Jul 3, 2012

அலட்சியம் செய்யப்படும் அல்லாஹ்வின் கட்டளைகள்




எம்மால் அலட்சியப்படுத்தப்படும் திருமறை வசனங்களிலிருந்து இன்று உங்களுக்கு நான் தெளிவூட்ட நினைப்பது ஸூரத்துல் ஜும்ஆவின் 9-11 வரையுள்ள வசனங்களின் முக்கியத்துவம் பற்றியதாகும்.
"ஈமான் கொண்டவர்களே! வெள்ளிக் கிழமைகளில் தொழுகைக்காக நிங்கள் அழைக்கப்பட்டால் உங்கள் வியாபாரத்தை விட்டு விட்டு அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பால் விரையுங்கள். நிங்கள் அறிந்தவர்களாக இருந்தால் அதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.
தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் பேரருளைத் தேடிக் கொள்ளுங்கள். (நபியே) ஒரு வியாபாரத்தையோ அல்லது வேடிக்கையையோ அவர்கள் பார்த்துவிட்டால் அதனளவில் சென்று விடுகின்றனர்.
(குத்பா ஓதும்) உம்மை நின்ற வண்ணம் விட்டும் விடுகின்றனர். (ஆகவே நபியே!) அவர்களிடம் அல்லாஹ்விடத்திலுள்ளது வேடிக்கையையும் வார்த்தகத்தையும் விடச் சிறந்தது. மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் சிறந்தவன்" எனக் கூறுவீராக.
இந்த ஆயத்துக்களின் விபரங்களை அறிவதற்கு முன் நமது சக முஸ்லிம்களின் தொழுகை நிலைகளை அறிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இரண்டு நாட்கள் முஸ்லிம்களாய் சிலர், மற்றும் சிலரோ வெள்ளிக்கிழமையில் மட்டும் தொழும் முஸ்லிம்கள், மற்றுமோர் கூட்டமோ எல்லா நாளையும் ஒரு நாளாகக்கருதும் முஸ்லிம் எனும் பெயரில் வாழும் பெயர்தாங்கிகள்.
இப்படிப் பல்வேறு வடிவங்களில் சந்தர்ப்ப முஸ்லிம்களாக வாழக்கூடிய ஒவ்வொரு தரப்பினரும் இந்த வசனத்தை விளங்குவதற்கு கடமைப்பட்டுள்ளனர்.
ஐந்து நேரத் தொழுகை எவ்வாறு கடமையோ அவ்வாறு தான் ஜுமுஆ நாளின் ஜுமுஆத் தொழுகையும் அவசியமாகும். ஆண்களுக்கு ளுஹர் தொழுகைக்குப் பதிலாகவே ஜுமுஆவின் இரண்டு ரக்ஆத்களும், உரையை செவிதாழ்த்திக் கேட்பதும் கடமையாக்கப்பட்டுள்ளது.
ஐந்து நேரத் தொழுகைகளையெல்லாம் பேணுதலாகத் தொழுபவர்கள் கூட வெள்ளிக் கிழமையை ஒரு விடுமுறை தினமாகக் கருதி ஜுமுஆவைத் தவறவிடும் நிகழ்வுகளையெல்லாம் நாம் காணத்தான் செய்கின்றோம்.
இந்த ஜுமுஆ தினத்தைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வதைப் பாருங்கள்.
"நாம் படைப்பால் பிந்தியவர்கள். மறுமையில் முந்திவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு கடமையாக்கப்பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டு நடந்து கொண்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான்.
மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில் இன்று நமக்கு ஜுமுஆ என்றால்) நாளை யூதர்களும், அதற்கு மறுநாள் கிறிஸ்தவர்களும் வாராந்த வழிபாடு நடத்துவார்கள். (ஆதாரம்P: புகாரி)
ஆக, யூத கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யும் விதமாகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், வெள்ளிக் கிழமையை தெரிவு செய்து அதை முஸ்லிம்களுக்கு சிறப்பு நாளாக ஆக்கியுள்ளார்கள் என்பது இந்த ஹதீஸ் மூலம் புலனாகிறது. இதுமட்டுமல்லாமல் ஏனைய நாட்களின் வணக்கங்கள் போலல்லாது வெள்ளிக் கிழமைகளில் லுஹர் தொழுகை வித்தியாசப்படுவது, மேலும் இந்த நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் சொல்ல ஏவியிருப்பது போன்றன இந்த நாளுக்கென்று வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளாகும்.
