Jul 16, 2012

ரமலான் விநோதங்கள்

மவ்லவி எஸ்.கே ஜமால்
ரமலான் மாதத்தில் இஸ்லாம் அனுமதிக்காத, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டாத பல வினோதச் செயல்களை தமிழக முஸ்லிம்களிடையே பரவலாக நம்மால் காண முடிகின்றது.
ஹனபிகளும், ஷாபிகளும் உள்ள ஊர்களில் இரு சாராரும் ஐங்காலத் தொழுகைகளையும், தராவிஹ் தொழுகைகளையும் ஒரு இமாமின் பின்னே ஒன்றாகத் தொழுகின்றனர். ஆனால் ரமலான் இரவுகளில் தொழப்படும் வித்ருத் தொழுகையில் மட்டும், ஹனபிகள் தனி ஒரு இமாமின் பின்னேயும் ஷாபிகள் இன்னொரு இமாமின் பின்னேயும் தொழுவதைக் காண முடிகின்றத. இன்னும் சில பகுதிகளில் இமாம் தராவீஹ் முடிந்தவுடன், இமாமுடைய மத்ஹபைச் சேராதவர்கள் தனித்தனியாக வித்ரு தொழுவதைக் காணமுடிகின்றது.
ஷாபி இமாமை ஹனபிகளும், ஹனபி இமாமை ஷாபிகளும் பின்பற்றித் தொழுதால், காலம் காலமாகத் தொழுது வரும் ஐவேளைத் தொழுகை கூடும். வித்ரு தொழுகை மட்டும் கூடாது என்றால் விந்தையாக இல்லை. பர்ளான தொழுகையே கூடிவிடும் போது, பர்ளு இல்லாத இந்த வித்ரு தொழுகைக்கு மட்டும் தனி இமாமைத் தேட வேண்டிய அவசியம் என்ன?
தங்கள் மத்ஹபு இமாம் சொன்னதே சரி என்று வரட்டுப் பிடிவாதம் பிடிப்பதால் ஏற்பட்ட விளைவே இது. இருசாரரும் கூடி, நபிகள் நாயகம் (ஸல்) எப்படித் தொழுதார்கள் என்று ஆராய்ந்து ஏன் ஒரே முறையாகத் தொழக் கூடாது? தங்களை இரண்டு தனி இனங்களாகக் காட்டிக் கொள்வது இவர்களுக்கு தவறானது என்று தோன்றவில்லை. நபிகள் நாயகத்தை பின்பற்றுவது தவறாகத் தோன்றுகிறது.
“நிய்யத் சொல்லிக் கொடுப்பது”
  —————————
“நிய்யத்” என்றால் நினைப்பது என்று பொருள். தான் செய்யக்கூடிய காரியம் என்ன நினைவோடு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். நோன்பு வைக்கும் ஒருவன் சஹர் உண்ணும் போதே நோன்பை வைக்க வேண்டும் என்பதற்காகவே உண்ணுகிறான். இதிலே சொல்லிக் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிய்யத் சொல்லிக் கொடுத்தார்களா? இல்லையே! அவர்கள் சொல்லிக் கொடுக்கும் நிய்யத்தை பார்ப்போம்.
“இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை, அதாவாக நாளைப் பிடிக்க நிய்யத்து கெய்கிறேன்” இது நிய்யத் என்று சொல்லிக் கொடுக்கப் படுகின்ற வாசகம். இதனை இமாம் சொல்ல, செம்மறி ஆட்டுக் கூட்டமாக மக்களும் அப்படியே திரும்பச் சொல்வார்கள்.
“இந்த வருடத்து நோன்பை” என்று இமாம் சொல்வார், சென்ற வருடத்து நோன்பையா இந்த வருடம் பிடிக்கமுடியும்? என்று எவரும் கேள்வி கேட்பதில்லை. அடுத்து, “ரமலான் மாதத்து” நோன்பை நோற்பதாக சொல்லிக் கொடுப்பார். ரமலான் மாதத்து நோன்பைத்தான் ரமலானில் நோற்க முடியும் என்பதும் மக்களுக்குத் தெரியாதா? “பர்ளான நோன்பை” என்று சொல்லிக் கொடுப்பார். ரமலான் மாதத்தில் பர்ளான நோன்பைத் தானே நோற்க முடியும்? இதுகூட மக்களுக்குத் தெரியாது என்று இமாம்கள் எண்ணுகிறார்களா? “அதாவாக” என்று சொல்லிக் கொடுப்பார். ரமலானில் நோற்கப்படும் நோன்புகள் அதாவாகத் தான் நிறைவேறுமேயன்றி களாவாக எப்படி நிறைவேறும்?
ஒரு முஸ்லிம் சஹர் உண்ணும்போதே, இந்த வருடத்து ரமலான் மாத நோன்பை நோற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தானே உண்ணுகிறான். அவனது உள்ளத்தில் அந்த எண்ணம் ஆழமாக வேருன்றி இருப்பதால் தானே, மூன்று மணிக்கு எழுகிறான். இந்த எண்ணத்திற்குத்தானே நிய்யத் எனப்படும். இதிலே தராவீஹீக்குப் பின், சொல்லிக் கொடுப்பதற்கு என்ன ஆதாரம்? ஒருவேளை நிய்யத் என்றால் வாயால் சொல்வது என்று பொருள் செயுது கொண்டார்களோ என்னவோ?
இதில் இன்னொரு வேடிக்கையையும் பார்க்க வேண்டும். இஸ்லாமிய மரபுப்படி சூரியன் மறையும் போது முதல் நாள் முடிந்து இரண்டாம் நாள் துவங்குகிறது. ஒரு மஃரிபிலிருந்து அடுத்த மஃரிபு வரை உள்ள நேரங்கள் ஒரு நாளாகும். வியாழன் சூரியன் மறைந்த உடன் வெள்ளி இரவு வந்துவிட்டதாக சாதாரண பாமர தாய்மார்களும் அறிவார்கள்.
உதாரணமாக வெள்ளி இரவில் “நாளை் பிடிக்க நிய்யத்து செய்கிறேன்” என்று சொன்னால் என்ன பொருள்? வெள்ளி இரவுக்குப்பின் வரப்போவது வெள்ளி பகல்தானே. “இன்று பிடிக்க நிய்யத்து சொல்லிக் கொடுக்கிறார்களோ என்னவோ? இதிலிருந்தே இந்த நிய்யத்தை உருவாக்கியவர்களின் அறியாமை நமக்கு நன்றாக தெரிகின்றது.
இப்படி எல்லாம் நிய்யத் சொல்லிக் கொடுக்கும் பழக்கம் நாமாக ஏற்படத்திக் கொண்டதேயல்லாமல் வேறில்லை. நோன்பு நோற்பதாக ஒரு மூமின் மனதில் எண்ணவேண்டும் என்பதுதான் அவசியம். இதைத் தவிர இப்படிச் சொல்வது பித்அத்தான காரியமாகும்.
இந்த பித்அத்களை விட்டொழித்து நபி வழி நடந்து நஜாத் அடைய அல்லாஹ் அருள் புரிவானாக! -ஆமீன்
நோன்பாளி செய்யக் கூடாதவை
  —————————–
எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. (நபிகள் நாயகம் – ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரநூல்: புகாரி
நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுகள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால், “நான் நோன்பாளி” என்று கூறிவிடவும். நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நோன்பின் தற்காலிக சலுகைகள்
  —————————-
நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 2:104)
பயணத்தில் உள்ளவன். கர்ப்பமாக உள்ளவள், பால் கொடுக்கும் தாய் ஆகியோருக்கு (பிரிதொரு நாளில் அதனை நோற்க) நபிகள் (ஸல்) அவர்கள் சலுகை தந்திருந்தனர். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) ஆதார நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, நஸயி இப்னுமாஜா
எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்றக் கூடாது என்றும் உத்திரவிடப்பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரழி) ஆதார நூல்: முஸ்லிம்
அல்லாவிஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபிகள் (ஸல்) அவர்கள் “இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகிறானோ, அது நல்லதுதான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை”. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு (ரழி) ஆதார நூல்: முஸ்லிம்

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )