Mar 15, 2012

விலக்கப்பட்ட உணவுகள் - I




தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) உள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன். கருணையுடையவன்.
அல்குர்ஆன் 2:173
இந்த வசனம் விலக்கப்பட்ட உணவுகள் யாவை. அவை அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் எவை ஆகிய இரண்டு விஷயங்களைக் கூறுகிறது.

திருமறைக் குர்ஆனில் சில வசனங்களை அதன் மேலோட்டமான பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. வேறு ஆதாரங்களின் துணையுடன் ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். அத்தகைய வசனங்களில் இந்த வசனமும் ஒன்றாகும்.

இந்த வசனத்தையும் இதுபோன்ற வசனங்களையும் அவற்றின் மேலோட்டமான பொருளில் புரிந்து கொண்டால் ஏனைய வசனங்களை மறுக்கக்கூடிய நிலை ஏற்பட்டு விடும். எனவே தான் இவ்வசனம் பற்றி நாம் விரிவாக ஆராய்கின்றோம்.

தாமாகச் செத்தவை

விலக்கப்பட்ட உணவுகளில் 'தாமாகச் செத்தவை' இவ்வசனத்தில் முதலில் கூறப்படுகின்றன. தாமாகச் செத்தவைகளை உண்ணக்கூடாது என்றால் அடித்தோ கழுத்தை நெறித்தோ வேறு வழிகளிலோ கொல்லப்பட்டவைகளை உண்ணலாம் என்ற முடிவே மேலோட்டமாக இவ்வசனத்தைப் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கின்றது. தாமாகச் செத்தவை என்பதன் நேரடிப் பொருள் அதுதான் என்றாலும் திருக்குர்ஆனுடைய வழக்கில் முறையாக அறுக்கப்படாமல் செத்தவை. சாகடிக்கப்பட்டவை அனைத்தும் தாமாகச் செத்தவை என்பதில் அடங்கும்.

கழுத்து நெறிக்கப்பட்டுச் செத்ததும் அடிப்பட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும் முட்டப்பட்டுச் செத்ததும், வன விலங்குகளால் சாப்பிடப்பட்டுச் செத்ததும் ஹராமாக்கப்பட்டுள்ளன என்பதை அல்குர்ஆன் 5:3 வசனத்தில் இறைவன் தெளிவு படுத்துகிறான்.

தாமாகச் செத்தவை என்பது முறையாக அறுக்கப்படாதவற்றைக் குறிக்கும் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

'
முறையாக அறுக்கப்படாதவைகளை உண்ணக்கூடாது' என்பதையும் பொதுவாக விளங்கிக் கொள்ளக்கூடாது. விலங்கினத்தையும், பறவையினத்தையும், மட்டுமே இது குறிப்பிடுகின்றது. கடல்வாழ் பிராணிகள் தாமாகச் செத்தாலும் அந்தச்சாவு எந்த முறையில் ஏற்பட்டாலும் அவற்றை உண்ணலாம். இந்த வசனத்திலிருந்து இந்த விதிவிலக்கை நாம் விளங்க முடியாவிட்டாலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதை தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்' என்று விடையளித்தார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி
நூல்கள்: திர்மிதீ 64, நஸயீ 59,330, அபூதாவூத் 76, இப்னுமாஜா 370, 381, 382, 3237,  அஹ்மத் 8380, 8557, 8737, 14481, முஅத்தா 37, தாரிமி 723, 1926, இப்னு குஸைமா 111, 112, இப்னு ஹிப்பான் 1243, 1244, 5258, ஹாகிம் 491, 492, 493, 498, 4997
'தாமாகச் செத்தவை ஹராமாக்கப்பட்டுள்ளன' என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. உண்பதற்கு ஹராமாக்கப் பட்டுள்ளன என்று கூறாமல் பொதுவாக ஹராமாக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.

உண்பதற்கும் பயன்படுத்தக்கூடாதுவேறு எந்த வகையிலும் அதைப் பயன்படுத்தக் கூடாது என்று இதைப் புரிந்து கொள்வதா? அல்லது உண்பதற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடாது. வேறு வகையில் பயன்படுத்தலாம் என்று இதைப் புரிந்து கொள்வதா?

இது பற்றி ஆதாரப்பூர்மான ஹதீஸ்களை நாம் ஆராயும் போது முரன்பட்ட இரு கருத்துக்களுக்கும் சான்றாக ஹதீஸ்களைக் காண முடிகின்றது. ஆனாலும் இந்த இரு வகையான ஹதீஸ்களையும் இணைத்து சிந்திக்கும் போது முரண்பாடற்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.

மைமூனா(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு ஒரு ஆடு தர்மமாக கொடுக்கப்பட்டது. அந்த ஆடு செத்துவிட்டது. அந்த ஆட்டைக் கடந்து சென்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அதன் தோலை நீங்கள் எடுத்துப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் 'இது தானாகச் செத்ததாயிற்றே' என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அதை உண்பது தான் ஹராம்' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி
நூல்கள்: புகாரி 1492, 2221, 5531, 3592, 3597, முஸ்லிம் 542, 543, 544, 546, அஹ்மத் 2251, 2861, 2894, 3273, 3282, 3341, 25568, , அபூதாவூத் 3592, 3597, நஸயீ 4162, 4163, 4164, 4165, 4166, 4188, இப்னுமாஜா 3600, 3601
ஸவ்தா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான ஒரு ஆடு செத்துவிட்டது. அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! இந்த ஆடு செத்துவிட்டது என்றார்கள். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், 'அதன் தோலை நீங்கள் எடுத்திருக்கக் கூடாதா?' என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்கள் செத்த ஆட்டின் தோலை நாங்கள் எப்படி எடுக்க முடியும்? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'தாமாகச் செத்தவை. ஓட்டப்படும் இரத்தம், பன்றியின் இறைச்சி - நிச்சயமாக அது அசுத்தமாகும் - மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை தவி வேறெதுவும் உண்பவர் மீது ஹராமாக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் காணவில்லை என்று கூறுவீராக' (6:145) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள். 'நீங்கள் உணவாக இந்தத் தோலை உட்கொள்ளவில்லையே? பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்!' எனவும் கூறினார்கள். உடனே ஸவ்தா(ரலி) அவர்கள் செத்த ஆட்டின் தோலை உரித்து வர ஆளனுப்பினார்கள். அதைப்பாடம் செய்து அதிலிருந்து தண்ணீர்ப்பை தயாரித்துக் கொண்டார்கள். அது கிழியும் வரை அவர்களிடம் இருந்தது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி),
நூல்: அஹ்மத் 2870
ஆதாரப்பூர்வமான இவ்விரு ஹதீஸ்களை குறிப்பாக பெரிய எழுத்தில் உள்ள சொற்களை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

இந்த ஹதீஸில் செத்த ஆட்டின் தோலைப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அனுமதிக்கிறார்கள். உண்பவர் மீது, உணவாக, உண்பது தான் ஹராம் ஆகிய வார்த்தைகள் தாமாகச் செத்தவற்றை உண்பது மட்டுமே ஹராம், வேறு வழிகளில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறிவிக்கின்றன.

இதற்கு முரணாக அமைந்த ஹதீஸ்களைப் பார்ப்போம்.

மதுபானம், தாமாகச் செத்தவை, பன்றி, (மாற்றாரின்) வழிபாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை விற்பதை அல்லாஹ் விலக்கியுள்ளான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அல்லாஹ் தூதரே! தாமாகச் செத்தவைகளின் கொழுப்புக்கள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு எண்ணெய் பூசப் பயன்படுத்தப் படுகின்றன. மக்கள் விளக்கெரிக்கப் பயன்படுத்துகின்றனர். இது பற்றிக் கூறுங்கள்!' என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'கூடாது. அது ஹராம் தான் என்று கூறிவிட்டு யூதர்களை அல்லாஹ் நாசமாக்கட்டும்! அவர்களுக்கு அல்லாஹ் கொழுப்பை ஹராமாக்கியவுடன் அதை உருக்கி விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிடலானார்கள்.' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி
நூல்கள்: புகாரி 2236, முஸ்லிம் 2960, அஹ்மத் 6702, அபூதாவூத் 3025, திர்மிதீ 1218, நஸயீ 4183, 4590, இப்னுமாஜா 2158, 13948
ஒரு கூட்டத்தினருக்கு ஒரு பொருளை உண்பதற்கு அல்லாஹ் ஹராமாக்கினால் அதன் கிரயத்தையும் ஹராமாக்கி விடுகிறான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்கள்: அஹ்மத் 2111, 2546, 2889, அபூதாவூத் 3026
உண்பதற்குத் தடுக்கப்பட்டால் அவற்றை எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. ஆதாரப்பூர்வமான இவ்விரு செய்திகளையும் முரண்பாடில்லாமல் எப்படிப் புரிந்து கொள்வது?

முதல்  ஹதீஸ் தோலைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது ஹதீஸ் கொழுப்பைப் பற்றிக் கூறுகிறது. எனவே தோலுக்கும் கொழுப்புக்கும் வேறு வேறு சட்டங்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியாது.

ஏனெனில் தோல் சம்பந்தப்பட்ட ஹதீஸில் 'செத்தவற்றிலிருந்து உண்பதையே ஹராமாக்கியுள்ளான்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பொதுவான காரணத்தைக் கூறுகிறார்கள். இந்தக் காரணம்  தோல் மட்டுமின்றி அனைத்தையும் உள்ளடக்கும் காரணமாகும்.

கொழுப்பு சம்மந்தப்பட்ட ஹதீஸில் ஒரு பொருளை உண்பதற்கு இறைவன் தடை செய்தால் அதை விற்பதையும் அதனால் கிடைக்கும் வருவாயையும் ஹராமாக்கிவிட்டான் என்று காரணம் கூறப்படுகிறது. இந்தக் காரணமும் பொதுவானது தான். கொழுப்பை மட்டும் குறிப்பதல்ல.

எனவே ஒருவகை ஹதீஸ் தோலைப் பற்றிப் பேசுகிறது. மற்றொரு வகை ஹதீஸ் கொழுப்பைப் பற்றிப் பேசுகிறது என்று கூறமுடியாது. இரண்டு ஹதீஸ்களிலும் பொதுவான காரணங்கள் கூறப்படுகின்றன.

இரண்டில் ஒன்றை ஏற்றால் மற்றொன்றை ஏற்க முடியாத நிலை ஏற்படும். அல்லாஹ்வுடைய தூதரின் வார்த்தையில் எந்த முரண்பாடும் இருக்காது என்ற உணர்வுடன் கவனமாகச் சிந்தித்தால் இரண்டுக்கும் முரண்பாடில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஹலாலாக்கப்பட்ட ஒரு உயிர்ப்பிராணியை எடுத்துக் கொண்டால் அதில் உண்பதற்குப் பயன்படும் இறைச்சி, கொழுப்பு, ஈரல், நுரையீரல், குடல் போன்றவைகளும் உள்ளன. உண்பதற்குப் பயன்படாத தோல், மயிர், குளம்பு, குடலில் தேங்கியுள்ள சாணம் மற்றும் எலும்பு போன்றவைகளும் உள்ளன.

அந்த ஹலாலான உயிர்ப்பிராணி செத்துவிட்டால் உண்பதற்குப் பயன்படும் பொருட்களை உண்ணவோ வேறு வகையிலோ பயன்படுத்தக் கூடாது. உண்பதற்கு உதவாத பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு விளங்கினால் முரண்பாடு நீங்கி விடுகின்றது.

'
உண்ண ஹராமாக்கியதை விற்கவும் ஹராமாக்கி விட்டான் என்ற வாக்கியம் உண்ண ஹராமாக்கப்பட்ட மாமிசம் கொழுப்பு போன்றவற்றையே குறிக்கின்றது.

'
செத்தவற்றிலிருந்து உண்பதையே ஹராமாக்கியுள்ளான்' என்ற வாக்கியம் உண்பதுடன் சம்பந்தப்படாத  பொருட்களை வேறு வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றது.

ஒரு ஹதீஸ் உண்பதற்குரிய பாகங்களைப் பற்றியும் மற்றொரு ஹதீஸ் உண்பதற்குரியதாக இல்லாத பாகங்களைப் பற்றியும் கூறுகின்றது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எடுத்துக் கொண்டால் இதில் முரண்பாடு நீங்கிவிடும்.

முறையாக அறுக்கப்படாதவை என்பதிலிருந்து வேட்டையாடப்படும் பிராணிகளும் விலக்குப் பெறுகின்றன. எந்த முறையில் அறுக்க வேண்டுமோ அந்த முறையை வேட்டையின் போது கையாள வேண்டியதில்லை. பின்வரும் வசனத்திலிருந்து இந்த விதிவிலக்கை நாம் அறியலாம்.

அவர்கள் உம்மிடம் தங்களுக்கு அனுமதிக்கப் பட்டவைகளைப் பற்றிக் கேட்கின்றனர். தூய்மையானவைகளும் அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி உங்களால் பயிற்றுவிக்கப்பட்ட வேட்டைப் பிராணிகள் வேட்டையாடியதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்று கூறுவீராக! (வேட்டையாடும்) பிராணிகள் வேட்டையாடியதில் (எதையும் உண்ணாமல்) உங்களுக்காகக் கொண்டு வந்தால் அவற்றை உண்ணுங்கள்! அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.
(அல்குர்ஆன் 5:4)
இதுபற்றி நபி(ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.
நாங்கள் பயிற்றுவிக்கப்பட்ட நாயை (வேட்டைக்கு) அனுப்புகிறோம் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் '(தான் சாப்பிடாமல்) உனக்காக அவை கொண்டு வருவதைச் சாப்பிடு!' என்றார்கள். 'அவை கொன்று விட்டாலுமா?' என்று நான் கேட்டேன். ஆம்! கொன்று விட்டாலும் தான் என்று விளக்கமளித்தார்கள். நாங்கள் அம்பால் வேட்டையாடுகிறோம் என்று கூறினேன். அதற்கவர்கள் '(அம்பின் முனை) கிழித்துச் சென்றால் சாப்பிடு! அதன் அகலவாக்கில் தாக்கியிருந்தால் சாப்பிடாதே என்றார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம்(ரலி)
நூல்: புஹாரி 5477, 7397
நாங்கள் நாய்கள் மூலம் வேட்டையாடுகிறோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினேன். பயிற்றுவிக்கப்பட்ட நாயை அனுப்பும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறியிருந்தால் அவை (சாப்பிடாமல்) உங்களுக்காகவே கொண்டு வந்ததைச் சாப்பிடுங்கள்! கொன்று இருந்தாலும் சரியே. வேட்டை நாய் அதைச் சாப்பிட்டிருந்தால் அவை தமக்காகவே பிடித்தன. எனவே அதைச் சாப்பிட வேண்டாம். அதனுடன் வேறு நாய்கள் கலந்திருந்தால் (வேட்டையாடப்பட்டதை) சாப்பிடாதே என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம்(ரலி)
நூல்: புகாரி 5483, 5487
நீ உனது நாயை அனுப்பும் போது அல்லாஹ்வின் பெயர் கூறியிருந்தால் அது(சாப்பிடாமல்) உனக்காக கொண்டுவந்தால் கொன்றிருந்தாலும் சாப்பிடு! (வேட்டைப் பிராணியில் ஒரு பகுதியை) அது சாப்பிட்டு விட்டால் நீ சாப்பிடாதே! ஏனெனில் அது தனக்காகவே பிடித்தது. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத வேறு நாய்களுடன் கூட்டாக வேட்டையாடி உனக்காக கொண்டு வந்தால் அதைச் சாப்பிடாதே! ஏனெனில் எது அதைப் பிடித்தது என்பதை நீ அறியமாட்டாய். வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒருநாள் இரண்டு நாட்களுக்குப் பின் அவற்றைக் கண்டு பிடித்தால் அதில் உனது அம்பின் அடையாளங்கள் தவிர வேறு அடையாளம் இல்லாவிட்டால் அதைச் சாப்பிடு! தண்ணீரில் விழுந்து கிடந்தால் அதைச் சாப்பிடாதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம்(ரலி)
நூல்: புகாரி 5485
இது சம்பந்தமான மேலும் பல ஹதீஸ்கள் புகாரி 2054, 5475, 5476, 175; முஸ்லிம் 3560, 3561, 3562, 3563, 3564, 3565, 3566; திர்மிதீ 1385, 1389, 1390, 1391; நஸயீ 4190, 4191, 4192, 4193, 4195, 4196, 4197, 4198, 4199, 4200, 4201; அபூதாவூத் 2464, 2465, 2466, 2467, 2468, 2470, 2471; இப்னுமாஜா 3199, 3202, 3205, 3206; அஹ்மத் 17534, 17538, 17544, 17547, 18560, 18563, 18570 ஆகிய ஹதீஸ்களைக் காண்க!

வேட்டைக்காக நாயை அல்லது அம்பை அனுப்பும்போது பிஸ்மில்லாஹ் கூறினால் கொன்ற நிலையில் பிடித்து வந்தாலும் அதை உண்ணலாம்.

உயிருடன் பிடித்து வந்தால் பிஸ்மில்லாஹ் கூறி அறுத்து சாப்பிடலாம் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம். வேட்டையாடுவது சம்பந்தமான மேலும் பல விதிகளையும் இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

வேட்டை என்ற பெயரால் பிராணிகளைக் கம்பால், இரும்பால் அடித்துக் கொன்றால் அதை உண்ணக் கூடாது. வேட்டையாடப் பயன்படுத்தும் கருவி அப்பிராணிக்குள் ஊடுருவிச் செல்லும் வகையில் இருக்க வேண்டும். ஊடுருவவும் வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. இந்த அடிப்படையில் துப்பாக்கிகளால் வேட்டையாடலாம். ஏனெனில் அதன் குண்டுகள் பிராணிகளுக்குள் ஊடுருவும்.

கவன்(உண்டிவில் - கவட்டை) மூலம் வேட்டையாடி வேட்டைப் பிராணி செத்துவிட்டால் அதை உண்ணக் கூடாது. ஏனெனில், அதிலிருந்து புறப்படும் கல் ஊடுருவிச் செல்வதில்லை. உயிருடன் விழுந்தால் 'அறுத்து உண்ணலாம். கல்லால் எறிந்து வேட்டையாடுவதும் ஈரக் களிமண் உருண்டைகளைக் குழாயில் வைத்து வாயால் ஊதி வேட்டையாடுவதும் இதே வகையைச் சேர்ந்தவைதான். இதுபோன்ற வேட்டைகளில் பிராணிகள் செத்துவிட்டால் உண்ணக் கூடாது. மேற்கண்ட ஹதீஸிலிருந்து இத்தனை விஷயங்களையும் விளங்கலாம்.

நாம் வேட்டையாட அனுப்புகின்ற ஒரு நாய் வேட்டையாடி விட்டு அதில் ஒரு பகுதியை உண்டால் அதை நாம் உண்ணலாமா என்பதில் இரு கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன. உண்ணக்கூடாது எனக் கூறும் ஹதீஸ்களை மேலே குறிப்பிட்டுள்ளோம்.

இதற்கு முரணாகத் தோன்றும் மற்றொரு ஹதீஸைப் பார்ப்போம்.

வேட்டைக்கு அனுப்பும் நாய்கள் வேட்டையாடப்பட்டதைச் சாப்பிட்டால் (அதை நாம் சாப்பிடலாமா?) என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அவை சாப்பிட்டாலும் நீ அதைச் சாப்பிடலாம்' என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸஃலபா(ரலி)
நூல்கள்: அஹ்மத் 6438, அபூதாவூத் 2496, 2474
இவ்விரு ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானவை தாம். ஒன்று மற்றொன்றை மாற்றிவிட்டது என்று முடிவு செய்ய வழியில்லை. ஏனெனில் எது ஆரம்ப நிலை? எது இறுதி நிலை? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இவ்விரு ஹதீஸ்களில் ஒன்று ஆதாரப்பூர்வமானதாகவும் மற்றொன்று பலவீனமானதாகவும் இருந்தால் பலவீனமானதை விட்டுவிட்டு ஆதாரப்பூர்வமானதை எடுத்து நடக்கலாம். ஆனால் இரண்டு ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமானவையே!

இந்நிலையில் இரண்டில் எதைச் செய்வது பேணுதலானதோ எது திருக்குர்ஆனின் போதனையுடன் ஒத்து வருகின்றதோ அதை எடுத்துக் கொண்டு மற்றதை விட்டு விடுவதே முறையானதாகும்.

நாம் முன்னர் எடுத்துக்காட்டிய வசனத்தில் 'வேட்டையாடும் பிராணிகள் (எதையும் உண்ணாமல்) உங்களிடம் அப்படியே கொண்டு வந்தவைகளை உண்ணுங்கள்' என்று கூறப்படுகின்றது. புகாரி, முஸ்லிமில் இடம்பெறும் ஹதீஸ்கள் இந்த வசனத்துடன் ஒத்துப் போகின்றன. அஹ்மத், அபூதாவூதில், இடம்பெறும் இந்த ஹதீஸ் இந்த வசனத்துடன் முரண்படுகின்றது.

மேலும் முதல் ஹதீஸை ஏற்று, வேட்டைப் பிராணிகளால் சாப்பிடப்பட்டதை உண்ணாமல் இருப்பதால் எந்தக் கேள்வியும் வராது. பேணுதலுக்கு ஏற்றதாக உள்ள முதல் ஹதீஸினடிப் படையில் செய்யப்படுவதே சரியானதாகும்.

வேட்டையின் போது அம்பால் தாக்கப்பட்ட பறவை மற்றும் பிராணிகள் உடனே தண்ணீரில் விழுந்து இறந்துவிட்டால் அதை உண்ணக்கூடாது. ஆனால் அம்பால் தாக்கப்பட்டவை ஓடிச் சென்று பின்னர் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு செத்துக் கிடக்கக் கண்டால், அது செத்ததற்கு நாம் எய்த அம்புதான் காரணம் என்பதும் உறுதியானால் அதை உண்ணலாம்.

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

வேட்டையாடப்படும்போது முறையாக அறுப்பு நிகழவில்லையாயினும் திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் இதற்குத் தனி விதிகளைக் கூறுவதால் தாமாகச் செத்தவற்றில் இவை அடங்காது என்பதை அறியலாம்.

இவற்றைத் தவிர வேறு வகையில் இறந்த எந்தப் பிராணியும் தாமாகச் செத்தவை என்பதில் அடங்கும். அதை உண்ணக்கூடாது. உயிருடன் உள்ள பிராணியின் ஒரு உறுப்பை அல்லது ஒரு பகுதியை வெட்டி எடுத்தால் அதுவும் தாமாகச் செத்தவற்றில் அடங்கும். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

'
உயிருடன் உள்ள பிராணியிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பகுதி தாமாகச் செத்தவையாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி),
நூல்: இப்னுமாஜா 3207 


Source : www.onlinepj.com

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )