நாம் எல்லோரும் மரணிக்கக்கூடியவர்கள். மறுமை நாள் ஒன்று உள்ளது. அதிலே நாம் எல்லோரும் எழுப்பப்படக்கூடியவர்கள். அந்நாளில் உலகில் வாழ்ந்து மரணித்த அனைவரும் எழுப்பப்படுவார்கள். அனைவரிடமும் அல்லாஹ்வின் விசாரணை நடைபெறும். அவனிடத்திலிருந்து எவரும் தப்பிவிடமுடியாது.
அவன் யார்? அணுவளவு நன்மை செய்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவுமாட்டான். அணுவளவு தீமை செய்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவுமாட்டான். யாரெல்லாம் இவ்வுலகில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து மரணித்தார்களோ அவர்களுக்கு அங்கே மிகப் பெரிய வெற்றியுள்ளது. யாரெல்லாம் அவனுடைய கட்டளையை மீறி நடந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ்வின் மிகப் பெரிய வேதனை உள்ளது.
இஸ்லாம் ஒரு பூரணமான மார்க்கமாகும். இம்மார்க்கத்தில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்பது அல்லாஹ் எமக்கு விதித்த கட்டளை. 'நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!' (அல்குர்ஆன் 8:1) யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து மரணிக்கின்றார்களோ அவர்கள் மறுமை நாளில் நஷ்டமடைந்தவர்களாவார்கள்.
இஸ்லாம் மார்க்கம் ஒருவர் எச்சித் துப்புவதிலிருந்து ஆட்சி செய்யும் வரை அனைத்திற்கும் வழிகாட்டுகின்றது. ஒருவர் இவ்வுலகில் ஏதாவது ஒரு காரியத்தை செய்வதென்றாலும் அது அல்லாஹ்வுடைய பேச்சான அல்குர்ஆனுக்கும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரமான ஹதீஸுக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும். அது அல்லாமல் அவ்லியாக்கள், ஷுஹதாக்கள், நாதாக்கள், பெரியோர்கள் போன்றோர் சொல்லியிருக்கின்றார்கள், செய்திருக்கின்றார்கள், அங்கீகரித்திருக்கின்றார்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டு எந்தவொரு காரியத்தையும் யாரும் செய்யக்கூடாது.
எந்தவொன்றாக இருந்தாலும் அது குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் உட்படுத்திப் பார்க்கவேண்டும் என்பதை அல்லாஹ்வே நமக்கு தெளிவுபடுத்துகின்றான். 'ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்குமுமாகும்.'(அல்குர்ஆன் 4:59)
ஒரு விஷயத்தை ஒரு பெரியார் சொல்லிவிட்டார் என்று மௌலவிமார்கள்(?) கூறினால் அதனை மார்க்கம் என நினைத்து தம் வாழ்வில் செயற்படுத்துகின்ற அறியாத மக்கள் நம்மில் இருக்கின்றார்கள். இம்மக்களிடத்தில் இஸ்லாம் மார்க்கத்தில் இல்லாத, மார்க்கம் தடை செய்த எத்தனை அநாச்சாரங்களை மார்க்கம் என்ற பெயரில் எத்திவைத்து வருகின்றார்கள். இதற்கு காரணம் என்ன என்றால் தங்களின் பொருளாதாரத்தையும் வயிறுகளையும் வளர்ப்பதற்காகவே தவிர வேறொன்றுமில்லை. இது உண்மை என்பதற்கு இவர்கள் மார்க்கம் என்று செய்யும் காரியங்களை ஒவ்வொரும் நடுநி;லையாக சிந்தித்துப் பார்த்தாலே எல்லோரும் இப்போலி மௌலவிமார்களை இனங்கண்டு கொள்ளலாம்.
கத்தம்-பாத்திஹா,
கப்ர் வழிபாடு,
ஸுப்ஹான மௌலிது,
முஹைதீன் மௌலிது,
குடி மௌலிது,
பத்ர் மௌலிது,
நடமௌலிது,
மீலாத் விழா,
கொடியேற்றவிழா
இன்னும் இதுபோன்ற ஏராளமானவைகள் இருக்கின்றன. இவையனைத்தையும் நாம் பார்த்தால் இவையனைத்தும் மௌலவிமார்களின்(?) மடிகள் நிரம்புகின்றவையாகத்தான் இருக்கின்றன. இஸ்லாமிய உறவுகளே! சிந்தியுங்கள்!
உதாரணத்துக்கு, ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் வீட்டுக்குச் சென்று அவருடைய உறவினர்களிடம் கத்தம் ஓதவேண்டும் என்று சொல்லி இருட்டுக்கத்தம், 3ம் நாள் கத்தம், 7ம் நாள் கத்தம், 40ம் நாள் கத்தம், வருஷக் கத்தம் என்றெல்லாம் சொல்லி அந்நாட்களில் வயிறுவளர்க்கும் மௌலவிப்(?)பட்டாளம் மரணித்தவரின் வீட்டுக்குச்சென்று தங்களின் மடிகளை நிரப்புவதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.