நாம் எல்லோரும் மரணிக்கக்கூடியவர்கள். மறுமை நாள் ஒன்று உள்ளது. அதிலே நாம் எல்லோரும் எழுப்பப்படக்கூடியவர்கள். அந்நாளில் உலகில் வாழ்ந்து மரணித்த அனைவரும் எழுப்பப்படுவார்கள். அனைவரிடமும் அல்லாஹ்வின் விசாரணை நடைபெறும். அவனிடத்திலிருந்து எவரும் தப்பிவிடமுடியாது.
அவன் யார்? அணுவளவு நன்மை செய்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவுமாட்டான். அணுவளவு தீமை செய்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவுமாட்டான். யாரெல்லாம் இவ்வுலகில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து மரணித்தார்களோ அவர்களுக்கு அங்கே மிகப் பெரிய வெற்றியுள்ளது. யாரெல்லாம் அவனுடைய கட்டளையை மீறி நடந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ்வின் மிகப் பெரிய வேதனை உள்ளது.
இஸ்லாம் ஒரு பூரணமான மார்க்கமாகும். இம்மார்க்கத்தில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்பது அல்லாஹ் எமக்கு விதித்த கட்டளை. 'நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!' (அல்குர்ஆன் 8:1) யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து மரணிக்கின்றார்களோ அவர்கள் மறுமை நாளில் நஷ்டமடைந்தவர்களாவார்கள்.
இஸ்லாம் மார்க்கம் ஒருவர் எச்சித் துப்புவதிலிருந்து ஆட்சி செய்யும் வரை அனைத்திற்கும் வழிகாட்டுகின்றது. ஒருவர் இவ்வுலகில் ஏதாவது ஒரு காரியத்தை செய்வதென்றாலும் அது அல்லாஹ்வுடைய பேச்சான அல்குர்ஆனுக்கும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரமான ஹதீஸுக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும். அது அல்லாமல் அவ்லியாக்கள், ஷுஹதாக்கள், நாதாக்கள், பெரியோர்கள் போன்றோர் சொல்லியிருக்கின்றார்கள், செய்திருக்கின்றார்கள், அங்கீகரித்திருக்கின்றார்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டு எந்தவொரு காரியத்தையும் யாரும் செய்யக்கூடாது.
எந்தவொன்றாக இருந்தாலும் அது குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் உட்படுத்திப் பார்க்கவேண்டும் என்பதை அல்லாஹ்வே நமக்கு தெளிவுபடுத்துகின்றான். 'ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்குமுமாகும்.'(அல்குர்ஆன் 4:59)
ஒரு விஷயத்தை ஒரு பெரியார் சொல்லிவிட்டார் என்று மௌலவிமார்கள்(?) கூறினால் அதனை மார்க்கம் என நினைத்து தம் வாழ்வில் செயற்படுத்துகின்ற அறியாத மக்கள் நம்மில் இருக்கின்றார்கள். இம்மக்களிடத்தில் இஸ்லாம் மார்க்கத்தில் இல்லாத, மார்க்கம் தடை செய்த எத்தனை அநாச்சாரங்களை மார்க்கம் என்ற பெயரில் எத்திவைத்து வருகின்றார்கள். இதற்கு காரணம் என்ன என்றால் தங்களின் பொருளாதாரத்தையும் வயிறுகளையும் வளர்ப்பதற்காகவே தவிர வேறொன்றுமில்லை. இது உண்மை என்பதற்கு இவர்கள் மார்க்கம் என்று செய்யும் காரியங்களை ஒவ்வொரும் நடுநி;லையாக சிந்தித்துப் பார்த்தாலே எல்லோரும் இப்போலி மௌலவிமார்களை இனங்கண்டு கொள்ளலாம்.
கத்தம்-பாத்திஹா,
கப்ர் வழிபாடு,
ஸுப்ஹான மௌலிது,
முஹைதீன் மௌலிது,
குடி மௌலிது,
பத்ர் மௌலிது,
நடமௌலிது,
மீலாத் விழா,
கொடியேற்றவிழா
இன்னும் இதுபோன்ற ஏராளமானவைகள் இருக்கின்றன. இவையனைத்தையும் நாம் பார்த்தால் இவையனைத்தும் மௌலவிமார்களின்(?) மடிகள் நிரம்புகின்றவையாகத்தான் இருக்கின்றன. இஸ்லாமிய உறவுகளே! சிந்தியுங்கள்!
உதாரணத்துக்கு, ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் வீட்டுக்குச் சென்று அவருடைய உறவினர்களிடம் கத்தம் ஓதவேண்டும் என்று சொல்லி இருட்டுக்கத்தம், 3ம் நாள் கத்தம், 7ம் நாள் கத்தம், 40ம் நாள் கத்தம், வருஷக் கத்தம் என்றெல்லாம் சொல்லி அந்நாட்களில் வயிறுவளர்க்கும் மௌலவிப்(?)பட்டாளம் மரணித்தவரின் வீட்டுக்குச்சென்று தங்களின் மடிகளை நிரப்புவதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.
இதுபோலொன்றுதான் கல்முனை மாநகரில் கிட்டத்தட்ட 188 ஆண்டுகளாக ஷாகுல் ஹமீத் என்பவரின் ஞாபகார்த்தமாக நடைபெற்றுவரும் கொடியேற்ற விழாவாகும். இவ்விழா 12 நாட்கள் கொண்டதாகும், இந்நாட்களில் கடற்கரைப்பள்ளி காணிக்குள் பல வகையான கடைகள், கொடிகள், மின்குமிழ்கள் போன்றவற்றை வைத்து அலங்கரித்து, ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் ஒன்றிணைந்து கொண்டாடுகின்ற ஒரு விழாவாக இருக்கின்றது. இன்னும் பார்த்தால் இலங்கையில் பல பாகங்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாக வாகனங்களில் நன்மையை(?) எதிர்பார்த்தும் அங்கே வருகின்றார்கள்.
இளைஞர்களும் யுவதிகளும் ஒன்றிணையும் ஓரிடத்தில் நிகழ்கின்ற அநாச்சாரங்களை யாரும் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டியதில்லை நாம் அனைவரும் அறிந்துவைத்திருக்கின்றோம். இரவு, பகலாக நடைபெறும் இவ்விழாவில் எத்தனை அநாச்சாரங்கள் நடக்கின்றன. கொடியேற்ற விழாவுக்குச் செல்கின்றவர்களாக இருக்கட்டும் அல்லது அங்கே செல்லாதவர்களாக இருக்கட்டும் ஒவ்வொருவரும் தங்களது உள்ளத்தில் கை வைத்துக்கேட்டால் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய உள்ளம் பதில் கொடுக்கும். இதனை எவரும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. கொடி ஏற்றும் முதல் நாள் தொடக்கம் கொடி இறக்கும் கடைசி நாள் வரை நடைபெறுகின்ற அநாச்சாரங்கள் ஏராளம்... ஏராளம்...
வணக்கம் என்பது (லா இலாஹ இல்லல்லாஹ்) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டும்தான், அவனைத் தவிர வேறு ஒன்றையும் வணங்கக்கூடாது என்பது ஒரு முஸ்லிமின் அடிப்படைக் கொள்கை. அல்லாஹ் ஓர் அடியான் என்ன பாவத்தை செய்தாலும் அவன் நாடினால் மன்னித்துவிடுவான். ஆனால், மனிதர்கள், சிலைகள், சூரியன், சந்திரன் போன்றவற்றிடம் சென்று பாவமன்னிப்புத்தேடி, உதவி தேடி, நேர்ச்சை வைத்து அவைகளை அல்லாஹ்வுக்கு நிகராக ஆக்குவதை அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான். அதைவிட மிகப் பெரிய கைசேதம் வேறொன்றுமே இல்லை.
'''அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்!'' (அல்குர்ஆன் 4:36)
''தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான். அதற்கு கீழ் நிலையில் உள்ள பாவத்தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தை கற்பனை செய்துவிட்டார்.'' (அல்குர்ஆன் 4:48)
''அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் உண்மையை விட்டும் தூரமான வழிகேட்டில் விழுந்துவிட்டார்.'' (அல்குர்ஆன் 4:116)
முதலாவதாக, இந்தக் கொடியேற்ற விழாவில் ஒரு முஸ்லிமுடைய அடிப்படையே வீழ்ந்துவிடக்கூடிய நிலைமை ஏற்படுகின்றது. குறிப்பிட்ட மாதம், குறிப்பிட்ட திகதி ஷாகுல் ஹமீத் என்பவருடைய ஞாபகார்த்த தினம் என்று சொல்லி, அத்தினத்திலிருந்து இன்னும் 11 நாட்கள் அவரை ஞாபகப்படுத்தி, உயிரோடு இல்லாத அவரிடம் தங்களின் உதவிகளையும், பாவமன்னிப்;புக்களையும், நேர்ச்சைகளையும் செய்து அதனை ஒரு வணக்கமாக செய்து, அல்லாஹ்வை ஞாபகம் செய்வதற்காக கட்டப்பட்ட பள்ளிவாயலில் அவனல்லாத யாரோ ஒருவரை ஞாபகப்படுத்தி ஷாகுல் ஹமீதை அல்லாஹ்வுக்கு நிகராக்கி இஸ்லாத்தைவிட்டும் வெளியேறுகின்ற செயலை கொடியேற்ற விழா என்ற பெயரில் செய்துவருகின்றார்களா? இல்லையா?
இரண்டாவதாக, வெளியூர்களில் வாழ்கின்றவர் கொடியேற்றவிழா வந்துவிட்டால் நன்மையை எதிர்பார்த்து கடற்கரைப்பள்ளிக்கு வந்து தங்களின் நேர்ச்சைகளை செய்துவிட்டு, விழாவை கொண்டாடிவிட்டு செல்கின்றார்கள். நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டும் உரியது. ஆனால், ஷாகுல் ஹமீத் என்ற ஒரு மனிதரிடம் வைக்கின்றார்கள்.
''நீங்கள் எதையேனும் நல்வழியில் செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகின்றான்.'' (அல்குர்ஆன் 2:270)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நன்மையை எதிர்பார்த்து மஸ்ஜிதுல் ஹராம், பைத்துல் மக்தஸ், மஸ்ஜிதுந் நபவி ஆகிய மூன்று பள்ளிகளையும் தவிர வேறு எந்த ஒன்றை நோக்கியும் பயணம் செல்லக்கூடாது.' (புகாரி-1995) நபியவர்கள் ஒன்றைச் சொல்லியிருக்க அதற்கு மாற்றமாக செயற்படுவதற்கு கொடியேற்றவிழா வழியமைத்துக் கொடுக்கின்றதா? இல்லையா?
இஸ்லாமிய உறவுகளே! கொடியேற்ற விழா நடாத்துவதால் எமக்கு எவ்வாறு நன்மை கிடைக்கின்றது என்பதை நாம் எப்போதாவது சிந்தித்திருக்கின்றோமா? இதுபோன்ற கொடியேற்ற விழா நடாத்துவதற்கு அல்லாஹ் சொல்லியிருக்கின்றானா? அவனுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் செய்து காட்டியிருக்கின்றார்களா? இதனால் என்ன பயன் கிடைக்கின்றது? என்றெல்லாம் கேள்வி கேட்டுப் பார்த்தால் ஒன்றுக்குமே பதில் இல்லை. வேறு எதற்காக இவ்விழா நடாத்தப்படுகின்றது மாற்று மதத்தவர்கள் நடாத்தும் விழாக்கள் போன்று இதுபோன்ற விழாக்களை ஏற்பாடு செய்து இதன்மூலம் சுயலாபம் தேடுகின்றார்கள்.
'மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் ஒரு கொடி உண்டு. அவன் உலகில் செய்த மோசடியைக் காட்டுவதற்காக மறுமை நாளில் அது நடப்படும்' (புகாரி-3188)
அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களே! நாம் எல்லோரும் சொர்க்கம் செல்லவேண்டும் என்ற ஆசை இருக்கின்றதா? அந்த ஆசை இருந்தால், அந்தப் பெரியார் சொன்னார், இந்தப் பெரியார் சொன்னார் என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு வாழாமல் அல்லாஹ் தந்த அறிவை வைத்து நாம் ஒவ்வொரு விடயத்தையும் சிந்தித்து அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதுருக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்து மறுமையில் மோசடி செய்தவன் என்ற கொடியை ஏற்றப்படாமல் இருப்பதற்கு நமது ஊரில் ஏற்றும் கொடியை இறக்கி அக்கொடியை இறக்குவதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் வழியமைத்துத் தருவானாக!
S.L. முஹம்மது நிக்றாஸ்
0 comments:
Post a Comment