நீண்டகாலமாக உலகமெங்குள்ள முஸ்லிம்கள் ரமழான் அரவுகளில் தராவீஹ் என்ற பெயரால் 20 ரகஅத்துகள் தொழுது வருகிறார்கள். பரம்பரை பரம்பரையாக 20 ரகஅத்துகள் தொழுது வருவதால் அதை நியாயப்படுத்தவே மனிதமனம் விரும்புகிறது. ஆனால் மன விருப்பம் மார்க்க விருப்பம் ஆக முடியாது. அல்லாஹ்(ஜல்), நபி(ஸல்) அவர்களைக்கொண்டு, மார்க்கமாகக் காட்டித்தந்தது மட்டும் தான் மார்க்கமாக முடியும்.
மார்க்கம் நிறைவு பெறவில்லையா?
குர்ஆனிலும், ஹதீஸிலும் மார்க்கம் நிறைவாக இல்லை. அதை நிறைவு படுத்த மனித அறிவு அவசியம் என்று எண்ணுவதே ஈமானைப் பங்கப்படுத்தும் சிந்தனையாகும். குர்ஆனிலும், ஹதீஸிலும் மனிதனின் நேரான வாழ்க்கைக்குத் தேவையானவை, நிறைவாகவும் தெளிவாகவும் இருக்கின்றன என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கிறது.
இந்த அடிப்படைச் சிந்தனைகளோடு, ரமழான் இரவுத் தொழுகை எத்தனை ரக்க அத்துகள் என்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களைக் கொண்டு ஆராய்வோம். நாம் இன்று பயன்படுத்திவரும் தராவீஹ் என்ற பதம் ஹதீஸ்களில் காணப்படவில்லை என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். இரவுத் தொழுகை, ரமழான் தொழுகை. தஹஜ்ஜத் வித்ர் என்ற பெயர்களாலேயே இந்தக் குறிப்பிட்ட தொழுகை பல ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்கள், உமர்(ரழி) அவர்கள், மற்றும் சிறப்புக்குரிய நபித் தோழர்கள் 8+3=11 ரகஅத்துகளுக்கு மேல் இந்த ரமழான் தொழுகை தொழுததில்லை என்றுதான் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தராவீஹ் என்று பெயர் மாற்றம் செய்தவர்களும், 20 ரகஅத்துகளாக ஆக்கியவர்களும் பின்னால் தோன்றியவர்களே அல்லாமல் அல்லாஹ்(ஜல்) தனது தூதரைக் கொண்டு கற்பித்தது அல்ல என்பதை விளங்கி கொள்வோமாக.
ரமழான் தொழுகை 8+3 ரகஅத்துகள்
அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் அபூசல்மதுப்னு அப்துர் ரஹ்மான்(ரழி), நபி(ஸல்) அவர்களின் ரமழான் தொழுகை எவ்வாறு இருந்தது என்று கேட்டதற்கு “ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் நபி(ஸல்) 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை” என்று கூறிய ஹதீஸ் காணப்படும் நூல்கள் :
1. புகாரி பாகம்….1 பக்கம் 342 – 343
2. முஸ்லிம் பாகம்…..1 பக்கம் 254
3. அபூதாவூது பாகம்…..1 பக்கம் 196
4. திர்மிதி பாகம்…..1 பக்கம் 58
5. நஸாயீ பாகம்……3 பக்கம் 234
6. முஅத்தா இமாம் மாலிக் பாகம் …. பக்கம் 81
7. இப்னு ஹுஸைமா பாகம் …..2 பக்கம் 192
8. முஸ்னது அஹ்மத் பாகம் ……6 பக்கம் 36
9. முஸ்னது அபூஅவானா பாகம் …..2 பக்கம் 334
10. முஅத்தா இமாம் முஹம்மது பக்கம் 141
11. பைஹகீ பாகம்……2 பக்கம் 495
12. ஷரஹ்மஆனில் ஆதார்தஹாவீ பாகம் ….2 பக்கம் 282
13. ஷரஹ் சுன்னாஹ் பாகம் ….4 பக்கம் 3
14. தாரமீ பாகம் ….1 பக்கம் 344
மேற்கண்ட நூல்களில் காணப்படும் இந்த ஹதீஸ், தஹஜ்ஜத் குறித்தது. ரமலான் தொழுகை சம்பந்தப்பட்டதல்ல என்றுறற இன்று சிலர் வாதிடுகின்றனர். பாவம் ஹதீஸைப் பற்றிய விளக்கம் இன்று இவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியுள்ளது. ஹதீஸ்களைக் கோர்வை செய்த அறிஞர்கள் அனைவரும் அன்று அறியாமல் இந்த ஹதீஸை ரமழான் தொழுகை என்ற பாடத்தில் எழுதிவிட்டார்கள் போலும்! இந்த ஹதீஸ் ரமழான் தொழுகையைக் குறிக்கும் என்று புகாரிக்கு விரிவுரை எழுதிய பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக;
1. அல்லாமா அஹ்மதிப்னு முஹம்மது கதீபகஸ்தலானி(ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 2 பக்கம் 267
2. அல்லாமா ஹாபிழ் அஹ்மது அலீ ஹனபி சஹரன்பூரி(ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 1 பக்கம் 154
3. அல்லாமா ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 4 பக்கம் 254
4. அல்லாமா அனன்வர்ஷா கஷ்மீரி (ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 2 பக்கம் 420
5. முல்லா அலீகாரி (ரஹ்) மிர்காத் ஹாஷியா மிஷ்காத் பாகம் 1 பக்கம் 115
இன்னும் பல ஆதாரஹ்கள் இருக்கின்றன. விரிவஞ்சி விடுகிறோம்.
அல்லாமா முஹம்மது காஸிம் நானுத்தவி தேவ்பந்த் மதரஸாவின் ஸ்தாபகர் “அறிவுடையவர்களிடம் ரமழான் தொழுகை (தராவீஹ்) தஹஜ்ஜுத் இரண்டும் ஒன்றுதான்” என்று மனது பைஜுல் காசிமிய்யா பக்கம் 13ல் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆக இந்த ஹதீஸ் தஹஜ்ஜுத் சம்பந்நதப்பட்டது. ரமழான் தொழுகை சம்பந்தப்பட்டதல்ல என்று வாதிடுவோர் குறைமதி படைத்தவர்களே. இவர்கள் வாதம் சரி என்றால் நபி(ஸல்) ரமழானில் ரமழான் தொழுகை 23 ரகஅத்துகள், தஹஜ்ஜுத் 11 ரகஅத்துகள் ஆக 34 ரகஅத்துகள் தொழுதிருக்க வேண்டும். அதுவும் வித்று இரண்டுமுறை தொழுதிருக்க வேண்டும். இது அறிவுக்குப் பொருந்தாது? 34 ரகஅத்துகள் நபி(ஸல்) தொழுதிருந்தால் 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை என்று ஆயிஷா(ரழி) அறிவித்திருப்பார்களா? என்று ஆராய்ந்து பாருங்கள். நபி(ஸல்) அவர்கள் ரமழானின் தொழுகை 8+3=11 ரகஅத்துகள் மட்டுமே தொழுதார்கள் என்பதற்கு இரண்டு ஹதீஸ்கள் இருக்கின்றன. அவற்றையும் அறியத்தருகிறோம்.
1. ஜாபிர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 8ரகஅத்துகளும் வித்ரு 3ரகஅத்துகளும் தொழவைத்ததாக அறிவிக்கின்றார்கள். இந்த ஹதீஸ் இப்னு ஹுஸைமா இப்னு ஹுஸைமா பாகம் 2. பக்கம் 138-ல் காணப்படுகிறது.
2. உபைஇப்னுகஃப்(ரழி) ரமழானில் இரவில் பெண்களுக்கு 8 ரகஅத்துகளும் வித்ரு 3 ரகஅத்துகளும் தொழவைத்ததை நபி(ஸல்) அவர்கள் அதை மெளனமாக ஏற்றுக் கொண்டார்கள் என்ற அறிவிப்பு முஸ்னது அபூயஃலா பக்கம் 155 -ல் காணப்படுகின்றது. இந்த ஹதீஸை ரயீஸுத்தப்லீக் மெளலவி யூசுப்(ரஹ்) அவர்கள் தனது ஹயாத்துஸ்ஸஹாபா பாகம் 3 பக்கம் 167 -ல் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தப்லீக் தஃலீம் தொகுப்புகளைத் தொகுத்த மெளலவி ஜகரிய்யா(ரஹ்) அவர்கள் அவ்ஜஸுல் மஸாவிக் என்ற இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் முஅத்தாவின் விரிவுரை பாகம் 1. பக்கம் 339 -ல் ரமழான் தொழுகை 20 ரகஅத்துகள் என்பதற்கு ஆதாரம் இல்லை. அறிஞர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கருத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களின் ரமழான் சிறப்பு என்ற தஃலீம் நூலில் ரமழான் தொழுகை 20 ரகஅத்துகள் என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பதை முஸ்லிம்கள் சிந்திக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ரமழான் தொழுகை 20 ரகஅத்துகள் என்ற ஹதீஸ்களின் நிலை?
நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 20 ரகஅத்துகள் தொழுததாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்ட ஒரு இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ் சில கிதாபுகளில் காணப்படுகின்றது.
இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் வரிசையில் வருகின்ற:
1. அபூசைபா இப்ராஹிம் இப்னு உஸ்மான் 2. ஹகம் இப்னு உதைபா ஆகிய இருவரம் காஜிகளாக இருந்தார்கள். பொய்யர்கள் என்று அஸ்மாவுர்ரிஜால் (அறிவிப்பாளர்களின் தகுதிகளை எடைபோடும்) கலையில் வல்லுனர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.
இமாம்களான ஸுஹ்பா, அஹமது, இப்னு முயீன், புகாதி, நஸயீ (ரஹ்-அலை) போன்றோர் இந்த இருவரையும் நல்லவர்களாக, நேர்மையாளர்களாகக் கணிக்கவில்லை. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அறிவிக்கப்பட்டுள்ள உண்மையான ஹதீஸுக்கு எதிராக இருக்கிறது என்று அறிவித்து நிராகரிக்கின்றார்கள். தேவ்பந்த் ஆலிம்கள் பலரின் நூல்களில் இந்த உண்மை தெளிவாக இருந்தும் அப்பாவி முஸ்லிம்களை சிலர் ஏன் தான் ஏமாற்றி, கஷ்டம் கொடுக்கிறார்களோ தெரியவில்லை?
இதே போல் உமர்(ரழி) 20 ரகஅத்துகள் தொழுதார்கள். தொழ வைக்கும்படி சொன்னார்கள். உமர்(ரழி) காலத்தில் 20 ரகஅத்துகள் தொழப்பட்டது போன்ற ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்ட பலஹீனமான ஹதீஸ்களாக காணப்படும் உமர்(ரழி) காலத்தில் மக்கள் 20 ரகஅத்துகள் தொழுதார்கள் என்ற ஹதீஸ் பலஹீனமானது காரணம் இதை ரிவாயத்துச் செய்யும் யஸீதுப்னுரூமான் உமர்(ரழி) காலத்தில் பிறக்கவே இல்லை என்று பைகஹீ இமாமே பைகஹீ பாகம் 2 பக்கம் 496 ல் குறிப்பிட்டுள்ளதை ஏன் மறைகின்றர்ாகள்?
உமர்(ரழி) அவர்கள் ஒருவரிடம் ஜனங்களுக்கு 20 ரக அத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்டதாக, யஹ்யா இப்னு சயீத்(ரஹ்) அவர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸை ஆராயும்போது, இந்த யஹ்யா இப்னு சயீத் 5வது தலைமுறையைச் சேர்ந்தவர், உமர்(ரழி) இறப்பிற்கும் 100 வருடம் பின்னால் வாழ்ந்தவர் என்று ஹதீஸ் கலை வல்லுனாகள் பதிவு செய்துள்ளாாகள்.
உபை இப்னு கஃபு(ரழி) ஜனங்களுக்கு 20 ரகஅத்துகள் தொழ வைத்தார்கள் என்பதும் ஆதாரமற்றது. காரணம், உபை இப்னு கஃபு(ரழி) நபி(ஸல்) அவர்களது காலத்திலேயே பெண்களுக்கு 8+3 ரகஅத்துகள் தொழ வைத்து நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஹதீஸ் பலமானது. மேலும் உமர்(ரழி), உபை இப்னு கஃபு(ரழி) மதீமுத்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும், ஜனங்களுக்கு 8+3 ரகஅத்துகள் தொழ வைக்க ஏவிய சம்பவம், ஸாயிப் இப்னு யஸீதால் அறிவிக்கப்பட்டதை, இமாம் முஹம்மது இப்னு நஸிர்(ரஹ்) தனது கியாமுல்லைல் பக்கம் 91-லும் பதிவு செய்துள்ளார்கள், இது தஹாவீ பாகம் 1 பக்கம் 173 லும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷரஹ் மஆனில் ஆதார் பாகம் 2 பக்கம் 293 -லும் பதியப்பபட்டுள்ளது.
ஆக ரமலான் இரவுத் தொழுகை (தராவீஹ்) 8+3 என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் வரை போய்ச் சேரும் ஹதீஸ்கள் மூன்றும் ஆதார பூர்வமானவை. 20 ரகஅத்துகள் என்ற ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்கள் வரைப் போய்ச் சேரவில்லை. அறிவிப்புகளும் மிகவும் பலஹீனமானவை என்று ஹதீஸ் கலை வல்லுனர்களாலேயே நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை வைத்துச் செயல்படுவதா? என்பதை அறிவுடையவர்கள் ஆராய்ந்து பார்க்கட்டும். மார்க்கத்தை அல்லாஹ்(ஜல்), நபி(ல்) அவர்களைக் கொண்டே நிறைவு செய்திருக்கிறான் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இன்னுமொரு சந்தேகம்:
அடுத்து இந்தச் சிலர் இன்னொரு ஐயத்தைக்கிளப்புகிறார்கள். நபி(ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுகிறவர்கள், ரமழான் இரவுத் தொழுகையை 3 நாட்கள் தானே ஜமா அத்துடன் தொழ வேண்டும். ரமழான் முழுவதும் எப்படி ஜமா அத்துடன் தொழுகிறாாகள்? என்ற கேள்வியே அது.
நபி(ஸல்) அவர்களின் செயல் மட்டும் தான் மார்க்கம் என்று நினைப்பவர்களின் அறியாமை குறித்து என்ன சொல்ல முடியும்? நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மூன்றும் மார்க்கமே என்று எண்ணுபவர்களே நேர்வழி நடப்பவர்கள் ஆவார்கள். நபி(ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் ஜமா அத்தாக தொழ வைத்தார்கள். நான்காவது நாள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. பஜ்ரில், “நீங்கள் எனக்காக காத்திருந்தீர்கள், இந்தத் தொழுகை பர்லாக ஆக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமே என்னை வரவிடாமல் தடுத்து விட்டது என்ற கருத்தில் தெளிவாக அறிவிப்புச் செய்தது புகாரியில் (பாகம் பக்கம் 32) காணப்படுகின்றது. மேலும், நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே நபித் தோழர்கள் சிறுசிறு ஜமாஅத்தாக தொழுததற்கும், நபி(ஸல்) அவர்கள் அதை அங்கீகரித்ததற்கும் ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஆக, செயல் அளவில் ஜமாஅத்தாககத் தொழுது விட்டு. தக்க காரணத்தோடு நிறுத்திக் கொண்டாலும், சொல், செயல் அங்கீகாரம் இரண்டின் அடிப்படையில் ரமழான் முழுவதும் ஜமாஅத்தாகத் தொழுவது நபி வழியே ஆகும்.
உமர் (ரழி) அவர்களின் செயல்?
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சிறுசிறு ஜமாஅத்தாக நடந்து கொண்டிருந்ததை மர்(ரழி) அவர்கள் தமது ஆட்சி காலத்தில் ஒரே ஜமாஅத்தாக ஆ்கினார்கள் என்பதே புகாரியில் (பாகம் 1, பக்கம் 342) காணப்படும் தெளிவான ஹதீஸாகும். அந்த ஹதீஸில் இத்தனை ரக்அத்துக்கள் என்று குறிப்பிடப்படவில்லை. (11 ரகஅத்துக்களுக்குரிய ஹதீஸ் பக்கத்தில் இடம் பெறுவதால் ரகஅத்துகள் குறிப்பிடப்படவில்லை, என்று நம்ப இடமுண்டு) உமர்(ரழி) அவர்களின் இந்தச் செயலை சரியான கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் அவர்கள் புதிய ஒரு முறையை மார்க்கத்தில் நுழைத்தார்கள் என்றோ நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாறாக நடந்தார்கள் என்றோ ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.
இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் அபிப்பிராயம்
“உமர்(ரழி) அவர்கள் (ஒரே ஜமாஅத்தாக ஆக்கியது) இதைத் தன்புறத்திலிருந்து செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களிடமிருந்து பெற்ற ஆதாரங்களை வைத்துத்தான் அப்படிச் செய்தார்கள் என்று இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் பதாவாயே சுபுக்கி பாகம் 1, பக்கம் 166 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்களது பார்வையில் ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்) 8 ரக் அத்துகள் மட்டும்தான், 20 ரக்அத்துகள் என்பதற்கு அவர்கள் புறத்திலிருந்து இந்த “பதாவாயே சுபுக்கி பக்கம் 166 ல் காணப்படும். இந்த சம்பாஷனை சான்று பகர்கின்றது. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் மாணவர் இமாம் முஹம்மது(ரஹ்) அவர்கள் தமது முஅத்தாவின் 141 ம் பக்கத்தில் ரமழான் இரவுத் தொழுகையின் பாடத்தில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களால் ரிவாயத்து செய்யப்படுகின்ற 11 ரக்அத்துக்களுக்கான ஹதீஸ் ஒன்று கூட இல்லை. ரமழான் இரவுத் தொழுகைக்கு இந்த 11 ரக்அத்துகள் ஹதீஸையே நாம் ஆதாரமாக எடுத்திருக்கிறோம் என்றும் குறிப்பிடுகிறாாகள்.
இமாம் தஹாவீ(ரஹ்) அவர்கள் ஷரஹ் மஆனி ஆதார் பாகம் 2, பக்கம் 334 ல் இமாம் அபூ றனீபா (ரஹ்) அவர்களின் பார்வையில் 8 ரக்அத்துக்களுக்கு மேல் அதிகப்படுத்துவது மக்ரூஹ்” என்று குறிபிட்டுள்ளார்கள்.
இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் அபிப்பிராயம்:
ஹாபிழ் சுயூத்தி(ரஹ்) அவர்கள் தனது கிதாபு மஸாபீஹின் 76ம் பக்கத்தில், இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் “உமர்(ரழி) அவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த ரக்அத்துகளாகும். மேலும் 13 இதற்கு நெருக்கமானது. ஆனால், ஜனங்கள் இந்த அளவு அதிக ரக்அத்துகளை எங்கிருந்து பெற்றார்கள்? என்பது தெரியவில்லை” என்று குறிப்பிடுவதாக அறிவிக்கின்றார்கள்.
இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் அபிப்பிராயம்
இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் மக்கா, மதீனாவின் நடைமுறை காரணமாக 20 ரகஅத்துகள் முஸ்தஹப் என்று தனது கிதாப் உம்மில் பதிவு செய்துள்ளார்கள். ஆயினும் ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரகஅத்துகள் ஹதீஸையே ஆதாரமாகத் எடுத்திருக்கிறறார்கள்.
முஸ்லிம் பாகம் 1 பக்கம் 254 ல் காணப்படும் ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரகஅத்துகள் விஷயமாக இமாம் நவபீ(ரஹ்) “இந்த ஹதீஸை வைத்து கிராஅத், கியாம் (நிலை) நீட்டமாக இருப்பதற்கான ஆதாரம் கிடைக்கிறத. ரக்அத்துகளை அதிகப்படுத்துவதை விட கிராஅத், கியாமை நீட்டுவது சிறந்தது” என்று குறிப்பிடுகிறார்கள்.
இமாம் பாகவீ(ரஹ்) அவர்கள் தனது ஷரஹுஸ்ஸுன்னத் பாகம் பக்கம் 123 ல் தெளிவாக, “இமாம் இஹ்மது(ரஹ்) ரமழான் தொழுகை விஷயமாக இத்தனை ரகஅத்துகள் என்று குறிப்பிடவில்லை. அது விஷயமாக முடிவு செய்வதற்கு எவ்வித அவசியமும் ஏற்படவில்லை. ஏனெனில் ரமழான் இரவுத் தொழுகை 11 ரகஅத்துகள் தான் என்ற ஹதீஸை அவர்களது கிதாப் முஸ்னது அஹ்மதில் ரிவாயத் செய்துள்ளார்கள் என்று பதிவு செய்துள்ளார்கள்.
மார்க்கத்தில் அதிகப்படுத்தலாமா?
அடுத்து, நபி(ஸல்) அவர்கள் தொழுதது 8+3 ரக்அத்துகள் என்பது சரிதான். ஆனாலும் ரமழான் மாதத்தில் இரவு காலங்களில் அதிக ரக்அத்துகள் தொழுவது நல்லதுதானே? அதிலே என்ன கெடுதி இருக்கிறது? நன்மைதானே என்று இறுதியாக சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.
அப்சோஸ்! முஸ்லிம் சமுதாயம் இந்த அளவில் வழிகேட்டில் போய்விட்டதே என்று கைசேதப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. நபி(ஸல்) அவர்களால் “பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்” என்று தெளிவாக இனம் காட்டப்பட்டவை, நாம் நினைப்பது போல் கடிகாரம் கட்டுவதோ கான்கிரீட், கட்டிடத்தில் வசிப்பதோ, பிளேனில் பறப்பதோ அல்ல. மார்க்கத்தில் நன்மை கிடைக்கும் என்ற நோக்கத்தோடு நபி(ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத அமல்களைச் செய்வதும், அதிகப்படுத்துவதும் தான் என்பதை இந்த முஸ்லிம் சமுதாயம் என்று புரிந்து கொள்ளப் போகிறதோ தெரியவில்லை. அதுவரை முஸ்லிம்களுக்கு விமோசனமும் இல்லை. கீழே குறிப்பிடப்படும் ஆதாரப்புர்வமான ஹதீஸ்களை நன்கு நோட்டமிட்டு நன்மை என்று மார்க்கத்தில் அதிகப்படுத்தலாமா” என்பதை ஆராய்ந்து பாருங்கள்.
ஒரு காட்டரபி நபி(ஸல்) அவர்களிடம் வந்து உளூவின் விவரத்தைக் கேட்டார். அப்பொது நபி(ஸல்) அவர்கள் மும்மூன்று முறைகளாக உளூச் செய்து காட்டி, “இவ்விதமாகத்தான் உளூச் செய்ய வேண்டும்” என்று கூறி, பின்னர் “எவர் இதைவிட அதிகமாகச் செய்கிறாரோ, அவர் நிச்சயமாகத் தீமையைச் செய்தவராகவும், அளவு மீறியவராகவும், அநியாயம் செய்பவராசவும் ஆவார்’” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரழி)
நூல் : அபூதாவூது, நஸயீ
நீண்டதொரு ஹதீஸின் இடையில், “நற்யெல்களில் எனக்கு மாறுசெய்வதில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் நபித் தோழர்களிடம் உறுதிப்பிரமாணம் வாங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: உபாதா, இப்னு ஸாமித்(ரழி)
நூல்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, திர்மிதி, நஸயீ
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்களிடம்,”உங்கள் தந்தையாரிடம் என் தந்தை என்ன கூறினார்கள் என்பதை தாங்கள் அறிவீர்களா?” என்று ஆரம்பிக்கும் மற்றொரு நீண்ட ஹதீஸில், இறுதியில் அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! மெய்யாகவே நாம் நபி(ஸல்) அவர்களுடன் செய்தவை அனைத்தும் நமக்கும் பலன் அளிக்க அப்படியே இருந்து, அவர்களுக்குப் பின்னர் நாம் செய்த எல்லாச் செயல்களும் நம்மை வேதனையை விட்டும் காக்க முழுக்க முழுக்க போதுமானவையாக இருந்துவிடாதா என நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபுர்தா ஆமிர் இப்னு அபீமுஸா
ஆதார நூல் : புகாரி
நபி(ஸல்) அவர்கள் செய்ததற்குமேல் செய்ததை உமர்(ரழி) அவர்கள் எந்த அளவு பயந்துள்ளனர் என்பதை இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. இந்த நிலையில், அவர்கள் 20 ரக்அத்துகள் தொழுதார்கள் என்பது சரிதானா என்பது சிந்தனைக்குரியது.
“எவரும் நம் மார்க்கத்தில், மார்க்கத்தில் இல்லாதவற்றைப் புதிதாக உண்டாக்கினால், அவை மறுக்கப்பட வேண்டியவையாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி)
ஆதார நூல் : புகாரி,முஸ்லிம்
நபி(ஸல்) அவர்களின் மனைவியின் இல்லத்திற்கு மூவர் சென்று நபி(ஸல்) அவர்களின் வணக்க முறையைப்பற்றி அவர்களிடம் விசாரித்தனர். அதற்கு விடையளிக்கப்பட்டபோது அவாகள் நபி(ஸல்) அவர்களின் வணக்கத்தை மிகக் குறைவாக மதிப்பிட்டு, “நாம் அவர்களுடன் சமமாக வணங்க எவ்விதம் சாலும்? அவர்களுடைய முன்பின் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு இருக்கின்றனவே” என்று தம் மனதிற்குள் எண்ணிக்கொண்டனர், இப்போது அவர்களில் ஒருவர், “நான் நாள் தோறும் இரவு முழுவதும் தொழுது வருவேன்” என்றார். மற்றொருவர் ” நான் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பேன், நோன்பின்றி ஒரு நாளும் கழிக்க மாட்டேன் என்றார்” மூன்றாமவர், “நான் ஒருபோதும் மணமுடிக்க மாட்டேன், பெண்களை விட்டும் ஒதுங்கி இருப்பேன்” என்றார். இதற்குள் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்து விட்டார்கள்.”நீங்கள் தாமா இன்ன விதமாகவெல்லாம் கூறிக்கொண்டிருந்தீர்கள்?” என்று வினவி விட்டு கூறினர். “அறிந்து கொள்ளுங்கள் இறைவன் மீது ஆணையாக, நான் உங்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவனாகவும், மிகவும் தூய்மையானவனாகவும் இருக்கிறேன், தொழவும் செய்கிறேன் -தூங்கவும் செய்கிறேன். திருமணமும் செய்துள்ளேன். எனவே எவரேனும் என் வழியைப் புறக்கணிப்பின் அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று அருளிச் செய்தனர்.
அறிவிப்பவர்: அனஸ்(ரழி) ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி
மக்காமா நகரம் வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அங்கு சென்றனர். “குராவுல் கமீம்” என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு இருந்தார்கள். பின்னர், நபி(ஸல்) அவர்கள் ஒரு கோப்பை தண்ணீர் கொணரச் செய்து அனைவரும் பாாக்கும் அளவுக்கு கோப்பையை உயாத்தி, மக்களும் அதைக் கண்ணுற்ற பின் அதனைப் பருகினர். அதன்பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “அத்தகையோர் பாவிகளே, அத்தகையோர் பாவிகளே” என்று கூறினர்.
அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி) ஆதார நூல்கள் : முஸ்லிம், திர்மிதி
இந்த ஹதீஸ்களை எல்லாம் பார்வையிட்டபின்னரும், நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒரு அமல் இருக்கிறது என்று நம்புகின்றவர்கள், “நிச்சயமாக ஷைத்தானின் வலையில் சிக்குண்டிருக்கிறார்கள்” என்பதில் எவ்வித ஐயதும் இருக்க முடியாது. இதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் மீது அவர்கள் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை முழுமையாகக் கற்றுத்தரவில்லை, மறைத்து விட்டார்கள், சொன்னதைச் செய்து காட்டவில்லை, தான் செய்யாததை மக்களுக்கு உபதேசித்து இருக்கிறார்கள், இப்படிப்பட்ட பல குற்றச்சாட்டுகளை நபி(ஸல்) அவர்கள் மீது, தாங்கள் அதிகமாகச் செய்யும் செயல்களைக் கொண்டு சுமத்துகிறவர்கள், எப்படி நேர்வழி நடக்கக்கூடியவர்களாக இருக்க முடியும்?
நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை நிறைவாகக் கற்றுத்தந்து விட்டார்கள், எதனையும் மறைக்கவில்லை, சொன்னதையே செய்து காட்டினாாகள், குர்ஆனின் வாழ்க்கையை முழுமையாக பிரதிபலித்தார்கள் என்று பூரணமாக நம்புகிறவர்கள், நபி(ஸல்) அவர்கள் செய்வதற்கு மேல் ஒரு அணுவத்தனையையும் நன்மை என்று ஒரு போதும் செய்ய மாட்டார்கள். தொழுகையாக இருக்கட்டும், திக்ராக இருக்கட்டும், எதுவாக இருக்கட்டும் நபி(ஸல்) அவர்கள் எதை எப்படி எந்த அளவு செய்து காட்டினார்களோ அதை அப்படியே அந்த அளவு மட்டுமே செய்வது கொண்டு திருப்தி அடைவார்கள். அதுவே பூரணமாக மார்க்கமென்று உறுதியாக நம்புவார்கள். அல்லாஹ்(ஜல்) அந்த நல்ல கூட்டத்தில் நம்மையும் இணைத்து வைப்பானாக. ஆமீன்.
மார்க்கத்தில் அதிகப்படுத்துதல் ஏன் ஏற்பட்டது?
மார்க்கத்தில் அதிகப்படுத்துதல் ஏன் ஏற்பட்டது என்று ஆராயும்போது ஓர் உண்மை தெளிவாகின்றது. மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்டவர்களின் சதியே இது என்று புலப்படுகிறது.அரசு அலுவலகத்தில் ஒருவருக்கு ஒரு வேலை, ஆபிஸர் ஒரு கையைழுத்தைத்தான் போட வேண்டும். ஆனால், ஏதோ காரணங்களைச் சொல்லி நாளை வா, நாளை வா என்று அலைய விடுகிறார். அந்த ஒருவரக்கு சிரமமாகத் தெரிகின்றது பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்டுகிறார். ஆபிஸர் உடனே கையைழுத்துப்போட்டு கொடுத்து விடுகிறாா. ஆபிஸர் அலையவிட்டு சிரமத்தைக் கொடுத்ததன் நோக்கம் புரிகிறதா! உடனே கையைழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டால், ஆபிஸருக்கு ஆதாயம் இல்லை. அவர் ஆதாயத்திற்காக எளிதான வேலையைக் கஷ்டமானதாக் காட்டுகிறார்.
இதேபோல், மார்க்கம் உள்ளது உள்ளபடி இருந்தால், முஸ்லிம்கள் அனைவருக்கும் கடைபிடிக்க எளிதாக இருக்கும். முஸ்லிம்கள் அனைவரும் மார்க்கத்தை எளிதாகக் கடைபிடித்தால், இந்த இடைத்தரகர்களுக்கு ஆதாயம் இல்லாமல் போய்விடும். இவர்களுக்கு ஆதாயம் கிடைப்பதாக இருக்க வேண்டுமானால், மார்க்கம் மக்களுக்கு கஷ்டமானதாகத் தோன்ற வேண்டும். அப்படியானால் தான், குறுக்கு வழியில் நன்மைகளை அடைந்து கொள்ள இந்த இடைத்தரகர்களை நாடுவார்கள். ஆக, தங்கள் உலக ஆதாயத்தைக் கருதி, இந்த இடைத்தரகர்கள் மார்க்கத்தைக் கடைபிடிப்பது மிகவும் கஷ்டம் என்று அப்பாவி முஸ்லிம்களை நம்ப வைத்து விட்டார்கள். எளிதான தொழுகையைக் கஷ்டமானதாகக் காட்டி, முஸ்லிம்களில் பெரும்பாலானோரைத் தொழாதவர்களாக ஆக்கி, தொழாதவர்களும் முஸ்லிம்களாக இருக்க முடியும் என்று குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாற்றமாக சட்டமும் அமைத்துக் கொண்டார்கள்.
“தொழாதவனுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை” என்ற ஹதீஸை உள்ளது உள்ளபடி சொல்லிவிட்டால், யாரும்தொழாமல் இருக்க போவதில்லை. தொழாத முஸ்லிம் இல்லை என்றால் இநந்த இடைத்தரகர்கள் மார்க்கத்தில் இல்லாத கத்தம் – பாத்திஹா, கபுரு சடங்குகள், மீலாது, மெளலூது, புருடா இப்படிப்பட்ட சடங்குகளை இஸ்லாத்தின் பேரால் பிழைப்பு நடத்த முடியாது. பெயரளவில் முஸ்லிம் என்று இருந்துக் கொண்டு. அவர்களது வலையில் சிக்கி இவர்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்க ஒரு பெருங்கூட்டம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே மார்க்கத்தில் இல்லாததை எல்லாம் உள்ளது என்று அதிகப்படுத்தி எளிதான மார்க்கத்தைக் கஷ்டமானது என்று அப்பாவி முஸ்லிம்களை நம்ப வைத்து இருக்கிறார்கள். இவர்களின் இந்த வேஷங்களைக் கலைக்கவே, “நஜாத்” பவனி வர ஆரம்பித்துள்ளது.
ரமழான் மாதம் சிறிது நோட்டமிட்டுப் பாருங்கள். மூவாயிரம் தர வேண்டும். இரண்டாயிரம் தர வேண்டும். ஆயிரமாவது தர வேண்டும் அப்போது தான் தொழ வைக்க முடியும் என்பது போன்ற பேரங்கள் நாடெங்கும் நடை பெறுவதைக் காண்கிறோம். காணலாம்?
ஆம்! குர்ஆனின் வசனங்களுக்கு மாற்றமாகவே குர்ஆன் விலை பேசப்படும். அல்லாஹ்வுக்காகத் தொழ வைப்பதற்கு இந்த இழிவான பேரமா? என்று எப்போதாவது அவர்களில் யாராவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? அப்பாவி முஸ்லிம்களை இந்தப் போலி ஆலிம்கள் ஏமாற்றுகின்றார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா? முஸ்லிம்களே சிந்தியுங்கள் .
முடிவுரை
உண்மையான எளிதான மார்க்க அனுஷ்டானங்களைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அனைத்தையும் தெளிவாகப் படித்து விட்டு ” இது காலம் வரை இருந்த அறிஞர்கள் எல்லாம் வழி கேடர்களா? புதிதாக நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா? என்று குறைஷிக்காபிர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை நம் முஸ்லிம் சகோதரர்கள் கேட்க மாட்டார்கள் என்று நம்பிக்கை வைக்கிறோம்.
அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின் பற்றுங்கள், என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல!) நாங்கள் எங்கள் மூதாாயர்கள் எதில் கண்டோமோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள், அவர்களை ஷைத்தான் கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பின் பக்கம் அழைத்தாலுமா? (பின்பற்றுவார்கள்?) அல்குர்ஆன் (31: 21) இந்த நிலை முஸ்லிம்களுக்கு வேண்டாம்.
குர்ஆன் – ஹதீஸுக்கு முரண்பட்ட வணக்க வழிபாடுகள் குருட்டு நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டு, குர்ஆன் – ஹதீஸைக் கொண்டு நிலைநாட்டப்பட்ட உண்மையான இஸ்லாம் மார்க்கத்தை மட்டும் பின்பற்றி, அல்லாஹ்(ஜல்)வின் அருள் பெற முன் வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றோம்.
“எங்கள் ரப்பே! உள்ளதை உள்ளபடி விளங்கி
உண்மை இஸ்லாம் மார்க்கத்தைக் கடைபிடிக்கும்
உண்மை முஸ்லிமாக நாங்கள் வாழ்ந்து,
உனது பொருத்தத்தைப் பெற்று ஈருலகிலும் “நஜாத்” அடைய
அருள் புரிவாயாக!” ஆமீன்.
அந்நஜாத்: ஜுலை, 1986
0 comments:
Post a Comment