"உங்களில் எவரும் ஜுமுஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்" (ஆதாரம் புகாரி)
இதிலிருந்து ஜுமுஆ நாளில் குளிப்பதை இஸ்லாம் சிறந்ததாகக் கருதி அதற்கு வலியுருத்தியிருப்பதை விளங்கிக் கொள்ளலாம்.எம்மைப் பொருத்தவரை வெள்ளிக் கிழமை ஒரு விடுமுறை தினம். அத்தினத்தில் நண்பர்களோடு சேர்ந்து அரட்டை அடிப்பதற்காக எமது நேரங்களை ஒதுக்குவோம். அல்லது காலை ஆறு மணிக்கு எழும்பி காலை உணவை சாப்பிட்டு விட்டு தூங்கினால் 11 மணி அல்லது 12 மணிக்கு மீண்டும் பகல் உணவுக்காக கண்விழிப்போம். இது பெரும்பாலான இளைஞர்களின் நிலை.
பெண்கள் வெள்ளிக் கிழமைகளில் மாமி வீட்டுக்கு அல்லது மச்சான் வீட்டுக்கு அல்லது நண்பி வீட்டுக்கு சாப்பாட்டுக்குப் போகத் தயராகுவார்கள். வீட்டிலுள்ள ஆண் ஜுமுஆவுக்குப் போக வேண்டும், அல்லது தயாராக்கி அனுப்ப வேண்டும் என்ற எந்த சிந்தனையுமில்லாமல் நபிகளாரின் போதனையை சாகடித்த வெறும் இஸ்லாமிய ஜடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பள்ளியில் ஜுமுஆ உரை நிகழ்ந்து கொண்டிருக்கும் போது வீட்டிலுள்ள ஆண் தூங்கிக் கொண்டிருக்கும், அல்லது ஜுமுஆ உரை முடிந்த பின் தொழுகைக்கு மட்டும் போனால் போதும் என்று ஆறியமர்ந்து குளித்துக் கொண்டிருக்கும் காட்சிகளை இன்று அதிகமான வீடுகளில் காண்கின்றோம்.
ஜும்ஆவுக்கு சமுகமளிக்கும் நேரமும் அதன் சிறப்பும் :
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் ஜுமுஆ நாளில் கடமையான குளிப்புப் போன்று குளித்து விட்டு, பின் பள்ளிக்கு வந்தார் என்றால் ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போலாகிவிடுவார்.
இரண்டாம் நேரத்தில் வந்தாரென்றால் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாகிவிடுவார்.
மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் கொடுத்தவர் போலாவார்.
அவ்வாறு நான்காம் நேரத்தில் வரும் போது கோழியைக் கொடுத்தவர் போன்றும், ஐந்தாம் நேரத்தில் வரும் போது முட்டையைக் கொடுத்தவர் போன்றும் ஆகிவிடுகிறார். இமாம் பள்ளிக்கு வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையை செவிமடுப்பார்கள். (ஆதாரம்: புகாரி)
உண்மையில் சிந்தித்துப் பார்க்கையில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒவ்வொருவரும் ஒரு ஒட்டகத்தை
அல்லது ஒரு மாட்டை அல்லது ஒரு ஆட்டை குர்பான் கொடுங்கள் என்று கட்டளையிடப்பட்டால் எங்களால் முடியுமா? முடியாதுஸ. அனால் இறைவன் எந்த அளவுக்கு எங்களுக்கு மார்க்கத்தை இலகுவாக்கி , அமல்களின் கூலியையும் பன்மடங்காக்கியுள்ளான். இதை நாம் ஒவ்வொருவரும் சிந்தனைக்கு எடுக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
எனவே, வெள்ளிக் கிழமை என்பது தனிநபராலோ அல்லது அரசாங்கத்தாலோ வழங்கப்பட்ட அரட்டையடிப்பதற்குரிய ஒரு லீவு நாளல்ல! மாறாக, சிறப்பான ஒரு வணக்கத்திற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் இறைவனால் அருட்கொடையாக வழங்கப்பட்ட ஒரு நாள் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜுமுஆ தினத்தைப் பற்றி இறைவன் கூறும் மேற்கண்ட வசனத்திலே, வெள்ளிக் கிழமையை கண்ணியப்படுத்தி, அந்நாளின் கடமைகளை நிறைவேற்றுமாறு கூறினான். அதிலும் விஷேடமாக ஜுமுஆவுடைய நேரத்தில் வியாபாரம் செய்வதைத் தடுத்துள்ளான்.
"ஜுமுஆ முடிந்தபின் நீங்கள் ஆகுமான பாதையில் இயன்றளவு உங்கள் வியாபாரத்தில் ஈடுபடலாம். அப்படிச் செய்யும் போது இறைவன் அதிலே "பறகத்" எனும் அருளைச் சொரிகிறான்." என்றும் வாக்களித்திருக்கின்றான்.
எனவே இதற்கு நாம் ஒருபோதும் மாறு செய்துவிடும் சமுதாயமாக மாறிவிடக்கூடாது. அல்லாஹ்வுத்தஆலா அவனது கட்டளையை வீணடித்த சமூகங்களை தண்டித்தே தவிர விட்டுவைக்கவில்லை. அவனது திருமறையில் ஒரு கிராமத்தில் வசித்து வந்த இஸ்ரவேல் சமுதாயத்தைப் பற்றி கூறிக் காட்டுகின்றான்.
("சனிக் கிழமையை கண்ணியப்படுத்துமாறும். அதிலுள்ள கடமைகளை நிறைவேற்றுமாறும் இஸ்ரவேலர்களுக்கு கட்டளை இடப்பட்டது. எனவே சனிக் கிழமைகளில் மீன் பிடிக்கப் போவது அவர்களுக்கு தடுக்கப்பட்டும் இருந்தது. ஆனால் அச்சமூகமோ அல்லாஹ்வுக்கே சூழ்ச்சி செய்தார்கள். சனிக்கிழமை அதிகமான மீன்கள் கடலின் மேற்பரப்புக்கு வருவதால் அவர்கள் முன்தினமே, வலைகளையும் மீன்பிடி கருவிகளையும் கடலில் போட்டுவிட்டு வருவார்கள்.
இரவு நேரம் வந்ததும் சனிக்கிழமை நாள் முடிவதால் அதனை அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். இப்படியான சூழ்சியை அவர்கள் செய்ததால் அல்லாஹ்குத்தஆலா அவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றினான்.) ( இதை ஸூரத்துல் அஃராஃப் 163-166 இல் காணலாம்).
எவ்வாறு அல்லாஹ்வுத்தஆலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சமூகத்திற்கு வெள்ளிக் கிழமையை சிறப்பாக்கி, அதில் பல் கடமைகளையும் ஆக்கி ஜுமுஆவுடைய நேரத்தில் வியாபாரம் செய்வதைத் தடுத்தது போன்று, அந்த இஸ்ரவேலருக்கும் சனிக்கிழமையை கண்ணியப்படுத்தி அந்நாளில் அவர்கள் மீன்பிடித்தொழில் செய்வதையும் தடுத்திருந்தான். அதையும் மீறி அவர்கள் சம்பாதிப்பதில் மோகம் கொண்டு கட்டளையை மீறியதால் மிகவும் இழிந்த நிலையை சந்தித்திருக்கிறார்கள்.
