Jul 10, 2012

தகாத பாலியல் தொடர்பு உடலையும் உள்ளத்தையும்கெடுத்துவிடும்





[ ஒரு பெரிய சமூகத்தின் ஆரம்ப வித்தாக அமைவது குடும்பமாகும். இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோட்டைக்கு ஒப்பானதாகும்.
குடும்பம் எனும் கோட்டையை பாதுகாக்கும் சிப்பாய்களாக குடும்ப அங்கத்தவர்கள் இருக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் பெற்ற குடும்பம் எனும் நிறுவனத்தின் நுழைவாயிலாக இருப்பது திருமணம் ஆகும். திருமணம் இன்றி குடும்பம் உருவாவது சாத்தியமற்றதாகும்.
விபசாரம், தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் - பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக்கூடியவையாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச்செயல்களாகும்.
இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.]
  விபச்சாரத்திற்கு வழிவகுப்பவை 
இவ்வடிப்படையில் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விலக்கப்பட்டுள்ளன:
அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் -சுதந்திரமாகப் பழகுதல்
இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:
''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.'' (அஹ்மத்)
''உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.'' (புகாரி, முஸ்லிம்)
குறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோதரர்கள் முதலான நெருங்கிய உறவினர்களுடன் தனித்திருப்பது, சுதந்திரமாகப் பழகுவது கூடாது. இதனை நபியவர்கள் மரணத்திற்குச் சமமானது என வர்ணித்துள்ளார்கள். (பார்க்க ஸஹீஹுல் புகாரி)
அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்
ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)
''அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.'' (அஹ்மத், அபூதாவூத்)
கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:
''இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.'' (புகாரி)
அவ்ரத்தை காட்டுவதும், பார்ப்பதும்
அவ்ரத்தை வெளிக்காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நடத்தைக்குத் தூண்டுபவை என்ற வகையில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி என்ன என்பது பற்றியும், ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக விளக்குகின்றது.
இவ்வாறு பாலியல் சீர்கேடுகளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம், மறுபக்கத்தில் மனிதன் தனது உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வதற்கு புனிதமானதும் கௌரவமானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது.
  இஸ்லாத்தின் ஒளியில் திருமணத்தினால் விளையும் நன்மைகள் : 
1. இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி, அவர்களைக் கொண்ட குடும்பங்களை அமைத்து, இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும்.இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் ஒரு பிரதான இடத்தைப் பெறுகின்றது. இஸ்லாத்தை குடும்பவியல் சார்ந்த மார்க்கம் (Family Oriented Religion) என வர்ணிப்பர். குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம் (Micro Society) என கருதப்படுகின்றது.
ஒரு பெரிய சமூகத்தின் ஆரம்ப வித்தாக அமைவது குடும்பமாகும். இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோட்டைக்கு ஒப்பானதாகும். அக்கோட்டையில் எவ்வித ஓட்டையும் தோன்றாமல் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு குடும்ப அங்கத்தவர்களைச் சார்ந்ததாகும். குடும்பம் எனும் கோட்டையை பாதுகாக்கும் சிப்பாய்களாக குடும்ப அங்கத்தவர்கள் இருக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் பெற்ற குடும்பம் எனும் நிறுவனத்தின் நுழைவாயிலாக இருப்பது திருமணம் ஆகும். திருமணம் இன்றி குடும்பம் உருவாவது சாத்தியமற்றதாகும்.
2. மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானதாகும். அதனைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதுமானதும், பாதுகாப்பானதும், கௌரவமானதுமான வழியாக திருமணம் விளங்குகின்றது.
3. குழந்தைச் செல்வத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகவும், இனப்பெருக்கத்திற்கான சீரிய முறையாகவும் இருப்பது திருமணமாகும்.
4. தாய்மை உணர்வு (Motherhood), தந்தை உணர்வு (Fatherhood) சகோதர உறவு (Brotherhood) முதலான உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. திருமணமே உணர்வுகளை உருவாக்கி போஷித்து வளர்க்கக் கூடியதாகும்.
5. மணவாழ்வு மனிதனில் சுறுசுறுப்பை ஏற்படுத்தவல்லது. அது மனிதனுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதோடு அவனை பொறுப்புணர்ச்சி உள்ளவனாகவும் மாற்றுகின்றது. இந்த வகையில் உழைப்பு அதிகரித்து, உற்பத்தி பெருகி, மனித வாழ்வு வளம் பெற மணவாழ்வு வழிகோலுகின்றது.
6. வாழ்க்கையுடன் தொடர்பான பொறுப்புக்கள் ஆண், பெண் இருபாலாருக்குமிடையே சரியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதில் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. திருமணத்திற்கூடாக இத்தகைய பொறுப்புக்கள் கணவன், மனைவிக்கிடையேயும், வீட்டின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான வாய்ப்புக் கிட்டுகின்றது.
7. குடும்பங்களுக்கிடையே தொடர்புகள் உருவாகி, பரஸ்பர அன்பும் ஒத்துழைப்பும் நிலவுகின்ற ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாவதற்கும் திருமணமே காரணமாக அமைகின்றது.
8. மனஅழுத்தம், உளஇறுக்கம், கவலைகள் முதலான உளரீதியான பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று நிறைவானதும் நிம்மதியானதுமான ஒரு வாழ்வுக்கு திருமணம் சிறந்த வழியாகவும் விளங்குகின்றது. திருமணம் முடித்தவர்களின் ஆயுள் திருமணம் முடிக்காதவர்களின் ஆயுளை விட கூடியதாகும் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.
திருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது
''நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.'' (30:21)
  குடும்ப வாழ்வை அச்சுறுத்தும் அம்சங்கள் 
இல்லற வாழ்வுக்கும் அதன் நுழைவாயிலான திருமணத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் அம்சங்களை அறிந்து கொள்வது பயனுள்ளதாகும்.
துர்நடத்தை :
விபசாரம், தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் - பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக்கூடியவையாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச்செயல்களாகும்.
இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.
இவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. மேக நோய் முதலான பல்வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன.
இன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் தொடக்கப்புள்ளி முறைகோடான பாலியல் உறவுகள் என்பதை அறியாவதவர் எவரும் இல்லை. மனநோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடைசெய்துள்ளது.
ஓரினச்சேர்க்கை :
ஏறத்தாழ ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தன்னினச்சேர்க்கை என்ற தரங்கெட்ட செயலில் ஈடுபட்ட நபி லூத் (அலை) அவர்களின் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் அவர்களின் இக்குற்றச் செயல்களின் காரணமாக அவர்கள் எவ்வாறு பயங்கரமாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றது. (பார்க்க: ஸூறத்து அஷ்ஷுஅரா : 172-174)
மனிதனின் மனத்தையும் குணத்தையும் இயல்பையும் இறைத்தொடர்பையும் கெடுத்து, இம்மை, மறுமை ஈருலக வாழ்வையும் பாழ்படுத்தக்கூடிய ஓரினச்சேர்க்கை என்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பது ஷரீஆவின் சட்டத்தீர்ப்பாகும்.
விபச்சாரம் :
ஓரினச்சேர்க்கையைப் போலவே விபச்சாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் - பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.
விபச்சாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபச்சாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.
விபசாரத்தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும் நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
''ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்)
''விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
வருமானத்தை அறுத்துவிடும்
ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)
எனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்வின் பேரருளாகும்.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )