Mar 15, 2012

விலக்கப்பட்ட உணவுகள் - III

நிர்பந்தத்திற்கு ஆளாகும்போது


இவ்வசனத்தில் கூறப்படும் விலக்கப்பட்ட உணவுகள் பற்றி விரிவான விளக்கத்தை இதுவரை அறிந்துகொண்டோம். இந்த உணவுகளைக் கண்டிப்பாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாலும் நிர்பந்தத்திற்கு ஆளானோர் அவற்றை உண்ணலாம் என்று இவ்வசனம் அனுமதியளிக்கின்றது. இதுபற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

நிர்பந்தத்திற்கு ஆளாவது என்றால் என்ன? இதை உண்ணா விட்டால் உன்னைக் கொன்று விடுவேன் என்று பிறரால் மிரட்டப்படுவது தான் நிர்பந்தம் எனச் சிலர் கூறுகின்றனர்.
இதை உண்ணா விட்டால் இறந்துவிடுவோம் என்ற நிலையை ஒருவர் அடைவது நிர்பந்தம் என்று மற்றும் சிலர் கூறுகின்றனர்.

ஒருவர் அன்றாடம் தனக்கும், தன் குடும்பத்துக்கும் போதிய உணவைப் பெறாமலிருப்பதும் நிர்பந்தம் தான் என்று வேறு சிலர் கூறுகின்றனர். முதலிரண்டு நிலைகளையும் நிர்பந்தம் என ஏற்றுக் கொள்ளும் இவர்கள் நிர்பந்தத்திற்கு இன்னும் விரிந்த பொருளைக் கொடுக்கின்றனர்.

நபி வழியில் ஆராயும்போது இந்த மூன்றாவது கருத்துத்தான் சரியானது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. பிறரால் நிர்பந்திக்கப்படுபவரும் உயிர் போகும் நிலை அடைந்தவரும் விலக்கப்பட்டவற்றை உண்ணலாம் என்பதைப் போலவே அன்றாட உணவுக்கு வழியில்லாதவர்களும் விலக்கப்பட்டவற்றை உண்ணலாம் என்ற முடிவுக்கு அனேகச் சான்றுகள் கிடைக்கின்றன.

ஓர் ஆண்டு எங்கள் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. நான் மதீனாவுக்கு வந்து ஒரு தோட்டத்திற்குச் சென்றேன். அதிலுள்ள ஒரு தானியக் கதிரை எடுத்து உதிர்த்துச் சாப்பிட்டேன். எனது ஆடையிலும் சேகரித்துக் கொண்டேன். அப்போது தோட்டத்திற்குரியவர் வந்துவிட்டார். என்னை அடித்து எனது ஆடையையும் பறித்துக் கொண்டார். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று விபரம் கூறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோட்டத்திற்குரியவரிடம் 'இவர் பசியோடு இருந்தபோது இவருக்கு நீர் உணவளிக்கவில்லை. இவர் அறியாதவராக இருந்தபோது இவருக்கு (திருடக்கூடாது என்று) கற்றுக் கொடுக்கவில்லை என்றார்கள். மேலும் எனது ஆடையை என்னிடம் திருப்பித்தருமாறு அவருக்குக் கட்டளையிட்டனர். மேலும் எனக்கு ஒரு வஸக் (அறுபது ஸாவு) அல்லது அரை வஸக் உணவுதருமாறும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: அப்பாத் பின் ஷுரஹ் பில் (ரலி)
நூல்கள்: நஸயீ 5314, அபூதாவூத் 2252, இப்னுமாஜா 2289, அஹ்மத் 16865
இந்த நபித்தோழர் எவராலும் நிர்பந்திக்கப்படவில்லை. சாகும் நிலையையும் அடைந்திருக்கவில்லை. போதுமான உணவு கிடைக்காத நிலையில் பஞ்சத்தில் அடிபட்ட நிலையில் தான் வருகிறார்.

பிறரது தோட்டத்தில் நுழைந்து அதிலுள்ளவற்றை உண்பதும் சேகரிப்பதும் மார்க்கத்தில் விலக்கப்பட்டிருந்தும் அவர் அவ்வாறு செய்ததற்காக கண்டிக்கப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை. தண்டித்த தோட்ட உரிமையாளரைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்தனர். அவருக்கோ போதுமான உணவுகளைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.

இதிலிருந்து நிர்பந்தம் என்பதற்கு உரிய இலக்கணத்தை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. அன்றாட உணவு கிடைக்காமலிருப்பதும் நிர்பந்தம் தான் என்பதற்கு இது சான்றாக உள்ளது.
இந்த இடத்தில் நியாயமான ஒரு சந்தேகம் பலருக்கும் தோன்றலாம்.

இந்த நபித்தோழர் சாப்பிட்ட தானியக் கதிர் பொதுவாக அனுமதிக்கப்பட்ட உணவாகும். அது வந்து சேரும் வழி முறையற்றதாக உள்ளதால் தான் ஹராம் என்ற நிலையை அடைகின்றது. இதே தானியத்தை உரிமையாளரிடம் கேட்டுப் பெற்றால் விலைக்கு வாங்கினால் அது ஹராமாக ஆகப்போவதில்லை. ஆனால் தாமாகச் செத்தவை போன்றவை எல்லா நிலையிலும் ஹராம். விலை கொடுத்து வாங்கினாலும் அது ஹராம். எனவே இந்த வசனத்தில் கூறப்படும் நிர்பந்தத்திற்கு இது விளக்கமாக முடியாது என்பதே அந்தச் சந்தேகம். அந்தக் கேள்வியில் ஓரளவு நியாயமிருந்தாலும் வேறு பல ஆதாரங்கள் இருப்பதால் இந்தச் சந்தேகம் விலகிவிடும்.
'
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்குப் பஞ்சம் ஏற்படுகிறது. எந்த நிலையில் எங்களுக்கு தாமாகச் செத்தவை ஹலாலாகும் என்று நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'காலையில் அருந்தும் பாலையும் மாலையில் அருந்தும் பாலையும் நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால் அதை உண்ணலாம்' என்றனர்.
அறிவிப்பவர்: அபூவாகித் அல்லைஸீ(ரலி)
நூல்கள்: அஹ்மத் 20893, 20896, தாரிமி 1912
ஒருநாளைக்கு இரண்டு வேளை உணவு - பால் போன்ற திரவ உணவு - கூட கிடைக்காதவர்கள், எந்தத் தாவரமும் கிடைக்காதவர்கள் விலக்கப்பட்டதை உண்ணலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

கிடைக்கவில்லை என்பது, அப்பொருள் அந்தப்பகுதியில் இல்லாமலிருப்பதையும் குறிக்கும். கிடைத்தாலும் வாங்கும் சக்தியில்லாமலிருப்பதையும் குறிக்கும்.

காலையிலும் மாலையிலும் அருந்தும் பால் கிடைக்காத போது என்பதை பசியைப் போக்கும் அளவுக்குப் பால் கிடைக்காத போது என்றே புரிந்து கொள்ளவேண்டும்.

ஒருவருக்கு குறைந்த அளவுக்கு இரண்டு வேளை பால் கிடைக்கிறது. அது அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பசியைப் போக்க போதுமானதாக இல்லை என்றால் அவரும் கூட நிர்பந்தத்திற்கு ஆளானவரே. அவரும் விலக்கப்பட்ட உணவை உண்ணலாம். பின்வரும் ஹதீஸிலிருந்து இதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று 'தாமாகச் செத்தவை எப்போது எங்களுக்கு ஹலாலாகும்?' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் உணவு என்ன? எனக் கேட்டனர். காலையிலும் மாலையிலும் (சிறிதளவு) பால் என்று நான் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாகச் செத்தவற்றை அந்த நிலையில் எங்களுக்கு ஹலாலாக்கினார்கள்.
அறிவிப்பவர்: ஃபுஜைவு அல் ஆமிரி(ரலி)
நூல்: அபூதாவூத் 3321
முந்தைய ஹதீஸில் இருவேளைப் பால் கிடைத்தால் அது நிர்பந்த நிலையாகாது என்று கூறப்படுகின்றது. இந்த ஹதீஸில் இருவேளைப் பால் மட்டுமே கிடைப்பது நிர்பந்தம் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் முரண்பட்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வயிறு நிரம்பக் கூடிய அளவுக்குப் பால் கிடைப்பதை முந்தைய ஹதீஸ் கூறுகிறது. வயிறு நிரம்பாத அளவுக்கு குறைந்த அளவு பால் கிடைப்பதை இரண்டாவது ஹதீஸ் கூறுகின்றது என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லையெனில் இரண்டு நபிமொழிகளுக்கிடையே முரண்பாடு கற்பிப்பதாகவும் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுப்பதாகவும் அமையும். இரண்டில் எதையும் மறுக்காமல் ஏற்பதென்றால் இவ்வாறுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதர் தம் மனைவி மக்களுடன் 'ஹர்ரா' எனுமிடத்தில் தங்கி இருந்தார். அவரிடம் இன்னொரு மனிதர் வந்து 'எனது ஒட்டகம் காணாமல் போய்விட்டது. அதை நீர் கண்டால் பிடித்து வைத்துக் கொள்வீராக' எனக் கூறினார். (குடும்பத்துடன் தங்கியிருந்த அந்த மனிதர் அந்த ஒட்டகத்தைக் கண்டார். உரிமையாளரைக் காணவில்லை (அந்த ஒட்டகத்தைப் பிடித்து வைத்துக் கொண்டார்) அந்த ஒட்டகம் நோயுற்றது. அதை அறுப்பீராக என்று அவரது மனைவி கூறிய போது அவர் மறுத்துவிட்டார். ஒட்டகம் செத்துவிட்டது. அப்போது அவரது மனைவி 'இதன் தோலை உரிப்பீராக! நாமும் சாப்பிட்டு, இறைச்சியையும் கொழுப்பையும் காய வைத்துக் கொள்வோம்' எனக் கூறினார். அதற்கு அம்மனிதர் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காமல் செய்ய மாட்டேன்' என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். இது பற்றிக் கேட்டார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'பிறரிடம் தேவையாகாத அளவுக்கு உமக்கு வசதி இருக்கிறதா? எனக் கேட்டார்கள். அதற்கவர் 'இல்லை' என்றார். 'அப்படியானால் அதை உண்ணுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒட்டகத்தின் உரிமையாளர் வந்தார். அவரிடம் அந்த மனிதர் விபரத்தைக் கூறினார். இதை நீர் அறுத்திருக்கக் கூடாதா?' என்று அவர் கேட்டார் அதற்கு அந்த மனிதர் '(நீர் என்னைத் தப்பாக நினைத்து விடுவீர் என்று) நான் வெட்கமடைந்தேன். (அதனால் அறுக்கவில்லை) என விடையளித்தார்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா(ரலி)
நூல்: அபூதாவூத் 3320, அஹ்மத் 19998
இந்த மனிதரும் இவரது குடும்பத்தினரும் சாகும் நிலையில் இருக்கவில்லை. போதிய வருமானம் கிடைக்காதவராக இருந்த இவருக்கு தாமாகச் செத்தவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர்.

அன்றாடம் இருவேளை உணவு கிடைக்காதவர்கள், சத்துள்ள திரவ உணவு கூட கிடைக்காதவர்கள் அனைவரும் நிர்பந்தத்திற்கு ஆளானவர்களே. இதைத் தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

உயிர் போகும் நிலையை அடைவதுதான் நிர்பந்த நிலை எனக் கூறுவது ஆதாரமற்றதும் சாத்தியமற்றதுமாகும்.

உயிர்போகும் நிலையை அடைந்தவன் தாமாகச் செத்தவற்றை விலக்கப்பட்டவற்றைத் தேடிச் செல்லும் அளவுக்குச் சக்தி பெறமாட்டான். அவனால் எழுந்து நிற்கக் கூட இயலாது. இத்தகைய நிலையில் உள்ளவனுக்கு இந்த அனுமதியால் எந்தப் பயனும் இல்லை. அல்லாஹ்வின் இந்த அனுமதி அர்த்தமற்றதாகவும் ஆகிவிடும்.

மேலும் பல நாட்கள் உணவு கிடைக்காமல் சாகும் நிலையை அடைந்து படுக்கையில் விழுந்தவனின் குடல் மாமிசத்தைச் சீரணம் செய்யும் நிலையில் இருக்காது. அவனால் அதைச் சாப்பிடவும் இயலாது. திரவ உணவுகள் மூலம் தன்னையும் குடலையும் திடப்படுத்திக் கொண்ட பின்பே மாமிசத்தை உட்கொள்ள முடியும். இந்தக் காரணத்தினாலும் இந்த விளக்கம் ஏற்க முடியாததாக உள்ளது.

அல்லாஹ் ஒன்றை அனுமதிக்கிறான் என்றால் அது சாத்தியமாக வேண்டும். சாத்தியமில்லாதவைகளை அல்லாஹ் அனுமதிக்கமாட்டான். அனுமதிப்பதில் எந்தப் பயனும் இருக்காது. எனவே மூன்றாவது கருத்தே அறிவுக்குப் பொருத்தமாகவும், நடைமுறைப்படுத்த ஏற்றதாகவும் தக்க ஆதாரங்களைக் கொண்டதாகவும் உள்ளது. அல்லாஹ்வின் தூதருடைய விளக்கத்தின் அடிப்படையில் திருக்குர்ஆனைப் புரிந்து கொள்வோர் இந்த முடிவுக்குத் தான் வரமுடியும்.

எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளின் நிலையை நாம் அறிவோம். கூழுக்கும் பாலுக்கும் வழியின்றி எலும்பும் தோலுமாக மக்கள் காட்சியளிப்பதை தொலைக்காட்சி வழியாக நாம் அறிகிறோம்.

இந்த மக்களுக்கு எந்த உணவும் தடுக்கப்பட்டதன்று. இதை அம்மக்கள் விளங்கி கிடைப்பதையெல்லாம் உண்டால் அந்த அவல நிலையிலிருந்து விடுபடுவார்கள். அங்குள்ளவர்களில் பெரும் பாலோர் முஸ்லிம்களாக இருந்தும் இந்தச் சலுகையை அவர்கள் புரிந்து கொள்ளாததே இந்த நிலைமைக்குக் காரணம் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நிர்பந்தத்திற்கு ஆளானோர் விலக்கப்பட்ட உணவுகளை உண்ணலாம் எனக் கூறிய இறைவன் அதற்கு இரண்டு நிபந்தனைகளையும் கூறுகிறான். அவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

'
வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும்' என்பதே அந்த இரு நிபந்தனைகள். தடுக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட ஆவல் கொண்டு இது போன்ற நிலையைத் தேடிச் செல்லக்கூடாது, பஞ்சத்தில் அடிபட்ட இந்தப் பகுதிக்குச் சென்றால் தடுக்கப்பட்ட உணவுகளை ருசி பார்க்கலாம் என்று எண்ணுவது வலியச் செல்வதாகும்.

நிர்பந்தமான நிலையை அடைந்தோர் அதிலேயே நீடிக்கும் வகையில் நடக்கக்கூடாது. அந்த நிர்பந்த நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும். அதற்காக முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சோம்பி இருந்து கொண்டு விலக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அது வரம்பு மீறலாகும். இந்த இரு நிபந்தனைகளின் அடிப்படையில் நிர்பந்த நிலையை அடைந்தவர்கள் இந்த வசனத்தில் விலக்கப்பட்டவற்றையும் உண்ணலாம். ஏனைய ஆதாரங்கள் மூலம் விலக்கப்பட்டவற்றையும் உண்ணலாம். அதில் எந்தக் குற்றமுமில்ல.

இதுபோலவே இரத்தம் நமக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. விபத்துகளில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்போருக்கும், அறுவை சிகிச்சைக்குப் போதிய இரத்தமில்லாதவர்களுக்கும் மற்றவர்களின் இரத்தம் செலுத்தப்படுகிறது.

சாதாரண வயிற்றுப் பசியை போக்குவதற்காகவே விலக்கப்பட்டவைகளை உண்ணலாம் எனும் போது உயிரைக் காக்கும் இது போன்ற சூழ்நிலையில் மற்றவர்களின் இரத்தத்தைச் செலுத்தலாம். இதை விட பெரிய நிர்பந்தம் ஏதுமிருக்க முடியாது.

இவ்வசனத்தில் அடங் கியிருக்கும் மற்றொரு செய்தியை சிலர் தவறாக விளங்கிக் கொண்டு குழம்பிப் போய் இருக்கின்றனர். அந்தச் செய்தியைக் குறித்து தான் விளக்கம் தேவைப்படுகின்றது.

குர்ஆன் மட்டும் போதும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று குர்ஆனுக்கு எதிரான வாதத்தை முன்வைக்கும் அறிவீனர்கள் - குர்ஆனைப் பற்றி சரியான அறிவு இல்லாத காரணத்தால் தாமும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்க எண்ணுகின்றனர்.

இத்தகையோர் வழிகெடுப்பதற்கு பயன்படுத்தும் வசனங்களில் இந்த வசனங்களும் அடங்கும். எனவே, இது குறித்து நாம் விரிவாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் நான்கு உணவுகள் ஹராம் என்பது மட்டும் தெரிய வில்லை. மாறாக இந்த நான்கைத் தவிர வேறு எந்த உணவும் ஹராமில்லை என்பதும் தெரிகிறது. எனக்கு வஹியாக (இறைச் செய்தியாக) அறிவிக்கப்பட்டதில் அந்த நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராமாக்கப்பட்டதாக நான் காண வில்லை என்ற வாசக அமைப்பிலிருந்தும் தாமாகச் செத்தவை.... ஆகியவற்றைத்தான் ஹராமாக்கி யுள்ளான் என்ற வாசக அமைப் பிலிருந்தும் அதை விளங்கலாம்.

எனவே, கழுதை, நாய், கரப்பான் பூச்சி, பாம்பு, பல்லி, தேள், முள்ளம் பன்றி, குரங்கு போன்ற எதுவானாலும் உண்ணத்தக்கதே என்று இவர்கள் வாதிடுகின்றனர். வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் மலத்தையும் கூட உண்ணலாம் என்பது இவர்களின் வாதமாகும். இவ்வாறு வாதிடக்கூடிய 'அறிவு ஜீவிகள்' தமது வாதத்துக்கு இந்த வசனங்களைத் தான் சான்றுகளாக முன் வைக்கின்றனர். இந்நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராமாக்கப் பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட வில்லை என்று அல்லாஹ் தேவையில்லாமல் கூறுவானா? என்றும் இவர்கள் கேட்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாய், கழுதை போன்றவற்றை ஹராம் என்று அறிவித்துள்ளனர். இது குறித்த ஹதீஸ்கள் யாவும் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாகவுள்ளதால் அவற்றை நம்பக்கூடாது எனவும் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட வசனங்களில் இவர்கள் வாதிடுவது போன்ற கருத்துக்கள் அடங்கியுள்ளன என்பது உண்மை தான். ஆனால், இது குறித்து சரியான விளக்கத்தை அறிய திருக்குர் ஆனை இன்னும் ஆராய வேண்டும். ஹலால் ஹராம் குறித்து அந்த வசனங்கள் தவிர வேறு வசனங்கள் உள்ளனவா? எனவும் தேடிப்பார்க்கவேண்டும். அதன் பிறகுதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். இத்தகைய ஆய்வு இல்லாததன் காரணமாகவே கிறுக்குத்தனமான இத்தகைய வாதங்களை முன் வைக் கின்றனர்.

'
செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், இறைவனல்லாத மற்றவர் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியும், கழுத்து நெறிக்கப்பட்டும், அடிபட்டும், உயரத்திலி  ருந்து வீழ்ந்தும், மோதப்பட்டும் இறந்த பிராணிகளும் உங்க ளுக்குத் தடுக்கப்பட்டவையாகும். மேலும், கொடிய விலங்கு களால் கடித்துக் குதறப்பட்ட பிராணிகளும் (தடுக்கப் பட்டவை யாகும்.)-எவற்றை உயிருடன் நீங்கள் அறுத்து விட்டீர் களோ - அவற்றைத் தவிர! இன்னும் பலி பீடங்கள் மீது அறுக்கப்பட்ட பிராணியும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. குறிபார்ப்பதன் மூலம் விதிகளை நிர்ணயிப்பதும் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் பாவமான செயல்களாகும். இன்று உங்களுடைய மார்க்கம் குறித்து நிராகரிப்போர் முற்றிலும் நிராசை அடைந்துவிட்டிருக்கின்றனர். எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்சவேண்டாம். மாறாக எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்க ளுக்காக இஸ்லாத்தை உங்களுடைய  வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டேன். ஆயினும், கடும் பசியினால் நிர்பந்திக்கப்பட்டு - பாவம் செய்யும் நாட்டமின்றி ஒருவர் அவற்றில் ஏதாவ தொன்றைப் புசித்துவிட்டால் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பெருங்கருணை உடையவனாகவும் இருக்கின்றான்'
(அல்குர்ஆன்: 5:3)
இவ்வசனமும் விலக்கப்பட்ட உணவுகளைக் குறிப்பிடும் வசனம் தான். இவ்வசனத்தில் முன்னர் கூறப்பட்ட நான்கு உணவுகளையும் கூறி விட்டு மேலும் சில உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நான்கைத் தவிர வேறு சில உணவுகள் ஹராம் என்று ஹதீஸ் களில் கூறப்படும் போது குர்ஆனுக்கு முரண்' எனக் கூறி நிராகரித்தவர்கள் இப்போது இந்த வசனமே மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக இருப்பதை சிந்திக்கத் தவறிவிட்டனர்.

நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்ற கருத்தில் அமைந்த வசனங்களும், நான்கைத் தவிர வேறு சில உணவுகளும் ஹராம் எனக் கூறும் வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை தான்குர்ஆனில் எந்த முரண்பாடும் இருக்காதே! ஆனால் இங்கே முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறதே என்று சிந்தித்திருந்தால் சரியான தீர்வைக் கண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன் ஒரே நாளில் மொத்தமாக அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் இறங்கியது என்பதை அனைவரும் அறிவோம். சிறிது சிறிதாக கடமைகளும் கட்டளைகளும் அதிகரிக்கப்பட்டு வந்தன.

அந்த அடிப்படையில் நாம் ஆரம்பமாக எடுத்துக் காட்டிய வசனங்கள் எப்போது அருளப்பட்டனவோ அந்தக் கால கட்டத்தில் அந்த நான்கு உணவுகள் மட்டுமே ஹராமாக்கப் பட்டிருந்தன. இவ்வசனங்கள் அருளப்படுவதற்கு முன் அந்த நான்கு கூட ஹராமாக்கப்படாமல் இருந்தன. எதுவுமே ஹராமாக்கப் படாமல் இருந்த நிலையை மாற்றி நான்கு உணவுகள் முதலில் ஹராமாக்கப்பட்டன. பின்னர் மேலும் சில உணவுகள் ஹராமாக்கப்பட்டன. அதைத் தான் இப்போது நாம் சுட்டிக்காட்டிய 5:3 வசனம் கூறுகிறது.

எனவே நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்பது ஒரு கால கட்டத்தில் இருந்த நிலைமை. அந்த நிலைமை 5:3 வசனத்தின் மூலம் மாற்றப்பட்டுவிட்டது. இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நான்கு உணவுகளை மட்டும் ஹராம் எனக் கூறும் வசனங்களில் இவை மட்டும் தான். இவை தவிர வேறு இல்லை என்பது போன்ற வாசக அமைப்பை பயன்படுத்தியுள்ளான். ஆனால், இவ்வசனத்தில் இவற் றைத் தவிர வேறு இல்லை என்று குறிப்பிடவில்லை. இவற்றைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறாததால், மேலும் ஹராம்கள் இருப்பதற்கான சாத்தியத்தை இவ்வசனம் மறுக்கவில்லை.

இவ்வாறு விளங்கிக் கொண்டால் குர்ஆனுடன் குர்ஆன் முரண்படுகிறதே என்ற ஐயமும் விலகும். ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்படுகிறதே என்ற ஐயமும் விலகும்.

இறுதியாக அருளப்பட்ட வசனத்தில் எவை ஹராமாக்கப் பட்டுள்ளதோ அவற்றை மட்டும் ஹராம் என்று கூற வேண்டியது தானே? ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியது தானே? என்று சிலர் கேட்கலாம்.

அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் எப்படி ஹராமாக்கலாம் என்று 66:1 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதிலிருந்து ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ் வுக்குத் தான் உள்ளதே தவிர நபிகள் நாயகத்துக்கு இல்லை எனவும் கூறுகின்றனர்.

இதுவும் அறியாமையின் வெளிப்பாடுதான். எவர்கள் எழுதப்படிக்க தெரியாத நபியாகிய நம் தூதரை பின்பற்றுகிறார்களோ-அவர்கள் தங்களிட முள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களை அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டி ருக்கும் ஒளிமயமான (வேதத்) தையும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
(அல்குர்ஆன்: 7:157)
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராமாக் கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார் களோ, அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர் களுடன் போர் புரியுங்கள்.
(அல்குர்ஆன்: 9:29)
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராமாக்கியவைகளை ஹராம் எனக் கருதாதவர்களுடன் போரிடுமாறு  இவ்வசனம் கூறுகிறது. ஹராமாக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இவ்வசனம் மிகத் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. திருக்குர்ஆனில் தேவையில்லாத ஒரு வார்த்தையும் இருக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

குர்ஆன் மூலம் ஹராமாக்கப் பட்டவை மட்டும் தான் ஹராம் என்று இருந்தால் அல்லாஹ் ஹராமாக்கியவை என்று மட்டும் அல்லாஹ் கூறியிருக்கலாம். ஆனால், அல்லாஹ்வும் ரசூலும் ஹராமாக்கியவை என்று கூறியது ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

7:157
வசனத்தில் நல்லவைகளை அவர் ஹலாலாக்குவார். கெட்டவைகளை ஹராமாக்குவார் என்று தெளிவாகப் பிரகடனம் செய்யப் பட்டுவிட்டது. நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்றால் இந்த வாசகத்திற்கு எந்தத் தேவையுமில்லை.

'
கெட்டவை ஹராம் என்று கூறுகிற இறைவன் அவற்றுக்கான விளக்கத்தை நபிகள் நாயகத்தின் இதயத்தில் போடுகிறான். அதன் மூலம் அவர்கள் ஹராமாக்கப் பட்டதை அறிவிக்கிறார்கள்' என் பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.

எனவே, நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறுவோர் மேற்கண்ட குர்ஆன் வசனங் களையே மறுக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை உமது மனைவியரின் திருப்தியை நாடி நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர் என்ற வசனத்தை (66:1) ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதையும் ஹராம் என்று பிரகடனம் செய்ய அதிகாரமில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.

இவ்வசனத்தை சரியாக சிந்திக்காத காரணத்தால் இத்தகைய வாதத்தை எழுப்புகின்றனர். அல்லாஹ் ஹலாலாக ஆக்கிய ஒரு பொருளை (தேனை) தமது மனைவியருக்காக தம்மீது மட்டும் ஹராமாக்கிக் கொண்டார்கள். இனிமேல் தேனை உட்கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்தார்கள். மக்கள் அனைவருக்கும் தேனை ஹராமாக ஆக்கவில்லை.

அல்லாஹ் அனுமதித்த ஒரு பொருள் ஒருவருக்கு பிடிக்க வில்லையானால் அதை தன்னளவில் அவர் தவிர்த்துக் கொள்ளலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஹலால் என்றாலே உண்பது எப்படி அனுமதியோ, உண்ண மறுப்பதும் அனுமதி என்றே பொருள்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை தம் மீது மட்டும் விலக்கிக் கொண்டார்கள் என்பதைத் தான் அவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை ஹராம் என்று அறிவித்தார்கள் என்று கூறவில்லை. அவ்வாறு எந்த இறைத் தூதரும் கூற மாட்டார்கள்.
அப்படியானால் இந்தச் செயலை இறைவன் ஏன் ஆட்சேபிக்கிறான்? அதற்கான காரணம் அவ்வசனத்தி லேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவியரின் திருப்தியை நாடி - தமக்கு அதில் விருப்பம் இருந்தும் விலக்கிக் கொண்டார்களே அது தான் இங்கே ஆட்சேபிக்கப்படுகிறது.

தடை செய்யப்பட்ட உயிரினங்கள்

திருக்குர்ஆனில் தடை செய்யப்பட்ட இவற்றைத் தவிர வேறு சில உயிரினங்களை உணவாக உட்கொள்வதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். அந்தத் தடையும் இறைவன் புறத்திலிருந்து வந்த தடை தான். அதையும் விளங்கி நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
உயிரினங்களில் எவற்றை உண்ணலாம்? எவற்றை உண்ணலாகாது என்ற பிரச்சனை மிகவும் சிக்கலானதாக மக்கள் மத்தியில் கருதப்படுகிறது. இதை உண்ணலாமா? இதை உண்ணலாமாஎன்ற கேள்விகள் முஸ்லிம் பத்திரிகைகளில் அதிகம் இடம் பெறுவதைக் காண்கிறோம்.

உண்மையில் இது மிகவும் எளிமையான விஷயமாகும். சில அடிப்படைகளை மட்டும் நாம் அறிந்து கொண்டால் உயிர்ப்பிராணிகளில் எவற்றை உண்ணலாம்? எவற்றை உண்ணக் கூடாது என்பதை நாமாகவே அறிந்து கொள்ள இயலும்.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )