப் போக்கிடவும் நாம் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கின்றோம்'' என்று கூறுகின்றான்.
தண்ணீரே வாழ்க்கைக்கு அடிப்படையான ஆதாரமாகும். அதிலிருந்தே எல்லா உயிரினங்களும் தோன்றுகின்றன. இவ்வுண்மையை வசனத்தின் அடுத்த தொடர் விளக்குகின்றது.
''மேலும், அதனைக் கொண்டு (அதவது நீரைக் கொண்டு) பேரீச்சை, திராட்சை முதலிய தோப்புக்களையும் நாம் உங்களுக்கு உற்பத்தி செய்தோம். அவற்றில் உங்களுக்கு வேண்டிய அநேகமான கனிவர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்'';
இங்கு, தாவர உலகில் நீரைக் கொண்டு உயிர் பெறும் பேரீச்சை, திராட்சை ஆகிய இரண்டு பழ வர்க்கங்களை அல்லாஹ் உதாரணமாகக் கூறியுள்ளான். தொடர்ந்து வரும் வசனத்தில், நீரினால் வளரும் ஸைதூன் மரத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளான். மனிதன் இந்திரியம் எனும் நீர்த்துளியினால் உருவாகியது போல், உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரை அடிப்படையாகக் கொண்டே தோன்றின என்பது ஒரு பேருண்மையாகும்.
உலகில் அனைத்து உயிரினங்களதும் வாழ்வு நீருடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது. பூமியின் மேற்பரப்பில் 70 வீதம் நீராகும். மண்ணுடன் சேர்ந்தும், பூமிக்கு அடியிலும், காற்றிலும், எல்லா உயிரினங்களிடத்தும் நீர் காணப்படுகின்றது. மனித உடலில் 70 வீத நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். மேலும், நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களிலும் காய் கறிகள், பழங்கள் முதலியவற்றிலும் நீர் இருக்கின்றது.
இந்த உண்மையை மற்றுமொரு திருவசனம் மிக அழகாக குறிப்பிடுகின்றது:
''நாம் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்தே உருவாக்கினோம்'';
நவீன விஞ்ஞானிகள் மிகப் பெரியதொரு கண்டுபிடிப்பாகக் கருதப்படக் கூடிய இந்த உண்மையை அல்குர்ஆன் எத்துனை அழகாக, எழிமையாகக் குறிப்பிட்டுள்ளது என்பதனைக் கவனிக்க வேண்டும்.
உயிரினங்களின் தோற்றத்திற்கு அடிப்படையாகவும் மூலமாகவும் தண்ணீர் அமைந்தது என்ற உண்மையை உலகுக்கு நிறுவிய பெருமை டாவினைச் சாரும் என்று கூறி, அவரைப் பாராட்டும் விஞ்ஞான உலகம், அல்குர்ஆன் இந்த உண்மையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகச் சாதாரணமாக கூறியிருப்பதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிசயத்திலும் அதிசயமாகும்.
அல்குர்ஆனின் இன்னுமொரு வசனம் இதே கருத்தை மேலும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது:
''அல்லாஹ் அனைத்து உயிரினங்களையும் நீரிலிருந்து படைத்தான்''
இந்த வசனம், ஆரம்பத்தில் உயிரினங்களின் தோற்றம் கடலிலிருந்தே நிகழ்ந்தது. அதாவது, உயிரினங்கள் நீரில் தோன்றின. பின்னர்தான் பலவகை உயிரினங்களும் உருவாகித் தரையிலும் பரவின என்ற நவீன விஞ்ஞானம் நிறுவ முயலும் கருத்தை விளக்குவதாகவும் அமையலாம். அல்லது ஒவ்வோர் உயிரினமும் நீரை அடிப்படைக் கூறாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதாகவும் இருக்க முடியும்.
விஞ்ஞானிகள் பிற கிரகங்களில் நீர் இருக்கின்றதா என ஆராய்கின்றனர். ஏதேனுமொரு கோளில் நீர் இருப்பதாக அறிந்தால், அங்கே உயிரினமும் இருக்கக் கூடும் என ஊகிக்கின்றார்கள். வேறொரு வகையிற் சொல்வதானால், உயிரினம் இருப்பதற்கு நீரை ஓர் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். சந்திரனில் உயிரினம் இல்லை. ஏனெனில், அதனைச் சூழ ஒட்சிசனோ நீரோ கிடையாது. செவ்வாயில் சில வேளை உயிரினம் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஏனெனில், அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
நீர் அல்லாஹ்வின் மகத்தானதோர் அருட்கொடை என்பதை இவ்வுண்மைகள் விளக்கி நிற்கின்றன.
பருகுவதற்கு நீரை இன்பமானதாக அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கின்றான். அதனைக் கசப்போ உவர்ப்போ இன்றி ஆக்கி வைத்திருக்கின்றான். கடல் நீர் உப்புத் தன்மை வாய்ந்தது. அதனை உயிரினங்களால் பருக முடியாது. கடல் நீர் உப்புத் தன்மையை இழந்தால் அது கெட்டுப் போய்விடும். கடல் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாக்கப்டுகின்றது. இந்த ஆவி மேலே சென்று குளிர்ச்சி யடைந்ததும் மேகமாக மாறுகின்றது. மேகம் மேலும் மேலும் குளிர்ச்சியடைந்து மழை என்ற பெயரில் நன்னீராகப் பொழிகின்றது. அது உயிரினங்களுக்குப் பயன்படும் விதத்தில் ஆறாக ஓடுகின்றது. இந்தச் செயற்பாட்டை அல்லாஹுத்தஆலா இவ்வாறு விளக்குகின்றான்:
''நபியே! நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான் மேகங்களை ஓட்டி அவைகளை ஒன்று சேர்த்து ஒன்றன் மேல் ஒன்றாகவும் அடுக்குகின்றான். பின்னர் அம்மேகங்களின் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கின்றீர். மேலும், அவனே வானத்திலுள்ள மேக மழைகளிலிருந்து ஆலங்கட்டியையும் பொழியச் செய்கின்றான். அதனை அவன் நாடியவர் மீது விழும் படி செய்கின்றான். அவன் நாடியவர்களை விட்டு அதனைத் திருப்பி விடுகின்றான். அதன் மின்னலின் வெளிச்சம் பார்வையைப் பறிக்கப் பார்க்கின்றது.'' (ஸுறா அந்நூர் :43)
மேகங்களில் குறிப்பிட்டதொரு வீதத்தில் மின்னேற்றம் நடைபெறுகின்றது. இதனைத்தான் நாம் மின்னலாகவும் இடியாகவும் காண்கின்றோம். இது நேர் எதிர் மின் சக்திகளுக்கிடையே நடைபெறுகின்ற மிக நுணுக்கமானதொரு செயற்பாடகும். இந்நிகழச்சியில் சிறிதளவேனும் மாற்றம் ஏற்படுமாயின் தண்ணீரானது உவர் நீராக மாறிவிடும். அதனை விளக்கும் வகையில் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
''நீங்கள் குடிக்கின்ற நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து நீங்கள் அதனைப் பொழிவிக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிவிக்கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக்கி விட்டிருப்போம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?'' (ஸுரா அல்-வாகிஆ 68-70)
குடிக்கப் பயன்படும் நீர் தன்னுள்ளே கண்ணைப் பறிக்கும் மின்னலையும் காதைச் செவிடாக்கும் இடியையும் கொண்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமல்லவா?
''பளீரெனக் தோன்றும் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகின்றான். அதனைக் கண்டு உங்களுக்கு அச்சமும் ஆர்வமும் ஏற்படுகின்றன. மேலும் அவன்தான் (நீர் நிறைந்த) கனமான மேகத்தையும் எழுப்புகின்றான்.'' (ஸுறா அர்-ரஃத் :12)
நீரின் முக்கியத்துவத்தை இவ்வாறெல்லாம் விளக்கும் அல்-குர்ஆன், அதன் ஆரம்பத் தோற்றத்தைப் பற்றியும் விளக்குகின்றது:
''நாம் தண்ணீரை வானத்திலிருந்து ஏராளமாகக் கொட்டினோம்'' (ஸுறா அபஸ :27)
நீரானது மழை என்ற உருவத்தில் வானத்திலிருந்து கொட்டுவதை இது குறிக்கின்றது என்று சாதாரணமாகக் கூறலாம்.
இவ்வாறே இந்த வசனம் நீரின் ஆரம்பத் தோற்றத்தைப் பற்றி விளக்குகின்றது என்றும் குறிப்பிட முடியும். ஏனெனில், இன்றுள்ள சமுத்திரங்கள் ஆரம்பத்தில் விண்வெளியில் தோன்றிப் பின்னர் பெரிய அளவில் பூமியில் இறங்கியதாக விஞ்ஞான ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன.
பூமியானது சூரியனிலிருந்து பிரிந்த வேளையில் சுமார் 12 ஆயிரம் பாரன்ஹைட் பாகை சூடாக இருந்தது. அந்நேரத்தில் ஒட்சிசன், ஹைதரசன் போன்ற மூலகங்கள் தனித்தனியாகவே இருந்தன. எந்தவொரு இராசாயனக் கலவையும் உருவாகும் வாய்ப்பு இருக்கவில்லை. பின்னர் பூமியானது படிப்படியாகக் குளிர்ச்சியடைய ஆரம்பித்த போது, மூலகங்களின் சேர்க்கைகள் ஏற்படலாயின. ஆனால், பல பொருட்களும் உருவாயின. புவியின் வெப்பமானது சுமார் 4 ஆயிரம் பாகை பாரன்ஹைட் நிலைக்கு வந்த போது, ஒட்சிசனும் ஐதரசனும் இணைந்து தண்ணீர் உருவானது. இச்சந்தர்ப்பத்தில் நீரானது மிகப் பெருமளவில் இருந்திருக்கும். இந்த வகையில், இன்றுள்ள எல்லாச் சமுத்திரங்களும் அண்டவெளியில் இருந்திருக்கும். பின்னர் புவியை நோக்கிப் பாரிய அளவில் இறங்கியிருக்கும். இவ்வாறு சில விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
''நாம் வானத்திலிருந்து நீரைப் பெரிய அளவில் கொட்டினோம்.'' என்ற திருவசனம் இந்த உண்மையைக் குறிப்பதாகவும் இருக்க முடியுமல்லவா?
ஆலிமா மஸ்ஹூதா பேகம்
0 comments:
Post a Comment