இந்த இடத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் மிக ஆழமாக சிந்திக்கக்கடமைப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜும்மாவுடைய நேரத்தில் கடைகளைத் திறந்து கொண்டு சத்தமாக பாடல்களையும் போட்டுக் கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவோர், அல்லது அந்நேரத்தில் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்பவர்கள், அல்லது அதற்கு சமூகமளிக்காமல் வீண் பேச்சுக்களிலும், விளையாட்டுக்களிலும் மூழ்கியிருப்பவர்கள் அல்லாஹ்வின் தண்டனையைப் பயந்து கொள்ள வேண்டும்.
மேலும்
தண்டிக்கப்பட்ட சமுதாயங்களின் சம்பவங்களிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
o ஜுமுஆவுக்கு அவசரப்படாமல் வருவதே சிறந்தது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
"தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள், நிதானத்தைக் கடைப்படியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறிவிட்டதைப் பூர்த்தி செய்யுங்கள். (ஆதாரம்: புகாரி)
நேரகாலத்துடன் சமுகமளிப்பவருக்கு ஒட்டகத்தை குர்பானி கொடுத்த நன்மை கிடைக்கிறது என்று ஆசையூட்டுகின்ற அதே நேரம், சில வேளை தாமதமாகிவிட்டால் அதற்காகத்தடுமாறி அவசரப்பட்டு ஓடிவர வேண்டியதில்லை எனும் அழகான முறையையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
o மௌனமாக இருத்தல் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவருக்கு "வாய்மூடு" என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய். (ஆதாரம் புகாரி)
எனவே ஜும்ஆ நிகழும் வேளை சிறு பேச்சுகளில் ஈடுபடுவதன் மூலம், வீணான காரியத்தில் மூழ்கிவிட்டவர்கள் போல் ஆகிவிடாமல் அதன் முடிவுவரை அழகிய முறையில் செவிதாழ்திக் கேட்கவேண்டும்.
o ஜுமுஆ நாளில் (வெள்ளிக்கிழமையில்) உள்ள சிறப்பான நேரம் :
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜுமுஆ பற்றிக் கூறும் போது "ஜுமுஆ நாளில் ஒரு நேரம் உண்டு" அந்த நேரம்
மிகவும் குறைந்த நேரமே என்று சுட்டிக்காட்டிவிட்டு, பின்னர் கூறினார்கள், "அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியான் தொழுகையில் நின்று எதையேனும் கேட்டால் அதை அல்லாஹ் அவர்களுக்கு கொடுக்காமல் இருப்பதில்லை.
o பெண்களும் ஜும்ஆவில் கலந்து கொள்ளலாம் :
"உமர் ரளியல்லாஹு அன்ஹு உடைய மனைவியரில் ஒருவர் சுபஹ், இஷாத் தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதற்கு பள்ளிகுச் செல்வார். அவரிடம் " உங்கள் கணவர் "உமர்" ரோசக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் பள்ளிக்குச் செல்கிறீர்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்கு "அவர் என்னைத் தடுக்க முடியாது ஏனெனில் "பள்ளிக்குப் பெண்கள் செல்வதை நிங்கள் தடுக்காதீர்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார் எனப் பதிலளித்தார். (ஆதாரம்: புகாரி)
ஆக வெள்ளிக்கிழமை என்பது ஒரு கண்ணியமிக்க நாள் மிக்க பிராத்தளைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒரு சிறப்புமிக்க நாள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
இத்துனை சிறப்பு வாய்ந்த இந்த வெள்ளிக் கிழமையை எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாங்கள் வீணடித்திருக்கிறோம். ஆதன் சிறப்பை அலட்சியப்படுத்தியிருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்டுக் கொள்வது அவசியமாகும்.
எனவே, வாரத்தில் ஒருமுறை முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையாக இறைவழிபாட்டில் ஈடுபட்டு சந்தோசமாகப் பிரிந்து செல்கின்ற ஒழு அழகான நிகழ்வு இந்த வெள்ளிக்கிழமைகளில் உள்ளதால், இதற்குப் பின்னராவது இந்த ஜுமுஆ தினத்தைக் கண்ணியப்படுத்தி அதன் நிறைவான கூலியைப் பெற முயற்சிப்போமாக.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )